196
பத்திரிகைக் குறிப்பு: அனைத்து முற்போக்கு சக்திகளையும் எழுக தமிழ் பேரணியில் கலந்து கொள்ளுமாறு தமிழ் சிவில் சமூக அமையம் அறைகூவல்
மட்டக்களப்பு நகரில் எதிர்வரும் சனவரி 21ஆம் திகதி நடைபெறவுள்ள எழுக தமிழ் நிகழ்வுக்கு தமிழ் சிவில் சமூக அமையம் தனது பூரண ஆதரவை வழங்குகின்றது.
- அரசியல் தீர்வு விடயத்திலும் பொறுப்புக் கூறல் விடயத்திலும் ‘நல்லாட்சி’ அரசாங்கம் தான் வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து முழுமையாக விலகி வரும் சூழலில்,
- குறிப்பாக சனாதிபதியும் பிரதமரும் இவ்விடயங்களில் முந்தைய அரசாங்கத்தின் போக்கில் இருந்து தாம் மாறுபட்டவர்கள் அல்ல என்பதை உறுதிப்படுத்தி வரும் சூழலில்,
- கிழக்கில் தொடர்ந்தும் அதிகரித்து வரும் சிங்கள பௌத்த மேலாதிக்கவாத ஆக்கரமிப்பை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களே வெளிப்படையாக ஆதரித்து வரும் சூழலில்,
தமிழர்கள் தமது நிலைப்பாட்டை மீண்டும் தெளிவாக வெளிப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என நாம் கருதுகிறோம் .
சனநாயக தேசிய அணிதிரள்வின் மூலம் தீர்க்கமாக இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் நாம் எமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்த வேண்டிய இக்கட்டான, அவசர அவசிய தேவை எழுந்துள்ளது.
இத்தகைய அணிதிரள்வானது வடக்கு-கிழக்கு தமிழ் மக்கள் இப்போதும் ஒரு தேசமாக ஒன்றிணைந்து நிற்கின்றோம் என எடுத்துக் காட்டுவதற்கும் முக்கியமானதாகும்.
எழுக தமிழ்ப் பேரணி கிழக்கு வாழ் முஸ்லிம் மக்களுக்கோ அல்லது சிங்கள மக்களுக்கோ எதிரான ஒன்றல்ல எனத் திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். இப்பேரணி தமிழர்கள் தமது சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையில் தெளிவாக நிற்கின்றார்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்கான பேரணியே அன்றி எவருக்கும் எதிரானதல்ல. முஸ்லிம்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளுக்கு தமிழ் சிவில் சமூக அமையம் ஆதரவு அளித்து வந்துள்ளது. தொடர்ந்து ஆதரவும் வழங்கும்.
கட்சி வேறுபாடுகளைத் தாண்டி தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தில் தம்மைப் பங்காளர்களாகக் கருதும் அனைவரையும் எழுக தமிழில் பங்குபற்றுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
அனைத்து முற்போக்கு சக்திகளையும் இன வேறுபாடுகளையும் கடந்து எழுக தமிழ் பேரணியில் பங்கு கொள்ள அறைகூவல் விடுக்கின்றோம்.
குமாரவடிவேல் குருபரன் மற்றும் எழில் ராஜன்
இணைப் பேச்சாளர்கள்
தமிழ் சிவில் சமூக அமையம்
Spread the love