165
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உயிரை மாய்க்க முயற்சித்த போதைப்பொருள் சந்தேக நபர் ஒருவர் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பித்துள்ளார். அவர் வைத்தியசாலைக்கு அண்மையாக உள்ள கூலர் நிறுவனம் ஒன்றில் தரித்து நின்ற படிரக வாகனம் ஒன்றை எடுத்துத் தப்பிச் சென்றதுடன், அந்த வாகனத்தை கல்வியங்காடு பகுதியில் கைவிட்டு தப்பித்துள்ளார்.
எனினும் சந்தேக நபர் யாழ்ப்பாணம் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் மீளவும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்றது. படி ரக வாகனத்தை காவல்துறையினர் இன்று காலை மீட்டனர்.
சம்பவத்தில் யாழ்ப்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்த போதைப்பொருள் குற்றச்சாட்டில் உள்ள விளக்கமறியல் சந்தேக நபரே தப்பித்துள்ளார். யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் சந்தேக நபர் நேற்று தூக்கிட்டு உயிரை மாய்க்க முற்பட்டுள்ளார். அதனைக் கண்ட சிறை உத்தியோகத்தர்கள் தடுத்துள்ளனர். எனினும் சந்தேக நபர் மூச்சடங்கிய நிலையில் காணப்பட்டதால் உடனடியாகவே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் சேர்த்துள்ளனர்.
போதனா வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் சிறைக்காவலர்களின் பாதுகாப்பை மீறி சந்தேக நபர் தப்பித்துள்ளார்.அங்கிருந்து சென்று அண்மையிலுள்ள கூலர் நிறுவனத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாடகை படி வாகனத்தை எடுத்துக் கொண்டு சந்தேக நபர் தப்பித்துள்ளார். அந்த வாகனத்தில் உள்ள இலக்கத்துக்கு தொலைபேசி அழைப்பு வந்த நிலையில் யாழ்ப்பாணம் காவல்துறையினருக்கு வாகன உரிமையாளரால் அறிவிக்கப்பட்டது.
அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் அந்த படி வாகனத்தை கல்வியங்காடு பகுதியில் வைத்து கோப்பாய் பொலிஸார் காவல்துறையினர் மீட்டெடுத்து யாழ்ப்பாணம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்த நிலையில் சந்தேக நபர் மீளவும் கைது செய்யப்பட்டார். சம்பவத்தில் சந்தேக நபரால் எடுத்துச் செல்லப்பட்ட படி வாகனம் நாளை நீதிமன்றில் ஒப்படைக்ககப்படும் என்று யாழ்ப்பாணம் காவல்துறையினர் தெரிவித்தனர். #யாழ்ப்பாணம் #சிறைச்சாலை #கைதி
Spread the love