ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் தொடர்பாக மாலை 6 மணிக்குள் அறிவிக்க வேண்டும் எனவும் இல்லாவிட்டால் 50 தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி வலக வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகளுக்கு மதுரை அலங்காநல்லூர் கிராம மக்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தமிழ்நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில் இவ்வாறு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் நேற்றிலிருந்து போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.; இந்த போராட்டத்திற்கு முன்னணி நடிகர்கள் பலரும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றதோடு பல்வேறு மாவட்டங்களிலும் கல்லூரி மாணவர்கள் தங்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தினை மாலை 6 மணிக்குள் இயற்றிட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மதுரை அலங்காநல்லூர் கிராம மக்கள் கெடு விதித்துள்ளனர். அலங்காநல்லூரில் நடைபெற்ற கிராம பொதுக்கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அவசர சட்டம் இயற்றப்படவில்லையெனில் இந்த போராட்டம் காலவரையற்ற போராட்டமாக மாறும் என அலங்காநல்லூர் கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில் இப்பிரச்சினையில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி தலையிட மறுப்பு தெரிவித்துள்ளது.
போராட்டகாரர்களுக்கு இடையூறு செய்யும் வகையில் மெரினா கடற்கரை பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தண்ணீர்கூட வழங்கப்படவில்லை என வழக்கறிஞர் கே.பாலு என்பவர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்த போதே நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது.