சும்மா இருக்கிறா என்று சொல்லப்படும் அம்மா குறித்து… இரா.சுலக்ஷனா.
‘இன்பத்தை கருவாக்கினாள் பெண்; ;
உலகத்தில் மனிதனை உருவாக்கினாள் பெண்’
தாய்மை என்ற உணர்வை போற்றும் வகையில், உலகம் முழுவதும் வௌ;வேறு தினங்களில், உலக அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்கா உட்பட உலக நாடுகளில் 46 நாடுகள் வருடந் தோறும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை உலக அன்னையர் தினமாகக் கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உலகளவில், பன்மைத்துவ மொழிப் பரப்பில், தாய்மை என்ற உணர்வை, அம்மா என்ற ஒற்றை குவிமையச் சொல்லாகச் சுட்டி நிற்கிறோம். ஆனால், இந்த ‘அம்மா என்ன செய்கிறாள்?’ என்று கேட்டமாத்திரத்தில், ‘சும்மா இருக்கிறாள்’ என மிகச் சாதாரணமாக பதிலளித்து விடவும் செய்கிறோம்.
‘சும்மா இருத்தல்’ என்பது, வேலை ஒன்றும் செய்யாமல் இருத்தல், களைப்பாறி இருத்தல், வீணே இருத்தல் என்று என்னளவில், ‘சும்மா’ பன்மைத்துவமுடைய சொல். ஆக, ‘அம்மா சும்மா இருக்கிறா!’ என்ற பதில் எத்துனை பொறுத்தப்பாடுடையது?.
காலையில் எழந்தது முதல், இரவு படுக்கைக்குச் செல்லும் வரை, இயந்திரத்தை விடவும் மிக அழுத்தத் திருத்தமாக வேலைகளை செவ்வனே செய்து முடிக்கும் பெண்ணவளை, ‘சும்மா இருக்கிறா!’ என சர்வசாதாரணமாகச் சுட்டிவிடவும் செய்கிறோம்.
நமது பொது புத்தியில், ஊதியம் பெற்றுச் செய்யப்படுவது தான் ‘வேலை’ என்ற சிந்தனை, காலாதிகாலமாகப் பதிய வைக்கப்பட்டிருப்பதால், அம்மா செய்யும் வேலைகள் எல்லாம், சும்மா என்ற கணக்கில் போய்விடுகிறது.
‘அம்மா சும்மா இருக்கிறா’ என்ற மிகச்சாதாரண, அதேவேளை பரவலான பிரயோகம், ஆனால் ஆழ்ந்த சிந்தனைக்குரிய ஒரு விடயம் கலாநிதி. சி. ஜெயசங்கரின் ‘அம்மா சும்மா இருக்கிறா’ குறுநாடகவழி கேள்விக்கிடமாக்கப்படுகிறது.
இந்த 21 ஆம் நூற்றாண்டில், பெண் விடுதலை குறித்த சிந்தனைகள், பல்வேறு பரிமாணங்களில், பேசப்பட்டுவருகின்ற நிலையில், வீட்டு சமையலறையில், மௌனித்து விடப்பட்டிருக்கும் அம்மா. ஆனால், சும்மா இருப்பதாக ஓங்கி ஒலிக்கும் அச்சுபிசகாத வாதம் கேள்விக்கிடமாக்கப்படலும், அதன் வழி ஒரு சமுக விடுதலையை சாத்தியபாடாக்கலும் என்ற பிரக்ஞை நிலையில், ‘ அம்மா சும்மா இருக்கிறா’ குறுநாடகம் பிரவேசமாகிறது.
அம்மா சும்மா இருக்கிறா?! – கலாநிதி.சி. ஜெயசங்கர்
ஏன்டி குட்டி என்னடி குட்டி என்னாடி செய்தாய்
அம்மியடியில் கும்மியடித்தேன் சும்மாவா இருந்தேன்
ஏன்டி குட்டி என்னடி குட்டி என்னாடி செய்தாய்
ஆட்டுக் குட்டிக்கு ஆறுதல் பண்ணினேன் சும்மாவா இருந்தேன்.
( நாட்டார் பாடல்)
( என்ற பாடலைப் பாடிக்கொண்டு ஊர்வலமாக
வந்து சேர்தல், வட்டமாக ஆடி அசைதல்)
சங்குப்பித்தள
சருகுப்பித்தள
எங்கும் எப்பிடி ராஜகட்டளை
கேட்பியளோ?
சங்குப்பித்தள
சருகுப்பித்தள
எங்கும் எப்பிடி ராஜகட்டளை
பாப்பியளோ?
சங்குப்பித்தள
சருகுப்பித்தள
எங்கும் எப்பிடி ராஜகட்டளை
கேள்வியளுக்கு பதில் சொல்லுவியளோ?
ஆசிரியர்: உனது பெயர் என்ன?
மாணவன்: சிவக்குமார்
ஆசிரியர்: உனது அப்பாவின் பெயர் என்ன?
மாணவன்: கந்தசாமி
ஆசிரியர்: உனது அப்பாவின் தொழில் என்ன?
மாணவன்: தச்சுத் தொழில்
ஆசிரியர்: அம்மாவின் பெயர் என்ன?
மாணவன்: அன்னலச்சுமி
ஆசிரியர்: அம்மாவின் தொழில் என்ன?
மாணவன்: அம்மா வீட்டில் சும்மா இருக்கிறா!
————————————————————————-
ஒருவர்: அம்மா சும்மா இருக்கிறார் என்றால், காலையில
எழும்பின தொடக்கம். இரவு வரைக்கும் பாயில
குந்திக் கொண்டா இருக்கிறாவு?
ஒருவர்: இல்லாட்டி வாங்கில தூங்கிக் கொண்டா இருக்கிறாவு?
ஒருவர்: அப்பிடி இல்லாட்டால், கதிரையில இருந்து
காலாட்டிக் கொண்டா இருக்கிறாவு?
ஒருவர்: அம்மா, வீட்டில சும்மா இருக்கல்ல வேலை
செய்யிறாவு, அது எங்களுக்குத் தெரியும்.
ஒருவர்: சும்மா இருக்கல்ல எண்டு தெரிஞ்சா அப்ப ஏன் சும்மா
இருக்கிறா எண்டு சொல்லுறம்.
ஒருவர்: அதுதானே, வேலை செய்யிறாவு எண்டு
சொல்றதில்லை?
ஒருவர்: அம்மா என்ன சம்பளம் எடுக்கிறாவா?
ஒருவர்: அப்படியெண்டால் சம்பளம் எடுக்காத உழைப்புக்கு
மதிப்;பே இல்லையா?
ஒருவர்: அது அம்மாட கடமை தானே.
ஒருவர்: அம்மா அன்பு, பாசத்தில செய்யிறாவு.
ஒருவர்: அன்புக்கும் பாசத்துக்கும் கணக்குப் போட
முடியுமா?
ஒருவர்: அன்புக்கும், பாசத்துக்கும் கணக்குப்போட வேண்டாம்.
செய்யிற வேலைக்கு கணக்குப் போட்டுப் பாருங்க.
ஒருவர்: அம்மாட உழைப்புக்கு சம்பளம் குடுக்கிற எண்டா
எவ்வளவு குடுக்க வேணும்?!
( உரையாடல்…..)
ஒருவர்: இப்ப கணக்குப் பாத்து முடியல்லையா?
முடியாட்டி… எல்லாரும் உங்கட வீடுகள்ள
போயிருந்து நல்லா முடிவெடுங்க. சரியா?
சின்னப் பொண்ணாய் இருக்கும் போது
உலகம் தெரியல்ல எனக்கு எதுவும் புரியல்ல
பெண்கள்படும் வேதனைகள் அறிய முடியல்ல
அப்போது அறிய முடியல்ல
அம்மா வீட்டில் இருக்கும் போது
சும்மா இருக்கல்ல என் அம்மா
வீட்டில் இருக்கும் போது சும்மா இருக்கல்ல
கண்ணுக்குள் வைத்து எல்லாரையும் வளர்ப்பா
உணவும் செய்து கொடுப்பா
படிப்பும் சொல்லிக் கொடுப்பா
அம்மா செய்யும் வேலைக்கோ பெறுமதியில்லை ஆனா
அம்மா யாரும் வீட்டில சும்மா இருக்கல்ல – இது
( சின்னப் பொண்ணாய்)
நம் நாட்டிற்கு வருமானம் பெண்களால தான்
அபிவிருத்தி அதிகரிப்பதும் பெண்களால தான்
தோட்டத் தொழிலாளியாய்
பெண்களெல்லாம் உழைப்பதும்
ஆடைத் தொழிற்சாலையில்
அதிக பெண்கள் உழைப்பதும்
அவர்கள் படும் துன்பத்திற்கு அளவேயில்லை
ஆனா உழைப்பிற்கேற்ற
கூலியும் கிடைப்பதில்லை – இது
( சின்னப் பொண்ணாய்)
தம் அறிவினாலே உயர்ந்த பெண்கள்
எத்தனை பேருதான்
தம் அறிவினாலே உயர்ந்த பெண்கள்
எத்தனை பேருதான்
உறுதி கொண்ட பெண்களும்
உயர்ந்து நிற்கும் பெண்களும்
சிறந்த சமுதாயத்தை உருவாக்கும் பெண்களும்
இதை எல்லோரும் அறிந்து கொண்ட போதிலும்
இன்;னும் பெண்களையே
அடக்கி வைப்பதுமேனோ? – இது
( சின்னப் பொண்ணாய்)
( பாடல் – புவனராஜா விஜிகலா)
ஒருவர்: காசு குடுக்காட்டிலும் கணக்கைப் பாத்து வையுங்க.
அப்பதான் கருத்து மாறும். அப்பதான் அம்மா
சும்மா இருக்கிறா எண்டு சொல்ல மாட்டீங்க.
சங்குப்பித்தள
சருகுப்பித்தள
எங்கும் எப்பிடி ராஜகட்டளை
கேட்பியளோ?
சங்குப்பித்தள
சருகுப்பித்தள
எங்கும் எப்பிடி ராஜகட்டளை
பாப்பியளோ?
சங்குப்பித்தள
சருகுப்பித்தள
எங்கும் எப்பிடி ராஜகட்டளை
கேள்வியளுக்கு பதில் சொல்லுவியளோ?
1 comment
சிறந்த பதிவு அய்யா….