உரும்பிராய் கிழக்கு பகுதியில் சட்டத்துக்குப் புறம்பான முறையில் கசிப்பு காய்ச்சி விற்பனைக்காக நூதனமான முறையில் தென்னை மரத்தில் மறைத்து வைத்திருந்த ஒருவர் இன்று மாலை கோப்பாய் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உரும்பிராய் கிழக்கு பகுதியில் கசிப்பு காய்ச்சப் படுவதாக கோப்பாய் காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அந்தப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார் இறங்கினர்.
சந்தேகத்திற்குரிய வீட்டினை காவற்துறையினர் சோதனையிட்ட போது, அந்த வீட்டின் வளவினுள் பல குழிகள் காணப்பட்டுள்ளன.காவற்துறையினர் குழிகளை தோன்டிய போதிலும் எவையும் கிடைக்கவில்லை.
எனினும் தொடர் தேடுதலின் போது, தென்னை மரத்தில் நூதனமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கசிப்பு, கோடா மற்றும் உபகரணங்கள் ஆகியன காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் குடும்பத்தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 6 போத்தல் கசிப்பு 18 போத்தல் கோடா மற்றும் கசிப்பு காய்ச்சுவதற்கான உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை, அயல் வீட்டில் இருந்து 2 போத்தல் கசிப்பினை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிறிதொருவர் கைது செய்யப்பட்டார்.
மேலும் கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இருவரிடமிருந்து கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது. மற்றைய நபரிடம் இருந்து 2 கிராம் கேரள கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர்
டயகம பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்து, விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது…
நுவரெலியா, டயகம பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்து, விற்பனையில் ஈடுபட்ட மூவர் டயகம காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் இதன்படி டயகம கிழக்கு தோட்டப்பகுதியிலுள்ள விடுதியொன்றில் மிகவும் சூட்சுமமான முறையில் சட்டவிரோதமாக பாரியளவில் கசிப்பு உற்பத்தி செய்து அதனை விற்பனை செய்துவந்த ஒருவர் நேற்றிரவு (9) பிடிக்கப்பட்டார்.
அத்துடன் இச்சுற்றிவளைப்பின்போது 7 ஆயிரத்து 500 மில்லிலீற்றர் கசிப்பு, ஒரு லட்சத்து 80 ஆயிரம் மில்லிலீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மூடப்பட்டிருந்த விடுதிக்குள் நூதன முறையில் கசிப்பு உற்பத்திசெய்து, ஒரு போத்தல் 2 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
அத்துடன், டயகம முதலாம் பிரிவு தோட்டத்தில் இன்று மதியம் சட்டவிரோதமாக கசிப்பு காய்ச்சி விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டனர். ஒரு லட்சத்து 20 ஆயிரம் மில்லிலீற்றர் கோடாவும் கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.
நாட்டிலுள்ள அனைத்து மதுபான நிலையங்களும் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ள நிலையில் தோட்டத்தொழிலாளர்களை இலக்குவைத்தே இத்தகைய கள்ளச்சாராய உற்பத்தி நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் பெருந்தோட்டப்பகுதிகளில் இது சம்பந்தமாக பல கைதுகள் இடம்பெற்றுள்ளன.
டயகமவில் கைது செய்யப்பட்ட மூவரும் நுவரெலியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என டயகம காவற்துறையினர் தெரிவித்தனர்.