தாராளவாத சந்தைப் பொருளாதாரம் நடைமுறையில் இருந்து வரும் ஒரு நாட்டில் தொழிற்சங்கங்களின் தேவை மிகவும் முக்கியமானதாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. சனநாயக கட்டமைப்பின் மிகமுக்கியமான அங்கங்களுள் ஒன்றாக தொழிற்சங்கங்கள் கொள்ளப்படுகின்றன. ஒரு நாட்டின் அரசியல் திட்டத்தின் நெறிமுறைகளைப் பாதுகாத்து அதனைச் சரியான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கான அழுத்தங்களை அதற்கான தேவைகள் ஏற்படும் போது வழங்கி நாட்டின் சனநாயக ரீதியான குடியாட்சியை வலுப்படுத்தும் அமுக்கக் குழுக்களாக இந்தத்தொழிற் சங்கங்கள் இயங்க வேண்டியதன் அவசியம் மக்கள்மைய ஆட்சியியலை வலியுறுத்தும் ஆய்வறிவாளர்களால் விதந்துரைக்கப்படுகின்றன.
குறிப்பாக இன்றைய காலத்தில் பல்தேசிய நிறுவனங்களுக்குச் சாதகமான திறந்த பொருளாதாரத்திற்குரிய சட்ட ஏற்பாடுகள் அரசியல் திட்டத்தில் புகுத்தப்படும் போது அதனை இனங்கண்டு அதனால் உருவாகக்கூடிய மக்கள் விரோதமான பொது நலன்களுக்குபாதகமான பின்விளைவுகளைப்பகுத்தாராய்ந்து அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில்ஈடுபட வேண்டியது தொழிற்சங்கங்களின் தலையாய கடமையாகின்றது. குறிப்பாக உள்நாட்டுத் தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பிற்கான உத்தரவாதத்தை உறுதிப்படுத்துதலும், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியதும் தொழிற்சங்கங்களின் மிகமுக்கியமான பணியாகவுள்ளது. தாராளவாத சனநாயக கட்டமைப்பில் அரசாங்கமானது பொதுநல தாபனமாக இயங்குவதற்கான ஊக்கிகளுள் முதன்மையானதாக தொழிற்சங்கங்கள் அமைய வேண்டியது அடிப்படையாகும். தொழிற்சங்கங்கள் பலவீனமாக இருக்கும் நாட்டில் அரசாங்கம் பொதுநலனுக்கான தனது கடமைகளையும் பொறுப்புக்களையும் தனியாரிடம் ஒப்படைக்க முயல்வது இலகுவாக நடந்தேறி வருகின்றது.
தத்தமது துறை சார்ந்த கடமைகளையும், பொறுப்புக்களையும் சரியாகவும் செம்மையாகவும் நிறைவேற்றிக்கொண்டு தமது உரிமைகளையும், சலுகைகளையும் பாதுகாக்கும் அமைப்பாக இயங்குவதே சரியான தொழிற்சங்கத்தின் இலட்சணமாக அமைந்திருக்கும்.
வௌ;வேறு துறைகள் சார்ந்து பல்வேறு தொழிற்சங்கங்கள் இயங்கக்கூடிய வாய்ப்புக்கள் பெருகியுள்ள போதிலும் தொழிலாளர் நலன் எனும் பொதுமையில் இத்தகைய தொழிற்சங்கங்கள் தத்தமது வித்தியாசங்களைக் கடந்து ஒன்றிணைந்து ஓர் கூட்டமைப்பாக இயங்க வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும். சகோதர சங்கம் ஒன்று நியாயமாக போராடும் போது அதற்கு ஆதரவாக அழுத்தம் கொடுத்து நியாயமான கோரிக்கைகள் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் நிலைமைகளை இக்கூட்டுணர்வால் எளிதாக உருவாக்க முடியும். அதாவது எண்ணிக்கை ரீதியிலான பலம், பலவீனம் எனும் தன்மைகளைக் கடந்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அடைய இது வாய்ப்பளிக்கும். ஒன்றிணைந்த தொழிற்சங்க நடவடிக்கைகள் சரியாகவும் முறையாகவும் நடைமுறைப்படுத்தப்படும் போது ஒரு நாட்டின் குடியாட்சி வலுவானதாக இடம்பெறும் ஏது நிலைகள் வாய்க்கப்பெறும். பொதுநலனை உறுதிப்படுத்துதலும், தொழிலாளர்களின் உண்மையான பலத்தை அர்த்தமுள்ளதாக்குதலும் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களின் இயக்கத்தினாலேயேதான் சாத்தியமாக முடியும்.
பேரிடர் ஒன்று வரும் போது அத்தகைய பேரிடரை எதிர்கொண்டு முன்செல்வதற்கான பொறிமுறைகளை வகுத்து செயற்படும் வல்லமை தொழிற்சங்கங்களிடம் இருக்க வேண்டியது அவசியமாகின்றது. அதாவது மேலிருந்து வரும் கோரிக்கைகளையும், கட்டளைகளையும் எதிர்பார்த்துக் காத்திருந்து நிறைவேற்றும் அமைப்பாகவன்றி அத்தகைய கோரிக்கைகளும் கட்டளைகளும் வருவதற்கு முன்பாகவே தாம் எவ்வாறு தமது துறையினைச் சார்ந்து இந்தப் பேரிடர் காலத்தில் ஆக்கபூர்வமாக இயங்க முடியும் எனும் மாற்றுத் திட்டங்களை உருவாக்கி அவற்றை அரசாங்கத்திற்கு வழங்கக்கூடிய வலுவுள்ள அமைப்பாக தொழிற்சங்கங்கள் இயங்க வேண்டியது அவசியமாகும். இவ்வாறு இயங்கும் போது அரசாங்கத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் சுமுகமான நிலைமை வலுவாகவிருக்கும். இதைவிடுத்து மேலிருந்து கோரிக்கைகள் வருவதற்கு இடமளித்து விட்டு பின்னர் அதனை எதிர்ப்பதற்கு முற்படுவதால் முரண்பாடுகளும் சிக்கல் நிலைமைகளுமே அதிகரிக்கும். இதன்காரணமாக தொழிற்சங்கம் என்றால் அது எதிர்ப்புக்காட்டும் அமைப்பு எனும் பாதகமான புரிதல் பொதுப்புத்தியல் ஏற்படும் ஏது நிலைகள் அதிகரிக்கின்றன.
இலங்கையில் மிகப்பெரும்பாலும் பல்வேறு தொழிற்சங்கங்கள் மேலிருந்து கோரிக்கைகளையும், கட்டளைகளையும் எதிர்பார்க்கும் நிலைமையிலேயே இருக்கின்றமை துரதிருஸ்டவசமானது. அதுவும் ஒரு பேரிடர்க் காலத்தில் மிகவும் சிக்கலானது.
அருந்தலாக ஒரு சில தொழிற்சங்கங்களும், ஒரு சில ஆய்வறிவாளர்களும் மாத்திரமே அரசாங்கத்திற்கு சில முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளமையினைக் காண்கின்றோம். இவை உதிரிகளாக இருப்பதால் இவற்றின் தாக்கம் மிகவும் பலவீனமாகவே இருக்கிறது.
உதாரணமாக இலங்கையில் இயங்கும் கற்பித்தலுடன் தொடர்புடைய தொழிற்சங்கங்கள் எவையும் முறையாக எவ்வாறு இப்பேரிடர்க் காலத்தில் தமது கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் எனுந்திட்டத்தைத் தீட்டி அதனைத்தத்தமது துறைசார் அமைப்புக்களிடம் கையளிக்காமல் இருந்துவிட்டு துறைசார் அதிகாரங்களிலிருந்து திட்டங்கள் முன்வைக்கப்படும் போது அது தொடர்பாக தமது எதிர்வினைகளையாற்றுவது பொருத்தமானதா? எனுங்கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகவே அமைகிறது.
எனவே! ஒரு பேரிடர் வரும் போது அதனை எதிர்கொண்டு எவ்வாறு இயங்குவது எனும் மாற்றுத்திட்டங்களைக் கண்டறிந்து அதற்கான மாற்றுப் பொறிமுறைகளை வகுக்க வேண்டியது தொழிற்சங்கங்களின் தலையாய கடமையாகின்றது.
இவ்வாறு தொழிற்சங்கங்கள் இயங்காதபோது அரசாங்கமும்அதன் நிறுவனங்களும் திட்டமிடல் வேலைப்பழுவினைச் சுமக்க வேண்டி வருவதும் இதனால் மேலிருந்து கீழ்நோக்கி இயக்கப்படல் நியதியாக மாறுவதும் தவிர்க்க முடியாததாகிவிடும்.
ஆகவே! ஒரு நாட்டில் பேரிடர்க்காலத்தில் மக்கள் மையமான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான செயற்பாடுகளில் தொழிற்சங்கங்கள் துரிதமாக இயங்க வேண்டியது அவசியமாகின்றது. இதைவிடுத்து அரசியல் கட்சிகளின் உப அமைப்புக்களாக தொழிற்சங்கங்கள் இயங்க முற்படுவதால் எந்தவித தீர்வுகளையும் காண முடியாது.
இன்று கொரொனா பேரனர்த்தம் உலகின் பொருளாதாரத்தில் பெருந்தாக்கஞ் செலுத்தத் தொடங்கியுள்ள சூழலில் ஒரு நாட்டின் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களின் நிச்சயமற்ற எதிர்காலம் பற்றிய அச்சம் மேலெழும் நிலையில், தனியார் துறைகளில் தொழிலாளர் குறைப்புக்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படும் சூழலில் தொழிற்சங்கங்களின் வகிபாகம் மிகமுக்கியமானதாக அவதானிக்கப்படுகின்றது. அதாவதுஇவ்வளவு காலமும் இருந்துவந்த மொத்த உற்பத்தியின் அளவிற்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கையினைக் குறைத்ததன் பின்னர் மேற்கொள்ளப்படும் மொத்த உற்பத்தியின் அளவிற்கும் இடையேயுள்ள விகிதங்களைஆராய்ந்து உண்மைநிலைவரத்தைக் கண்டறிந்து கொள்வது அவசியமாகும். இதனூடாக சந்தர்ப்பம் பார்த்து வேலைவாய்ப்புக்களை வெட்டும் முதலாளித்துவ செயற்பாடுகளை இனங்கண்டு அவற்றைத் தடுத்து நிறுத்துகின்ற நடவடிக்கைகளில் தொழிற்சங்கங்கள் காரியமாற்றும் ஏதுநிலைகள் வலுவடைகின்றன.
ஒரு தாராளவாத சனநாயக அரசில் தனியார் துறையின் முதலீட்டுக்கான அனுமதியும் அனுசரணையும் என்பது உள்நாட்டு மனித வளத்தைப் பிரயோகிப்பதற்கான அரசின் பொதுநலச் செயற்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. எனவே ஒரு தாராளவாத சனநாயக அரசின் ஆளுகையில் இயங்கும் தனியார் தொழில் நிறுவனங்கள் பேரிடர் காலத்தில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளும் போது முதலில் தொழிலாளர்களைக் குறைப்பது என்பது அந்நாட்டின் சனநாயக கட்டமைப்பை மீறுகின்ற நடவடிக்கையாகவேகருதப்படுகின்றது. எனவே! பேரிடரைக் காரணங்காட்டி தொழிலாளர்களைக் குறைத்து சுரண்டலை இரட்டிப்பாக்கும் பெரும்பாலான தனியார் துறைகளின் உள்நோக்கத்தை கட்டவிழ்த்து உண்மையைக் கண்டறிந்து உள்நாட்டுத் தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது தொழிற்சங்கங்களின் தலையாய கடமையாக முன்னெழுந்து நிற்கின்றது.
அத்துடன் கொரொனா வைரசின் ஆபத்துக்களின் மத்தியிலும் சுய பாதுகாப்புடன் தொழிற்துறைகள் இயக்கம்பெற முனையும் சூழலில் தொழிலாளர்களுக்கான சுகாதார நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதில் தொழிற்சங்கங்களின் பணி வேண்டப்படுவதாக இருக்கின்றது. உற்பத்தியில் காட்டப்படும் அக்கறை அவ்வுற்பத்தியைச் செய்யும் தொழிலாளரிலும் காட்டப்படுதலை தொழிற்சங்கங்களே உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. ஏனெனில் மிதமிஞ்சிய தொழிலாளர்கள் வெளியிலே காத்துக்கொண்டு இருக்கும் போது நிறுவனங்களின் உடைமையாளர்களால் உற்பத்தியில் காட்டப்படும் அதீத அக்கறை அந்த உற்பத்தியில் பங்கெடுக்கும் மனிதரில் காட்டப்படும் என்பதை எதிர்பார்க்கவே முடியாது.
இன்றைய சூழலில் தொழிற்சங்கங்களின்றி அனாதரவாக வேலை செய்து வரும் தொழிலாளர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியதாக மாறியுள்ளது. ஊழியர் சேமலாப நிதிய பங்களிப்பு எதுவுமின்றி தினக்கூலிக்குத் தமது உழைப்பை வழங்கி வந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஓர் அமைப்பாக இயங்க வேண்டியதன் அவசியம் இன்று உணர்த்தப்படுகின்றது. தொழிலாளர் உரிமைகளுக்காக அக்கறை செலுத்தும் தொழிற்சங்கங்கள் அமைப்புக்களின்றி உதிரிகளாக தொழில்புரிந்து வரும் தொழிலாளர்களின் நலன்களை முன்னிறுத்தி இயங்க வேண்டியதும் தேவையாக இருக்கின்றது.
கலாநிதி சி.ஜெயசங்கர்,
து.கௌரீஸ்வரன்,
உ.பிரியதர்சன்