பிரித்தானியர் ஆட்சி இலங்கை அரசுக்குள் கால்கொண்டு செல்வாக்கு செலுத்திய பின்ணனியில் தம் சுயசார்புத் தேவையை பூர்த்திச் செய்துக் கொள்ளும் பொருட்டு, ஒப்பந்தத்தின் அடிப்படையில் தென்னிந்தியாவின் பல பாகங்களில் இருந்தும் வரவழைக்கப்பட்ட மக்கள் கூட்டம் தம்முடைய அடிமை நிலை, மிடிமை வாழ்வினை சொற் சித்திரமாக வார்த்திட மேற்கொண்ட முயற்சியே, நாட்டார் இசையின் தோற்றுவாய் எனலாம்.
மலையக மக்கள், மலையகத் தமிழர் என்ற இடைமட்ட சமுகக் குழுவொன்று அந்நியமயமாக்கபட்ட சூழ்நிலையில் தம்முடைய பண்பாட்டு பின்புலத்தில் நின்று கொண்டு, அதே வேளை பண்பாட்டு கலகலப்பு சூழலில், தம்மை, தம் பண்பாட்டை நிராகரிக்க முடியாத சக்தியாக நிலைநிறுத்திக் கொள்ள, நிகழ்த்துகை வெளியாக லயன் அறைகள் மாறவும், அவையே, நாட்டார் இசையின் நாதம் ஜனிப்பதற்கான களத்தையும் பெற்றுக் கொடுத்தது.
தம்முடைய வாழ்விடமே, கலை பிறப்பதற்கான, நிகழ்த்துகை செய்வதற்கான சாதகமான புறச்சூழலைப் பெற்றுக் கொடுக்கவும், இயல்பான ஈடுபாடும், உந்துதலும் ‘கதிரவேலு விமலநாதன்’ என்ற நாட்டார் இசை கலைஞரின் கலைப் பிரவேசத்திற்கு வித்திட்டது. பதுளை, பசறையூரினை பிறப்பிடமாகவும், பதுளை ஊவாஹைலண்ட்ஸ் தோட்டத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.க.விமலநாதன், 1964.11.22 அன்று பிறந்தார்.
சிறுபராயம் முதலே தந்தை கதிரவேலுவின், சித்தர் பாடல் பாராயணம்; செய்வதில் கவரப்பட்ட இவர், அதற்கும் மேலாக லெட்சுமணன் கங்கானியின் வேண்டுகோளுக்கு இணங்கி, அந்தி சாயும் வேளையில் பெண்கள், வீட்டு முற்றத்தின் முன்வந்து, தம்முளமாற, எதுகை மோனையாய் சொற்சிருஸ்டித்துவத்துவமும், பொருள் நயமும் உடைய பாடல்களை பாடவும், அதனால் கவரப்பட்ட விமலநாதன் பின்னாளில் அந்தப் பாடல்களை பாடி பரிட்சயம் பெறவும் தலைப்பட்டார். ‘தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை’ என்பது போல, ஈன்றளவும், ‘ஈமக்கிரியை நடக்கும் வீடுகளில் பெண்கள் ஒப்பாரி பாடுகிறார்கள் என்றால், தன்னையறியாமலே, அங்கேயே மனம் திலைத்துவிடும்’ என்றவர் கூற்று, அவரின் கலைஞன் என்ற தோற்றத்திற்கும் அப்பால் கலையோடு ஒன்றித்து போன அவரின் கலாப்பூர்வமான வாழ்வியலையே சித்தரிக்கிறது.
பாடசாலைகளில் கல்வி பயின்ற காலத்தில், மாணவர் மன்றங்களில், ஒருசில மாணவர்கள், நாட்டார்ப்பாடல்களைப் பாடுவதைப்பார்த்து விட்டும், சில இலக்கிய கலாமன்றங்களில் நடைபெறும் போட்டிகளில் ஒப்புக்கு நாட்டார் இசைப்பாடல்களை பாடுவதையும் பார்த்து விட்டும் இருந்த இவர், நயமிகு நாட்டார் இசைநயம், நலிவடையாமல் காக்கும் தார்மீகப் பொறுப்பால் உந்தப்படவே. நாட்டார் இசையை வாழ்வியலோடு ஒன்றித்துக் கொண்டு, நாட்டார் இசையை ( பாடல்களை) மட்டும் தொகுப்பதோடு நில்லாமல், ‘ இடைமட்ட சமுகம்’, ‘ நாடற்றவர்’ என புறந்தள்ளதலுக்குட்பட்டு கொண்டிருக்கின்ற, ஒரு சமுகத்தின் சேவகனாய் நின்று, வாய்மொழி இலக்கியங்களை புராண, இதிகாச காப்பியங்களோடும், சங்க இலக்கியங்களோடும், பாரதி, பாரதிதாசன் பாடல்களோடும் ஒப்பிட்டு நோக்கி, இலக்கிய உலகில், நாட்டார் இசைக்கான நிகரற்ற நிலையினை தோற்றவிக்கும் முயற்சியில், ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வாளனாகவும், அவரின் பார்வை அகலவிரிந்து சென்றுள்ளமை, கலைஞனின் உயிர் சுவடாய், நாட்டார் நயம் விளங்குவதையே பறைசாற்றுகின்றது.
இலைமறைக்காயாய் மறைந்து கிடந்த தன்னையும், தன்னார்வத்தையும், உணர்ந்து பாராட்டிக் கைக்கொடுத்த பலரையும் நினைவு கூறும் அவர், பண்டாரவளையில் ஒரு நிகழ்வில் பாடிய போது, திரு. து. லெனின் மதிவாணம் உதவி வெளியீட்டு ஆணையாளர், கல்வித் திணைக்களம் அவர்களும், பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் அவர்களும் பாராட்டியமையைக்கூறி, கொழும்பு தமிழ்சங்கம் நடாத்திய ஒரு நிகழ்ச்சியில், தன்னையும் வரவழைத்து, தனக்கான அடையாளத்தைப் பெற்றுக் கொடுத்தவர், மல்லியப்பு சந்தி திலகர் ஐயா தான் என்று அவரையும், அவர் திறந்த விட்ட பாதையையும், அதனால் கிடைக்கப் பெற்ற வாய்ப்புகளையும் பயன்படுத்தி, ‘ நாட்டார் இசை விற்பனராக’ தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
ஈன்றளவும் பாடசாலைகளிலும், பல்கலைகழக மட்டங்களிலும் ‘நாட்டாரியல்’ தொடர்பான தமது கருத்தாழத்தை பகிர்ந்து வரும் இவரின் திறமையை பாராட்டி பறைசாற்றிட, ‘ ஊவா சமூக வானொலி’ நாட்டாரியல் தொடர்பான ஒரு நிகழ்ச்சியை இரண்டு வருட காலமாக, விமலநாதனைக் கொண்டு நடாத்தி, அவரின் தேடல் விஸ்தகரிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.
2013 ஆம் ஆண்டு, ஹப்புத்தளை சைவ இளைஞர் மன்றம், ஊநுளு கல்வியகம் இணைந்த நடாத்திய பாரம்பரிய மலையக கலை நிகழ்ச்சியின் போது, ‘கலைவிற்பனர்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட இவர், 2014 ஆம் ஆண்டு அடையாளம் மற்றும் மலையக சமூக ஆய்வு மையத்தாலும், 2015 ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழாவிலும் (‘ நாட்டாரியல் கலை காவலர் விருது’) கௌரவிக்கப்பட்டார். தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு, இவருடைய திறமையை பாராட்டி, கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலை விருது வழங்கி கௌரவித்ததுடன், யாழ் சமூக ஆய்வு மையத்தால், ‘ மலையக நாட்டாரியல் நட்சத்திரம்’ விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலைமறைக்காயாய், மறைந்து கிடந்த கலைஞருக்கு, சூரியகாந்தி, காங்கிரஸ், தினக்குரல், வீரகேசரி என்ற இன்னோரன்ன நாளிதழ்களும் திறவொலிக்காட்டவும், ஈன்றளவும் கையிலும் பையிலும் குறிப்பு இன்றி, பைந்தமிழ் இலக்கியங்களோடு, நாட்டார் இசை நயந்து, முப்பது வருடகாலத்திற்கு மேலாக, நாட்டாரியல் ஆய்வில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கும் திரு.க. விமலநாதன், நாட்டார் இசை நாயகனாகவும், ஆய்வாளனாகவும் என்றும் நினைவு கூறப்பட வேண்டியவர்.
இரா.சுலக்ஷனா,
நுண்கலைத்துறை,
கிழக்குப்பல்கலைக்கழகம்.