வாழ்க்கை எனும் காலக்கடிகாரத்தில் நாம்
நாம் குறுகிய வாழ்க்கை வட்டத்துக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நம்முடைய வாழ்க்கையினை ஒரு கடிகாரத்திற்கு ஒப்பிடலாம். அதில் உள்ள முட்கள்தான் நம்முடைய வாழ்க்கை எனக் கொண்டால், இந்த முட்கள் எப்போது நிற்கும் என்பது யாருக்கும் தெரியாது. அது போன்றுதான் நம்முடைய வாழ்க்கையும் அடுத்த நொடி என்ன நடக்கும் எனத் தெரியாது. இந்த நிமிடம்தான் நிஜம் இதுதான் நம் வாழ்க்கை என்று உணர்ந்து காலத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வோம்.
காலப்பகுப்பு
இயற்கை முதல் மனிதர்கள் வரை காலச்சக்கரத்தை அடிப்படையாகக் கொண்டே இயக்கம் இடம்பெறுகின்றது. சூரியன் காலையில் கிழக்குத் திசையில் உதித்து மாலையில் தெற்கு திசையில் மறைகின்றது. இது இயற்கையின் நியதி. மனிதர்களின் நியதி குறித்துப் பார்ப்போமாகில், காலத்தை நாம் நம்முடைய வாழ்க்கை வட்டத்தை மையமாகக் கொண்டு பலவாறு பகுத்துள்ளோம். நடந்து முடிந்த செயல் குறித்து இறந்த காலம் எவும்இ நடந்து கொண்டிருக்கும் செயல் நிகழ் காலம் என்றும்இ நடக்க இருக்கும் செயல் எதிர் காலம் என்றும் பகுத்துள்ளோம். அத்தோடு ஒரு நாளை வைகறை, விடியல், நண்பகல் மாலை, சாமம் எனப் பிரித்துள்ளோம். ஒரு ஆண்டினை கார் காலம்இ கூதிர் காலம், முன்பனி காலம், முது வேனிற் காலம் என வகைப்படுத்தியுள்ளோம். மனிதர்களின் பிறப்பு முதல் இறப்பு வரையான இடைப்பட்ட காலங்களை சிசுப் பருவம்இ குழந்தைப் பருவம்இ பிள்ளைப்பருவம்இ கட்டிளமைப்பருவம், வளர்ச்சிப்பருவம், முதுமை என்று வகுத்து வைத்துள்ளோம். இவ்வாறான காலப்பகுப்புக்கள் நாம் சிறப்பான வாழ்க்கை நடத்துவதற்கு நம்முடைய நடத்தை, உடல், உள விருத்தி, இயற்கை மாறுதல்களை மையமாகக் கொண்டு நம் புலனுக்கும் அனுபவத்திற்கும் ஏற்ப பகுத்துள்ளோம்.
நேரத்தின் முக்கியத்துவம்
நேரத்தின் முக்கியத்துவம் பற்றி அறிய விரும்பினால் அவசர அவசரமாக வேலைக்குப் புறப்பட்டு ஒரு நிமிடத்தில் பேருந்தினை தவற விட்ட பயணியிடம் கேட்டுப்பார்….” நான் மட்டும் ஒரு நிமிடத்திற்கு முன் வந்திருந்தால் பேருந்தினை பிடித்திருப்பேன்” என கவலைப்படுவார். இவ்வாறுதான் நாம் பல சந்தர்ப்பங்களில் நேரத்தினை தவற விட்டு அவதிப்படும் நிலை ஏற்படும். நேரம் பொன்னானது என்பர். பொன் விலைமதிப்பு மிக்கது என்பதனால்தானே மிகவும் கவனமாக பாதுகாக்கின்றோம்? ஆனால் நாம் நேரத்தை வீணடிப்பது மாத்திரம் எத்துனை தகும்?
ஒரு நதி எவ்வாறு தன்னுடைய பாட்டில் சென்று கொண்டிருக்கின்றதோ அவ்வாறுதான் நேரமும் தன்னுடைய பாட்டில் சென்று கொண்டிருக்கின்றது. காலம் யாருக்காகவும் காத்திருக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நேரத்திற்கு உயர்ந்தவன்இ தாழ்ந்தவன்இ ஆண்இ பெண்இ சாதிஇ மதஇ பேதம் என்று எதுவும் பார்க்கத் தெரியாது. ஆனால் எவனொருவன் தன்னை சரியான முறையில் பயன்படுத்துகின்றானோ அவனை வெற்றி கொள்ள வைக்கும் சக்தி நேரத்திற்கு இருக்கின்றது.
வாய்ப்பு என்பது எல்லோருக்கும் வழங்கப்படுகின்றது. ஆனால் எல்லா வேளையும் வழங்கப்படமாட்டாது. அது கடந்து போனால் போனதுதான். நேரமும் அவ்வாறுதான். பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் காற்றில் பறந்து போய் விடும். அதனை அடைத்து வைக்க முடியாது. இந்த பொழுதை, கணத்தை நாம் பயன்படுத்தியே ஆக வேண்டும்.
நம்மில் பலர் செல்வம் இல்லையே எனப் புலம்பி வாழ்நாளையே வீணடித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் ஒரு நாளைக்கு நம்மிடம் எண்பத்தாறாயிரத்து நானூறு வினாடிகள் தரப்பட்டுள்ளன. இதனை எவனொருவன் தனது செல்வமாக ஏற்றுக் கொள்கின்றானோ அவனே இந்த உலகில் மிகச் சிறந்த செல்வந்தனாவான்.
நம்மை பிடித்தவர்கள் நமக்கு விரும்பிய பொருட்களை வாங்கித் தருகின்றனர். அதுபோல் நண்பர்களுக்கிடையில் பொருட்களை பரிமாறிக் கொள்ளும் பழக்கமும் நம்மிடம் உள்ளது. ஆனால் நேரத்தை நாம் விலை கொடுத்தோ அல்லது பரிமாற்றி கொள்ளவோ முடியாது. எனது நேரம் எனது. உனது நேரம் உனது. என ஒவ்வொருவருக்கும் நேரம் குறிக்கப்பட்டுள்ளது. நம்முடைய வாழ்க்கை நேரத்தில் தங்கியுள்ளது. அதனை தக்க முறையில் சுவைப்பது எம் கடமையாகும்.
பரீட்சை எமுதுவதற்கு சென்ற மாணவர்கள்இ பரீட்சை மண்டபங்களுக்குள் நுழைவதற்கு சிறு வினாடிகளுக்கு முன் கூட எதை பார்ப்பது எதை விடுவது எனும் பதட்டத்துடன் இருப்பவர்களை பார்த்திருக்கின்றேன். இப் பதட்டம் எதற்கு? ஏன்? படிக்கும் காலத்தை சரியாக பயன்படுத்தி இருந்தால் இன் நிலமை ஏற்பட்டிருக்குமா? நம்முடைய வாழ்க்கையும் ஒரு பரீட்சை போல்தான் அதை சரியான முறையில் அணுகக் கற்றுக் கொள்ள வேண்டும். யார் வேண்டுமானாலும் நேரத்தின் முக்கியத்துவம் பற்றி பேசி விட்டு கடந்து போகலாம் ஆனால் நாம் உணர வேண்டும். அதை செயற்படுத்த வேண்டும்.
பொன்னான நேரத்தை வீணடிக்கும் செயற்பாடுகள்.
சிலருக்கு ஒரு நாளைக்கு அறுபது மணித்தியாலங்கள் கொடுத்தாலும் போதாது என்றுதான் கூறுவர். இங்குதான் பிரச்சினை உள்ளது. தங்கள் நேரத்தை வீணான செயல்களுக்கு செலவழித்து விட்டு நல்ல காரியங்களுக்கு நேரம் இல்லை என்று கூறுபவர்கள் எவ்வளவு பெரிய முட்டாள்கள். நேரத்தை வீணடிக்கும் செயல்களில் பெரும் பங்கு வகிப்பது, சமூக வலைத்தளங்களாகும். இன்றைய நவ உலகில் கைகளில் ஸ்மாட்போன் இல்லாதவர்களே கிடையாது. இவை நமக்கு கொடுக்கப்பட்டதன் நோக்கம் வேறு. ஆனால் நாம் இவை இல்லா விட்டால் வாழ்க்கை அந்தஸ்து இல்லை என்ற எண்ணப்பாட்டுக்குள்ளே தள்ளப்பட்டுள்ளோம். உலகம் சுருங்கி உள்ளங்கைக்குள் என்கின்றனர். இது யாருக்கு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நமக்கா அல்லது நம்மை கையடக்க தொலைபேசிகள் ஊடாக இயக்கும் தந்திர வாதிகளுக்கா? என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நம்மை சிந்திக்க, செயற்படுத்த, அறிவை தேட விடாது நம்மை முடக்கி சுயலாபம் காணும் பெரும் சமூகம் நம்மை இயக்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றுக்கு மத்தியில் நாம் நேரத்தை வீணடிக்க வேண்டுமா? சிந்திப்போம்.
இன்று சின்னத்திரை தொட்டு வெள்ளித்திரை வரை பிஞ்சு குழந்தைகள் முதல் பொல்லூண்டும் பாட்டி வரை அனைவரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. எடுத்துக்காட்டாக தற்கால கட்டத்தை எடுத்துக் கொண்டால் அனைவருமே முடக்கப்பட்டு வீட்டுக்குள் குடிகொண்டுள்ள வேளை இந்த தொலைக் காட்சி பெட்டிகளின் ஓசை பட்டி தொட்டியெங்கும் கேட்கின்றது. வயதுக்கு தக்க அவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அமைவாக நேரத்திற்கு நேரம் ஏதோ ஒரு நிகழ்ச்சியை வழங்கிய வண்ணமே உள்ளனர். நம் சமூகம் இருந்த இருப்புக்களில் அதற்குள் முடங்கிக் கிடக்கின்றனர். போதாமைக்கு தொலைகாட்சி கட்டணங்களுக்கு சலுகைகள் வேறு கொடுக்கப்பட்டுள்ளது. இவை நம் ஆக்க பூர்மாக நேரங்களை அழித்து நாசம் கட்டுகின்றது என்பதை உணர வேண்டும்.
நேரத்தை வீணாக்கும் காரணங்கள் என்னவெனில் அசமந்த போக்கு, வேலைகளை தள்ளிப்போடுதல், தேவையில்லாத மன உளச்சல், தன்னம்பிக்கையின்மை, தோற்று விடுவோமோ என்ற பயம், முயச்சியின்மை, பதட்டம், சோம்பல், மனக்கட்டுப்பாடற்ற நிலை இவ்வாறான பல உடல் உளப் பிரச்சினைகள் நேரத்தை வெகுவாக வீணடிக்கும் செயல்களாகக் கொள்ளலாம்.
இன்று பொழுது போக்கிற்காக பல ஒண்லையின் மூலமான விளையாட்டுக்கள் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெவ்வேறு இடங்களில் இருந்து கொண்டு காய் நகர்த்தும் விளையாட்டுக்கள் மலிந்து விட்டன. இதனால் வீட்டுக்கு வீடு சண்டைகள் பெருகிய வண்ணம் உள்ளது. தெருத் தெருவாக அலைந்து சமூக நல்லுறவை பேணி விளையாடிய கிட்டிப்புல்லு, பம்பரம் போன்ற உடலாரோக்கிய விளையாட்டுக்கள் முற்றாக திட்டமிட்டு நீக்கப்பட்டு, நேரத்தை வீணடிக்கும் மற்றும் வணிகநோக்கிலான விளையாட்டுக்கள் இன்று உலகம் பூராகவும் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவன் தன்னுடைய இலக்குகளில் சரியான நேரத்தை செலவு செய்வானாகில் இவ்வாறான அசமந்தப் போக்கான செயல்களில் தனது நேரத்தை வீணடிக்க மாட்டான்.
“நேரம் எமக்குக் கொடுக்கப்பட்டுள்ள செல்வம்” அதை சரியான முறையில் பயன்டுத்தும் வழிகள்.
“நேரம் என்பது உங்களுக்குக் கொடுக்கப்பட்ட செல்வம். அந்த செல்வத்தை எப்படி செலவு செய்ய வேண்டுமென்ற உரிமை உங்களுக்குதான் கொடுக்கப்படுகின்றது. உங்களுடைய அந்த செல்வத்தை மற்றவர்கள் தங்கள் சுயநலனுக்காகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்து ஏமாந்து விடாதீர்கள்” என கார்ல் சான்ட்பர்க் கூறியுள்ளார்.
நாம் நம்முடைய நேரத்தை நம் இலக்குகளுக்காக செலவிட வேண்டும். இலக்குகள் குறித்து நாம் சிந்திக்கும் ஒவ்வொரு நிமிடமும் நமக்கு வெற்றி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதற்காக நம்முடைய உழைப்பை போட வேண்டும். எதுவுமே செய்யாமல் உட்கார்ந்து கொண்டு இலக்குகள் பற்றி யோசனை செய்து கொண்டு நேரத்தை செலவிட்டால் இலக்கை அடைய முடியாது. மாறாக அதற்காக ஒவ்வோரு நிமிடத்தையும் செலவு செய்ய வேண்டும்.
போராட்டம் நிறைந்ததுதான் நம்முடைய வாழ்க்கை. அதில் இன்பம், துன்பம் இரண்டும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். எப்போதும் சீரான முறையிலே சென்று கொண்டிருந்தால் வாழ்க்கை சுவாரசியம் அற்றுப் போய் விடும். நம் வாழ்க்கை நம் கைகளில், அதனை திட்டமிட்டு செயற்படுத்துவது எமது கடமை. ஆகவே நாம் நமது நேரத்தை அல்லது காலத்தை திட்டமிட்டு செயற்படுத்த வேண்டும்.
இதற்கு ஓர் உதாரணம் கூறுகின்றேன். பிறையின் றெசி என்பவர் தன்னுடைய புத்தகத்தில் ஒரு வேலையைத் தள்ளிப்போடாமல் எப்படி செய்வது என்று பல வழிகளைக் கூறியுள்ளார். அதாவது நாம் முதலில் நம்முடைய ஒரு மாதத்திற்கான அல்லது ஒரு வாரத்திற்கான வேலைகளை பட்டியல் படுத்த வேண்டும். அதில் மிக முக்கியமான வேலைகளை ஒழுங்கு படுத்த வேண்டும். பின்னர் அதற்காக ஒவ்வொரு நாளும் நேரத்தை கணித்து வைத்துக் கொண்டு, அதைத் தவறாமல் செய்யுங்கள் என்று கூறியுள்ளார். நாம் பல சமயங்களில் நேரம் போதாது என்று கூறிக்கொண்டே நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றோம். அதனை விட்டுவிட்டு நமது நேரத்தை குறிக்கோளாக்கிக் கொள்வோம். நமக்கான வழிமுறைகளை அமைத்துக் கொள்வோம். அதற்காக தினம் உழைப்போம்.
தனி மனிதன் ஒருவனின் நேர முதலீடு அவனுடைய திறன், பண்பு, அறிவு, இலக்கு என்பவற்றை தீர்மானிக்கும் மூலதனமாக தொழில் புரிகின்றது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். ஒவ்வொரு கணமும் நமக்கானது, நம் கணப் பொமுதுகளை அர்த்தமுள்ளதாக்குவோம். வீணான பொழுது போக்குகளை விடுத்து நேரத்தை சேமிப்பது தொடர்பாக சிந்திப்போம். நேரத்தை எப்படி சேமிப்பது என்ற கேள்வி பலருக்கு தோன்றும். அதாவது தோற்று விடுவோம் என்ற பயம், எப்படி ஆரம்பிப்பது என்ற குழப்பம், முன்வர வெட்கம், என்னால் முடியாது, எனக்குத் திறமையில்லையே என்ற தாழ்வு மனப்பான்மை, இவை தவிர அடுத்தவரின் பிரச்சினைகளில் மூக்கை நுழைப்பது, சமூக வலைத்தளங்களுக்குள் முடங்கிக் கிடப்பது, அடுத்தவன் வீட்டை எட்டிப்பார்ப்பது, அடுத்தவன் தொலைபேசி தொடர்புகளை தமது தொலைபேசிகளுக்குள் முடிக்கி வேடிக்கை பார்ப்பது, ஒட்டுக் கேட்பது முதலானவற்றைத் தவிர்த்துக் கொண்டால் நேரத்தையும் சேமித்துக் கொள்ளலாம்இ நம் இலக்குகளையும் அடைந்து கொள்ளலாம்.
நமக்கு கொடுக்கப்பட்ட இந்த வாழ்க்கையை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த ஒரு செயலையும் சடுதியாக மாற்றி விட முடியாது. எனவே நம் நேரத்தைஇ காலத்தை, கணப்பொமுதுகளை கருத்தில் கொண்டு தொடர்ந்து முயற்சிப்போம். முயற்சியும் பயிற்சியும் அதற்கு தகுந்தாற் போல் நேர முகாமைத்துவமும் இருந்தால் சாதாரண மனிதர்களும் சாதனை படைக்க முடியும். உங்கள் நேரத்திற்காக எப்போதும் உழைத்துக் கொண்டே இருங்கள். நிச்சயமாக வெற்றி உங்கள் கைகளில் தவழும்.
அ.ஆன் நிவேத்திகா,
கிழக்குப் பல்கலைக்கழகம்