சொற்கள் எவ்வளவு தித்திப்பானவை என்பதை எப்போதும் புத்தகங்களே, நமக்கு அறிமுகஞ் செய்துவிடுகின்றன. அப்படி அறிமுகமாகி வாசிக்க கிடைக்கப் பெற்ற புத்தகம் தான், இரா. நடராசனின், ‘ஆயிஷா’. 1996 ஆம் ஆண்டு, கணையாழி குறுநாவல் போட்டியில், முதல் பரிசு வென்ற, ‘ஆயிஷா’ 28 மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஒரு விஞ்ஞான நூலுக்கு அதன் ஆசிரியர் எழுதிய முன்னுரையாக அமையும் குறித்த குறுநாவல், சமகாலத்திலும் அதன் அவசியத்தை மீளவும் வலியுறுத்தி நிற்கின்றமையை காணமுடிகிறது.
நமது கல்விமுறைமை என்னவாக இருக்கிறது? என்ற கேள்வி பரவலாக சிந்திக்;கப்படுகின்ற, அதேவேளை பரவலாக பேசப்படாததொரு நிலையில், ஆயிஷா வாசிப்பு உலகளாவிய கல்வி ஆர்வலர்களின், மனசாட்சியை புரட்டிப்போட்ட, புரட்டிப்போடும் குறுநாவலாக, இரா. நடராசனின் எழுத்துவழி பிரசன்னமாகிறது. கல்வி சூழலின் யதார்த்த நிலையை கேள்விக்கிடமாக்கும் குறித்த குறுநாவல், பின்வருவதான கதையமைப்பைக் கொண்டு, இயலுகிறது.
‘ பாடசாலை ஒன்றில், விஞ்ஞான பாடம் காந்தவியல், தொடர்பான பாடவேளையின் போது, ஒரு மாணவி( ஆயிஷா) ஒரு கேள்வி கேட்கிறாள். கேள்வி ( அந்த காந்தத்தை இரண்டா வெட்டினா என்னவாகும் மிஸ் ?, இந்த காந்தத்தைத் துண்டாக்கிக் கிடைத்த, காந்தங்களின் எண்ணிக்கை, ஒரு முடிவுறா எண் என்று வச்சிட்டா?) என்பதாக பாடவேளைகளில் கேட்கப்படுகிறது. அதற்கு பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக, ஆசிரியரும் பதில் சொல்லிவிட்டு பாடவேளை முடிந்து வெளியில் செல்ல, அவளின் கேள்வி முடிவுறாது தொடர்கிறது. பூமியின் காந்தயியல்பு குறித்து அவள், ‘என் சந்தேகமே அங்கதான் மிஸ் . எல்லா காந்தங்களின் கவர்திறனும் ஒன்றெனக் கொண்டால், அவை ஒட்டிக் கொள்ளத் தான் வாய்ப்பே இல்லையே… எப்புறமும் நகராமல் அப்படியே இருக்கும். ஏன் நாம இந்தப் பிரபஞ்சம், முடிவுறா எண்ணிக்கையிலான காந்தங்களை நேர்க்கோட்டில், வைத்தது போல் அமைக்கப்பட்டதா வெச்சிக்கக் கூடாது? அந்தக் கோணத்தில் பூமிங்கற காந்தத்த ஆராயலாம் இல்லையா?.’ என்பதாக சொல்லிவிட்டு, Truth of magnets என்ற புத்தகத்தை குறித்த ஆசிரியரின் கையில் கொடுத்து, படிக்கிறிங்களா மிஸ் ? என்று கேட்கிறாள்.
ஆசிரியர்,இதெல்லாம் நீ படிக்கிறியா? என்று கேட்டு புத்தகத்தை வாங்கிச் சென்ற ஆசிரியருக்கு, ஆயிஷா குறித்து அறிய வேண்டும் என்ற ஆவல் தூண்டவே, மறுநாள் அவர் வகுப்பிற்கு சென்று பார்வையிட அங்கு அவள், இல்லாதிருக்கவும், மற்றைய மாணவர்களிடம் வினவுகிறார். பதினோராம் தர மாணவர்களின் கணித செயல்முறையை செய்து கொடுத்ததிற்காக, அவள் கணிதப்பாட ஆசிரியரால் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டமையை குறித்த ஆசிரியர் வாயிலாகவும், மாணவர் வாயிலாகவும் அறிந்துக் கொள்ளும் அவர், அந்த சம்பவத்தினூடாக அவளின் குடும்ப பின்னணியையும் அறிந்துக் கொள்கிறார். பின்னரும், எது புத்தகத்தில் இருந்ததோ அதனை பரீட்சையில் எழுதாமைக்காக, புள்ளிகள் குறைக்கப்படுவதையும், புத்தகத்தில் பிழையாக இருந்தால் என்ன செய்வது என்று கேட்கப்படவும், அதற்காக தண்டிக்கப்படுகிறாள் ஆயிஷா.
இவ்வாறு, தண்டிக்கப்படும் ஆயிஷாவின் கேள்விகள் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது. ஒரு நாள் குறித்த விஞ்ஞானப்பாட ஆசிரியரிடம், ‘ அடி வாங்கினால் வலிக்காமல் இருக்க ஏதும் மருந்திருக்கா மிஸ்’ என்று கேட்கிறாள். மறுநாள் விஞ்ஞானப்பாடம். உடலை மருத்துப் போக வைக்கின்ற, நைட்ரஸ் ஆக்சைடு வாயுவை பற்றி பாடம் நடத்துகிறார் ஆசிரியர். மறுநாள் குழந்தைகள் தின ஏற்பாடுகள் பாடசாலையில் நடைப்பெற்றுக் கொண்டிருந்த போது, வேதியல் ஆய்வு கூடத்திற்கு பின்னால் ஆயிஷா இருப்பதாகவும், அவள் உங்களை அழைத்து வரச் சொன்னதாகவும், ஒரு மாணவி குறித்த விஞ்ஞானப்பாட ஆசிரியரிடம், சொல்லுகிறாள்.
வேதியல் ஆய்வுகூடத்தை நோக்கி நகர்ந்த ஆசிரியருக்கு பேரதிர்ச்சி காத்திருந்து. அவள் மருத்து போவதற்காக, தன் உடலில், நைட்ரஸ் எத்தினால் செலுத்திக் கொண்டதை சொல்லும் அவள், சில மணி நேரங்களில், சுரண்டுவிழுகிறாள் மரணித்து போகிறாள். அவள் கேட்ட ‘ ஏன் நமது நாட்டில் இப்படி பெயர் சொல்லுமளவிற்கு எந்த பெண் விஞ்ஞானியும் உருவாகவில்லை?’ என்ற கேள்வியோடும், ‘ தங்கள் சொந்த வீடுகளின் இருண்ட சமையலறையில் போய் அவர்கள் அதைத் தேடட்டும்’ என்பதான ஆசிரியர் கூற்றோடும் நாவல் முடிவடைகிறது.’
இப்படியாக ஆயிஷா குறுநாவல் இயலுகிறது. 1996 ஆம்ஆண்டு குறித்த நாவல் வழி ஆசிரியர் பேசிய அதே இயல்பு நிலைதான், இற்றைவரை கல்வி சூழலில் காணப்படுகின்றமை பேரபத்தமாக நோக்க வேண்டிக்கிடக்கிறது. இன்றைய சூழ்நிலையில், கல்விகேள்வி எல்லாம், பரீட்சைக்கானதாகவும், புள்ளிகளுக்கானதாகவும், மட்டிட்டு நிற்கின்ற நிலையில், கேள்விகள் இறுதிவரை கேள்விகளாகவும், தீர்க்கப்படாத சந்தேகங்களாகவுமே தொடர்கிறது. மனப்பாடக்கல்வியாகவும், ஒப்புவித்தல் முறையாகவும் தொடரும் கல்வி செயல்முறையில், கல்வியின் நோக்கமும், செயல்முறையும் பாழ்பட்டு போன நிலையையே காணமுடிகிறது.
இப்படியானதொரு சூழ்நிலையில், ஏற்கனவே எழுதப்பட்டிருக்கின்றவற்றை எந்தக் கேள்விகளும் இல்லாமல், அப்படியே, ஒப்புவித்தல் என்பது சமுகத்திற்கு எதிர்வினையாற்றல், என்ற கல்விகேள்வியின் நோக்கினை, புறந்தள்ளியிருக்கிறது என்றே தெளிய வேண்டியிருக்கிறது. இத்தகையதானதொரு கல்வி சூழலில், செயல்முறை பாடங்கள் எதிர்க்கொள்ளும் பேரவலமும் இதுதான். சுருக்கமாகச் சொல்லப் போனால், செயல்முறைகளும், எழுதப்பட்டவற்றை அல்லது ஏற்கனவே நிகழ்த்திக்காட்டப்பட்டவற்றை, அப்படியே பரீட்சையில் ஒப்புவித்தலாக மட்டுமே அமைகிறது. ஏன்? எதற்காக? எப்படி? என்ற கேள்விகளுக்கு இடமளிக்கப்படாமையும், ஏற்கனவே முன்னாயத்தமாக அமைந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லப்படும், பதில்களுமாகவே கல்வி முறைமைத் தொடர்கிறது.
எமது பாடத்திட்டமும், போதனா முறைமையும் காலனியக்காரர்கள் வடித்து தந்ததை அப்படியே பிடித்துக் கொண்டிருக்கும், முறையாக அமைந்துள்ளதொரு சூழ்நிலையில், கல்வியின் நோக்கிலும், கல்வி முறையிலும் பாரியமாற்றங்கள் ஏற்படாதிருக்கின்ற நிலையின் வெளிப்பாடாகத் தான் இற்றைவரை, கல்வியல் சூழல் அமைந்துள்ளது. இந்நிலையில் தான், எங்களுக்குள் இருக்கும் ஆயிஷாக்களும், அருவமற்றவர்களாகவே வாழ்ந்து மடிந்துக் கொண்டிருக்கிறார்கள்.
இரா.சுலக்ஷனா,
நுண்கலைத்துறை,
கிழக்குப்பல்கலைகழகம்.