Home இலங்கை வானொலி உரையாடல்களும் பால்நிலை ஏற்றத்தாழ்வுகளும் – கலாவதி கலைமகள்..

வானொலி உரையாடல்களும் பால்நிலை ஏற்றத்தாழ்வுகளும் – கலாவதி கலைமகள்..

by admin

வானொலியில் நேயர்களுடன் உரையாடப்படும் போது கேட்கப்படும் கேள்விகள் முக்கியமாய் பார்க்கப்பட வேண்டியவை. உரையாடல்களை தொகுப்போமானால் பின்வருவனவற்றை உள்ளடக்கியதாய் உள்ளன.

– இன்றைய சூழலில் வீட்டில் தங்கியிருந்து என்ன செய்தீர்கள்? – எவற்றையெல்லாம் கற்றுள்ளீர்கள் எனக் கேட்கப்படுகின்றன. அத்தோடு வீடுகளில் வீட்டுவன்முறை அதிகரித்துள்ளதாகவும் உரையாடப்படுகின்றது.

ஆனால் இக் கேள்விகளுக்காக வாசகர்கள் பதில் என்பது முக்கியமானது. பெண்கள் பேசும் போது சமைத்தீர்களா? என்ன சமைத்தீர்கள் புதுசாய் என்ன சமைக்கப் பழகினீர்கள் என உரையாடுவதும் கதைக்கும் பெண்களும் என்ன சமைத்தேன் எனக் கூறுவதோடு சில பெண்கள் நான் இப்போதுதான் சமைக்கப்பழகுகின்றேன். என்பதுமாக உரையாடல் தொடரும். இவ் உரையாடலில சமைத்தல் என்பது பெண்களது பிரதான கடமை. அதனை இவ்வளவு காலமும் பெண்கள் செய்யத்தவறி விட்டார்கள். இப்போது வீட்டில் இருக்கும் போது அதனை கட்டாயம் செய்தே வேண்டியதான நிர்ப்பந்தம் என்பது வெளிப்படும்.

ஆண்களிடம் பேசும் போது நீங்கள் என்ன செய்கின்றீர்கள் நாங்கள் குடும்பத்துடன் இருக்கின்றோம் என் மனைவி இப்போதுதான் சமைக்கின்றார். வீட்டுச் சாப்பாடு சாப்பிடுகின்றேன். என உரையாடல் தொடரும். நான் பிள்ளைகளுடன் இருக்கிறேன் சமைக்க உதவுகின்றேன் என்னும் பதில்கள் ஆண்களிடம் இருந்து அரிதாகவே காணப்படும். பெண்களுடன் பேசும் போது உங்களுக்கு சமைக்கத்த தெரியுமா போன்ற கேள்விகள் உடனே கேட்கப்படும். ஆனால் ஆண்களிடம் உங்களுக்கு சமைக்கத் தெரியுமா? ஏன் சமைப்பதில்லை என்று ஏன் உரையாடப்படுவதில்லை. என்னும் கேள்வி முக்கியமானது.

இத்தகைய வானொலி நேயர்களின் உரையாடலில் பெண்கள் வீடு குழந்தை, ஆண்கள் தொழில் வெளி உலகு என்னும் சமூகக் கட்டமைப்பின் உருவாக்கத்தினையும் நமது வாழ்வில் அது ஆழப்புதைந்திருப்பதனையும் அறிந்து கொள்ளலாம்.

நமது அடிப்படையில் மூளையில் நினைவில் பெண், ஆண் என்பதன் கற்பிதம் பண்பாட்டில் உருவாக்கப்பட்டதொன்றாகவே உள்ளது. சமூகப்பண்பாட்டில் பெண், ஆண் என்னும் வகிபங்கு என்பது மாற்றமுடியாத மீற முடியாத கட்டமைப்பாகவே நிலைநிறுத்தப்பட்டுள்ளது. குழந்தை வளர்ப்பிலிருந்து அதற்கான தயார்படுத்தல்களை குடும்பங்கள் செய்கின்றன. பெண் அழகு. கவர்ச்சி, மென்மை, சமையல், வீட்டு வேலை என்பதும் ஆண் வீரம்,  தைரியம் வெளியில் சென்று எப்போதும் வருவதற்கான உரிமம் எனவுத் அத்தோடு ஆணின் உணவு, உடை மற்றை தேவைகளை பூர்த்தி செய்பவளாக பெண் வளர்க்கப்படுகின்றாள். இத்தகைய குழந்தை வளர்ச்சி பெண்,  ஆண் இரு பாலினரையும் பாதிக்கின்றது. சமூகப் பண்பாடானது இருவரையும் பலவீனப்படுத்துகின்றது. சமநிலைப்படுத்தவும் இணைந்த வகிபங்கு வகிக்கும் சூழலையும் இல்லாமல்ச் செய்கின்றது.

தன் உடல், உள ரீதியான தேவையை நிறைவு செய்யாத பெண் மீது வன்முறையைப் பிரயோகிக்கலாம் என்னும் அதிகாரத்தினை வளங்குகின்றது. பொருளாதாரம் மற்றும் சமூகப்பாதுகாப்பிற்காய் பெண் தங்கி வாழும் சமூகத்தினை உருவாக்கின்றது. இத்தகைய பாதுகாப்பற்ற சூழல் பெண் மட்டுமன்றி மனிதர்கள் வாழ்வதற்கான சூழலை உருவாக்கத் தவறுகின்றன.

ஃபிரெடரிக் எங்கெல்ஸ் குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் என்னும் நூலில் குறிப்பிடுகையில் ‘ வேட்டையாடும் தாய்வழிச்சமூகத்தின் பெண்களுக்கும்இ வேளாண்மை உபரிச் சமூகத்திற்கும் இடையிலான வேறுபாடு உற்பத்தி முறை பற்றியதாகவே உள்ளது. பெருவீத விவசாயம் நகரங்களின் வளர்ச்சி வர்க்க வாழ்வு முறை ஆகியவை காரணமாகவே உலகில் தாய்வழிச்சமூகம் மறைந்து ஆணாதிக்க தந்தைவழிச் சமூகம் உருவானது. ஆண்வழி ஒரு தார மணம் மீதான குடும்பம் ஏற்படுத்தப்பட்டது. பெண் அடிமையாக்கப்படத் தொடங்கினாள். இதிலிருந்தே பெண்இ ஆண் பற்றிய சமூகப் பாரபட்சம் தோன்றுகின்றது.’

இங்கு பெண் மீதான கட்டமைப்பில் பெண் வீட்டிற்குரியவளாய் அனைவரின் தேவைகளை நிறைவு செய்பவளாய் கட்டமைக்கப்படுகின்றாள். ஆண் பொதுச் சமூகத்திற்குரியவனாய் பணமதிப்புடன் தொடர்பு படுத்தப்படுகின்றான். இத்தகைய கட்டமைப்புக்களின் உருவாக்கம் என்பது பெண்ணை அடிமைப்படுத்தவும் வன்முறைக்குட்படுத்தவும் துணிகின்றது. எமது சாதாரண உரையாடல்களில் இதற்கான அடிப்படைகளை காணலாம். நாம் பேசும் போது அப்பா வேலை செய்கின்றார் அம்மா வீட்டில் சும்மா இருக்கிறார்இ சமைப்பார் எனக் கூறுவோம் அம்மாவின் குறிப்பாய் பெண்களின் வீடு சார்ந்த உழைப்பு என்பது கடமைஇ கருத்தில் எடுத்துக் கொள்ளப்படாதது.

வீடு, நாம் வாழும் சூழல் போன்றவற்றில் ஆதிக்கம் செலுத்தும் ஆணாதிக்கச் சிந்தனையை களைவதன் மூலமே நம்மால் மனிதர்களாகிய நாம் வாழ்வதற்கான சூழலை உருவாக்கல் என்பத சாத்தியப்படும். நமது உரையாடல்களில் இயல்பாய் இழையோடும் கருத்தியலில் மாற்றம் வருவதும் அதனை முன்னெடுப்புதும் நமது கடப்பாடாய் உள்ளது.

கலாவதி கலைமகள்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More