குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை குறித்த வழக்குத் தீர்ப்பிற்கு எதிரான மேன்முறையீட்டு மனு இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
நடராஜா ரவிராஜின் மனைவியினால் இந்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த கொலை குறித்த வழக்கின் தொடர்புபட்டதாக குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டிருந்த ஐந்து சந்தேக நபர்களையும் ஜூரிகளின் பரிந்துரைக்கு அமைய கடந்த 24ம் திகதி உயர் நீதிமன்றம் குற்றமற்றவர்கள் எனத் தீர்ப்பளித்து விடுதலை செய்திருந்தது.
இந்த வழக்குத் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்த ரவிராஜின் மனைவி ஜூரிகள் நியமிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பியும் தீர்ப்பினை ரத்து செய்யுமாறும் மேன்முறையீட்டு மனுவில் கோரியிருந்தார்.
மனுதாரர் அல்லது மனுதாரரை பிரதிநிதித்துவம் செய்ய எவரும் நீதிமன்றில் பிரசன்னமாகியிருக்கவில்லை என்ற அடிப்படையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த மனுவை நிராகரித்துள்ளது.
வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போதே ஜூரிகள் நியமனம் குறித்து எதிர்ப்பை வெளியிட்டிருக்கலாம் என பிரதிவாதிகளின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.