ஒன்று போல் மற்றொன்றோ
இன்னொன்றோ இருந்ததில்லை.
நாலுபேர் கூடி
கை எட்டியது கொண்டு
வார்த்தைகள் நாலு
நளினமாய் பேசி,
படைக்கும் விளையாட்டு.
புத்தியில் பதிந்த
பிடிக்காதார் உளரேல்
அவர் பொருட்டு
ஆக்கிப் படைக்கும்
பகிடி விளையாட்டு.
ஒன்று போல் மற்றொன்றோ
இன்னொன்றோ இருந்ததில்லை.
பேசும் பொருளும் பேசாப் பொருளும்
பொதிந்து புனையும்
கத்தரி வெருளியெனும் வெருட்டி
பேசும் பொருளும் பேசாப் பொருளும்
உயர்கலை வல்லார்
உலக மனிதரெல்லாம்.
வெருளி, வெருட்டி , கத்திரி வெருளி என அழைக்கப்படும், கண்ணூறு கழிக்கவும், பறவை, விலங்குகளை பயமுறுத்தும் வகையிலும் மனிதர்களால் உருவாக்கி வைக்கப்படும் காண்பியப் பொருளின் அசாதாரண முக்கியத்துவம் பற்றியே இங்கு உரையாட விரும்புகிறேன்.
அசாதாரணம் என்று கூறப்படுவதன் காரணம் என்னவென்றால், வெருட்டி, வெருளி பற்றி வெகு சாதாரணமாகவே எடுத்துக் கொள்கிறோம். மிகச் சாதாரணமான வேலையாகவும், விடயமாகவுமே பொதுப் புத்தியில் பதிந்து காணப்படுகிறது.
எளிமையின் வலிமையும், அழகும், வல்லபமும் வெளிப்படுத்தப்படும் காண்பியப் பொருளாக வெருட்டி, வெருளி அறிந்துக் கொள்ளப்படுவது, அறிவியல் மற்றும் அழகியல் சார்ந்த விடயமாகும். இந்த முக்கியத்துவம் பொதுசனப் பரப்பில் அறியவைக்கப்பட வேண்டிய கல்வி மற்றும் கலைச் செயற்பாடாக முன்னெடுக்கப்படுவது மிகவும் முக்கியமானதாகும். நவாலியூர் சோமசுந்தர புலவர், இத்தகைய முன்னெடுப்புகளில் முதன்மையானவராக கானப்படுகிறார். அவரின், கத்தரி வெருளி பாடல், ‘ கத்தரி தோட்டத்தின் மத்தியிலே நின்றுகாவல் புரிகின்ற சேவகா! – நின்று காவல் புரிகின்ற சேவகா! மெத்தகவனமாய் கூலியும் வாங்காமல் வேலை புரிபவன் வேறுயார் ? உன்னைப் போல் வேலை புரிபவன் வேறுயார்?…….’ வெருளிகளின் சமுகப் பயன்பாட்டை வெளிப்படுத்தி நிற்கின்றது.
பார்ப்பதற்கு எளிதானதாகவும், நகைப்பை ஏற்படுத்துவதாகவும் அமையும் வெருட்டிகளும் வெருளிகளும் ஒன்று போல், மற்றொன்று இருப்பதை காணவே முடியாது. காணும் ஒவ்வொரு வெருளியும் மிக எளிதாக நகைப்பை ஏற்படுத்தும் வல்லமை உடையவையாக, உருவாக்கப்படுவதைக் காணமுடியும். இந்த அனுபவங்கள் எல்லாம் எல்லோருக்கும் உண்டு. ஆனால், எங்கும் இதுவொரு விடயமாகவே அலசப்படவதில்லை.
குறிப்பாக, வீடுகளில் முடக்கப்பட்டிருக்கும் குடும்பங்கள், தங்கள் வீட்டு முற்றங்களிலும், வளவுகளிலும், வீட்டு மண்டபங்களிலும், அடுக்கு மாடித் தொடர்களிலும் வட்டமான மேசைகளிலும் இன்னும் சாத்தியமான இடங்களிலும் வெருளி, வெருட்டி உருவாக்கச் செயற்பாட்டை மிகவும் இலகுவாக முன்னெடுக்கக் கூடிய, பொழுது போக்கு நடவடிக்கையாக அமைகிறது.
கலை மற்றும் கல்விச் செயற்பாடாக அமையும் வெருளிஃ வெருட்டி செய்யும் செயற்பாடு மிகவும், மகிழ்வான, முழுக்குடும்பத்திற்குமான பொழுது போக்காகவும், அமையும் என்பது நிச்சயமானது.
சிறு குழுச்செயற்பாடாக அமையும் வெருளி ஃ வெருட்டி கட்டும் செயற்பாடு மிகவும் நகைச்சுவையானதாக அமைவதுடன் உருவாக்கப்படும் வெருளி ஃ வெருட்டியும் பல கதைகளைப் பேசாமல் , பேசவல்லதாக அமைவதை அதன் உருவாக்கப் பொழுதுகளிலும் உருவாக்கம் பெற்ற பின்னர் நிகழும் விளையாட்டான உரையாடல்களிலும் அனுபவிக்க முடியும்.
வெருளி ஃ வெருட்டி உருவாக்கம் சில சந்தர்ப்பங்களில் விகாரமானதாகவும், உருவாக்கப்படுவதுண்டு. இதன் காரணமாக, சிறுவர் கலையாக்கச் செயற்பாடாக கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, மூன்றாவதுகண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாடுகளுக்கான நண்பர்களின் குழாம் இதனை ‘ விரும்பி’ எனப் பெயரிட்டு முன்னெடுத்து வருகிறது. தா.தனுஜா, ‘பச்சை வயல் நடுவினிலே பறவை வராமல் – அங்கே பக்குவமாய் பார்த்திருக்கும் காவலும் நானே….’ வெருளி பாடலாகக்கச் செயற்பாட்டை மேற்கொண்டிருந்தார். சுசிமன் நிர்மலவாசன், பாடசாலை மாணவர்களை கொண்டு, அசையும் விரும்பிகளாக, வெருட்டிகளின் இன்னொரு பரிமாணத்தை மேற்கொண்டிருந்தார்.
சிறுவர் மத்தியில் அழகு நிறைந்த நகைச்சுவை உணர்வுடன், விமர்சன நோக்கையும், படைப்பாற்றலையும் இணைந்து வளர்த்தெடுக்கும் நோக்கில், ‘விரும்பி’ கலையாக்கச் செயற்பாடு எனும் பெயரில் பல விதமான கண்பிய மற்றும் ஆற்றுகை செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வீட்டுத் தோட்டத்தை அழகுபடுத்தும் வகையிலும், வீட்டு முகப்பை, மண்டபத்தை அழகுபடுத்தும் விதத்திலும், அன்பளிப்பு மற்றும் நினைவுப் பரிசில்களாகவும், வாழ்த்து அட்டைகளாகவும் ‘விரும்பி’ வடிவம் பெற்றிருக்கிறது. இவை சார்ந்த விடயங்களை தேனீக்கள் கலைப் பொருட்கள், உருவாக்க மற்றும் விற்பனை நிலையத்தில் பார்வையிடலாம், பெற்றுக் கொள்ளலாம்.
இக்கட்டுரை, ‘விரும்பி’ என்ற எண்ணக்கருவில் குடும்பத்தினர் இணைந்து உருவாக்கும் மகிழ்வூட்டுவதன் மூலம் அறிவூட்டும் விளையாட்டாக முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தை இக்காலப் பொருத்தம் கருதி முன்வைக்கின்றது.
வீட்டின் வெளிச்சூழலிலும், உட்புறத்திலும் வசதிக்குத் தகுந்தாற்போல் ‘ விரும்பி’ கட்டும் விளையாட்டை விளையாடி மகிழலாம். புகைப்படங்கள் எடுத்தும் வீடியோக்கள் எடுத்தும் பெற்ற இன்பத்தை மற்றவர்களும் பார்த்து மகிழப் பகிரலாம். சமுக மகிழ்வூட்டலை கிளர்ந்தெழச் செய்யலாம். வாருங்கள், ‘விரும்பி’ கட்டும் விளையாட்டை விரும்பி விளையாடுவோம்.
கலாநிதி. சி. ஜெயசங்கர்.
கோட்டு வரைபடம் சுசிமன் நிர்மலவாசன்.