வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தாம் வசிக்கும் நாடுகளில் PCR பரிசோதனையை மேற்கொண்டு நாடு திரும்பினாலும், நாட்டை வந்தடைந்ததும் மீண்டும் PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் PCR சோதனைகளில் எவ்வித பயன்களும் இல்லை என்பதனால் நாடு திரும்பும் அனைவருக்கும் விமான நிலையத்தில் PCR பரிசோதனை மேற்கொள்ளுதல் கட்டாயமானது என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் காணப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களின் எண்ணிக்கை, கொரோனா சிகிச்சை வழங்கும் வைத்தியசாலைகள் மற்றும் சமூகத்தில் தொற்று பரவாத வகையில் பராமரிப்பு செயற்பாடுகளை முன்னெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களின் அடிப்படையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர் அழைத்துவரப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விமான நிலையங்களில் காலையில் எடுக்கப்படும் மாதிரிகளுக்கான PCR அறிக்கை மாலைக்குள் விநியோகிக்கப்படும் எனவும் PCR அறிக்கை கிடைக்கும் வரை அனைத்து பயணிகளும் விமான நிலையத்தில் தங்கவைக்கப்பட்டு, தேவையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். #PCRபரிசோதனை #அனில்ஜாசிங்க #இலங்கையர்