தேர்தல் காலத்தில் உள்ளகப் பயிற்சிகளுக்காக வைத்தியர்களை ஆட்சேர்ப்பு செய்வதை இடைநிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்ட தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு வைத்தியர்களின் சக்திவாய்ந்த தொழிற்சங்கமான அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்த நியமனங்கள் நிறுத்தப்பட்டால், நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகள் மிக மோசமாக பாதிக்கப்படும் என ஜுலை மாதம் 18 ஆம் திகதியான இன்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
வைத்தியசாலைகளில் 24 மணி நேரமும் தங்கியிருந்து சேவையாற்றும் உள்ளக பயிற்சி வைத்தியர்களின் சேவையானது, நாட்டின் அனைத்து முக்கிய வைத்தியசாலைகளிலும் தொடர்ச்சியான சேவையை உறுதிசெய்வதற்கு முக்கியமானது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
தேவையான தகுதியை பூர்த்தி செய்துள்ள சுமார் 500 பயிற்சி மருத்துவர்களை நியமனம் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித்த அளுத்கேயின் கையெழுத்துடன் அனுப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில் தேர்தல் காலப்பகுதியில் மேற்கொள்ளப்படும் இந்த நியமனங்களை இடைநிறுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம் மேற்கொண்டதாக அறியக் கிடைத்துள்ளது எனவும் வைத்தியர் ஹரித அலுத்கே தனது கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எந்தவொரு அரசியல் செல்வாக்கும் இன்றி தவிர்க்க முடியாத காரணியின் அடிப்படையில் மாத்திரம் தகுதிபெற்றவர்களுக்கான பயிற்சி வைத்தியர் நியமன செயன்முறையை இடைநிறுத்துவதற்கு நீங்கள் மேற்கொண்ட தீர்மானமானது, நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைக் கட்டமைப்பில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் தேர்தல் நடைபெற்ற காலத்தில் கூட அரசியல் செல்வாக்கு இன்றி, தகுதி அடிப்படையிலான மருத்துவ நியமனங்கள் வழங்கப்பட்டதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வைத்தியர் ஹரித்த அலுத்கே மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தகுதியை பூர்த்தி செய்தவர்களுக்கு உள்ளக பயிற்சிகளை வழங்கும் சுகாதார அமைச்சின் நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்குமாறும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. #தேர்தல்ஆணைக்குழு #அரசவைத்தியஅதிகாரிகள்சங்கம் #மோதல் #ஆட்சேர்ப்பு