குளோபல் தமிழ்ச் செய்திகள்
சிரியாவின் பண்டைய நகரான பல்மைராவின் பல பகுதிகளை ஐ.எஸ் தீவிரவாதிகள் அழித்து விட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிரியாவின் தொல்பொருள் ஆய்வு அதிகாரிகள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
ட்ரடிரிபைலோன் என்று அறியப்படும் நான்கு வாயில்கள் உடைய ரோமன் கட்டிடக்கலை அமைப்பையும், ரோமன் அமைப்பில் இருக்கும் அரைவட்ட அரங்கின் தோற்றத்தையும் இந்த தீவிரவாதிகள் உடைத்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பின் உலக மரபுரிமைகளில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ள நகரை சிரியாவில் நிலை கொண்டுள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் அழித்துள்ளனர்.
பல்மைராவில் அண்மையில் நடைபெற்றுள்ள அழிவை புதியதொரு யுத்தக் குற்றம் என்றும், சிரியா மக்களுக்கும், மனித குலத்திற்கும் மிக பெரிய இழப்பு என்றும் யுனெஸ்கோ கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.