குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முல்லைத்தீவு துணுக்காயில் இருந்து ஆரோக்கியபுரம் கிராமம் வரை பஸ் சேவையினை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் வ.கமலேஸ்வரனிடம் ஆரோக்கியபுரம் கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நேற்று 19.01.2017 குடிநீர்த்திட்டத்தினை தொடக்கி வைப்பதற்கு வருகை தந்த பிரதி அவைத் தலைவரிடமே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 125 வரையான குடும்பங்கள் தமது கிராமத்தில் வாழ்வதாகவும் ஆரோக்கியபுரத்திற்கும்; துணுக்காயுக்கும் இடையிலான இருபத்தியிரண்டு கிலோமீற்றர் தூரத்திற்கு கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக பஸ் சேவை இடம்பெறுவதில்லை எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக துணுக்காய் பிரதேச செயலகம், நீதிமன்றம் ஆகியவற்றிற்கு சென்று வருவதில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாகவும், குறித்த வீதி வழியாக பஸ் சேவைகள் இடம்பெறாததன் காரணமாக, கிளிநொச்சி, திருமுறிகண்டி ஆகிய இடங்களுக்குச் சென்று மாங்குளம் வழியாக துணுக்காயை சென்றடைய வேண்டிய நெருக்கடி நிலைமை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆரோக்கியபுரத்திற்கும் துணுக்காயிற்கும் இடையில் பஸ் சேவையினை நடாத்துவதற்கு வழி செய்யுங்கள் என மக்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதன் போது கருத்துத் தெரிவித்த பிரதி அவைத்தலைவர் பஸ் போக்குவரத்து தொடர்பாக வடமாகாண போக்குவரத்து அமைச்சருடன் கலந்துரையாடுவதாகவும் கிராம மக்கள் சார்பாகவும் இலங்கை போக்குவரத்துச் சபை மாவட்ட முகாமையாளர், மாகாண முகாமையாளர் ஆகியோரிடமும் கடிதங்களை கையளியுங்கள் எனவும் தெரிவித்தார்.