Home இலங்கை பிரசவம் என்பது மரணத்தின் விளிம்பு – ‘வெட்கத்தின்’முடிவு – நிலாந்தி…

பிரசவம் என்பது மரணத்தின் விளிம்பு – ‘வெட்கத்தின்’முடிவு – நிலாந்தி…

by admin


ஒரு பெண்ணாகப் பிறந்து விட்டாலே கருப்பை எனும் உறுப்பு செயற்பட்டே ஆக வேண்டியது அவசியமாகிறது. மாதவிடாயையும், கருக்கட்டலையும் இந்தக் கருப்பையுடன் தொடர்புறுத்திப் பார்க்கலாம். மாதவிடாயாக இருக்கட்டும், இல்லையெனில் குழந்தைப் பிறப்பாக இருக்கட்டும், இவற்றில் ஒன்று நிகழாமல் போனாலும் பிரச்சினையாகப் பார்க்கப்படுகின்றது.

மாதவிடாயை எடுத்துக் கொண்டால், மாதவிடாய் வர முதலும் சரி, வந்த பின்னும் சரி ,வரா விட்டாலும் சரி, அது நிற்கும் காலத்திலும் சரி, நின்ற பின்னும் சரி அநேக பெண்களை உச்ச பட்ச வேதனைக்கு ஆளாக்கி விட்டுத் தான் செல்கிறது. ஆனால் இந்த வேதனையைப் பற்றிய புரிதல் ஆண்களிடம் இருப்பது மிக மிகக் குறைவு. சில ஆண்கள், ‘அதுக்கு நாங்க என்ன செய்வது! அது பெண்களின் பிரச்சினை” என்று ஒதுங்கி விடுவதனை நாம் சமூகத்தில் காணக் கூடியதாக இருக்கின்றது. இவர்களில் இருந்து சற்று வேறுபட்டு அந்த நாட்களில் ஆறுதலாக இருக்கும் ஆண்களும் இருக்கிறார்கள். இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு ஆதரவாகவும், அன்பாகவும், உறுதுணையாகவும், உடனிருப்பவர்கள் இருப்பது குறித்த பெண்ணின் உடல், உள நலத்துக்கு முக்கியமானதாகும்.

ஆனால் இக்கட்டுரை மாதவிடாயைப் பற்றி அன்றி பிரசவம் பற்றிப் பேசுகிறது.

தனது மனைவியை பிற ஆண்கள் ஏறெடுத்தும் பார்க்கக் கூடாது, தனது மனைவி கையில்லாத சட்டை, குட்டைப் பாவாடை போடக்கூடாது, அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும், குழந்தைக்குப் பால் கொடுக்கையில் மார்பகங்களை மறைக்க வேண்டும், மார்பு திறந்திருந்தால் பெருந்தவறு என ஒவ்வொரு தடவையும் தமது மனைவியரைப் பொத்திப் பொத்தி வைத்திருக்கும் ஆண்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை பிரசவத்தின்போது பெண்களுக்கு நடைபெறும் பிரச்சினைகள்.

எனது முதல் பிரசவம் 2013 இல் நிகழ்ந்தது.

ஒவ்வொரு கிளினிக்கின் போதும் நடக்க முடியாமல் முழு உடலையும் அசைத்தபடி போய் அமர்வதும், உயர்ந்த கட்டிலில் ஏறிப் படுத்து சட்டையைத் தூக்கி அடி வயிற்றை காட்டுவதும் நிகழும். அப்போது எல்லாம் எனக்கு மிகவும் ‘வெட்கமாகப்’ போய் விடும். ஆண் வைத்தியர் வேறு. எங்கே சட்டையைத் தூக்கும் போது ஏடாகூடமாக எதாவது தெரிந்து விடுமோ என கவனமாக இருப்பேன். ஆனால் அவரோ அதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் அடி வயிற்றில் கையை வைத்து அழுத்தி குழந்தையின் தலை இறங்கியுள்ளதா எனப் பரிசோதிப்பார்.

ஒரு தடவை கர்ப்பிணித் தாய்மார்களை பிரசவ அறையைப் பார்வையிட அழைத்துச் சென்றார்கள். உள்நுழையும் போது அப்போதுதான் பிரசவித்திருந்த ஒரு தாய் கட்டிலில் படுத்திருக்க, அவரது மார்பின் மேல் ரோஸா நிறத்தில் ஒரு சிசு சுருண்டு கிடந்தது. அதைப் பார்த்த மாத்திரத்திலேயே அழ ஆரம்பித்த நான் அதற்குள் இருந்து வெளி வரும் வரை நிறுத்தவில்லை. பயமா? அல்லது ஆனந்தமா? அற்புதமான தருணத்தை கண்ட நான் வெளியிட்ட உணர்வா? எதுவும் புரியவில்லை.

அன்று அந்தப் பெண்ணைத் தவிர வேறு தாய்மார் யாரும் உள்ளே இருக்கவில்லை. அதனால் அங்கு என்ன விதமான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்பதனைப் பற்றி நான் அறிந்து கொள்ள முடியவில்லை.

குறித்துத் தரப்பட்ட நாளும் வந்தது. அம்மாவின் துணையுடன் சென்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன். உடையை மாற்றி விட்டு வார்ட்டிற்குள் வருமாறு சொன்னார்கள். உள்ளாடைகள் ஏதுமற்று பெட் ஜக்கெட். லுங்கியை மட்டும் போட்டுக் கொண்டு, இரட்டைப் பின்னலுமாக பிள்ளைக்குத் தேவையான பொருட்கள் சகிதம் வார்ட்டுக்குள் அடியெடுத்து வைக்கிறேன்.

ஒரு ஒப்பாரிச் சத்தம் தான் என்னை வரவேற்றது. மருண்ட விழிகளுடன் திரும்பிப் பார்க்கிறேன். அங்கே ஒரு தாய் தலையில் அடித்துக் கதறிக் கொண்டிருக்க அருகில் இரு ஆண்கள் சோகத்தின் மொத்த ரூபமாய் நின்றிருந்தனர். கட்டிலில் சோர்வுடன் ஒரு பெண் கண்ணை மூடியபடி படுத்திருந்தாள். அனைவரின் பார்வையும் அவர்களையே மொய்த்திருக்க நான் மெதுவாக நகர்ந்து எனக்காக ஒதுக்கப்பட்ட கட்டிலை அடைகிறேன். கூடையை வைத்து விட்டு ஆசுவாசமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளியேற்றி மனதில் பதட்டத்தைக் குறைத்துக் கொண்டபின் அருகில் இருந்த ஒருவரிடம் என்ன என்று கேட்டேன். “அந்தப் பெண்ணுக்குப் பிறந்த பிள்ளை இறந்து விட்டது. வரும் போது துடிப்புடன் தான் இருந்தது டொக்டர் ஒபரேசன் பண்ண வராததால அது செத்துப் போச்சு” என்றார்.

இப்போது எனது இதயம் துடிக்கும் சப்தம் என் காதுகளின் சவ்வைக் கிழித்து விடும் போல் இருந்தது. கண்கள் கலங்கி கன்னத்தோடு வழிய அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டிருக்கிறேன். சற்று நேரத்தின் பின்னர் தான் என்னை தாதி அழைப்பதை உணர்ந்தேன். “வைத்தியர் பார்க்க வேண்டுமாம். அந்த அறைக்குள் போங்க” என்றார். நானோ இறந்த குழந்தையையும், குழந்தையை இழந்த அத்தாயையும் நினைத்தபடி உள் நுழைகிறேன்.

கட்டிலில் ஏறிப் படுக்கச் சொன்னார்கள். பெண் தாதியொருவரின் உதவியுடன் ஏறிப்படுத்தேன். கால்களை மடித்து செங்குத்தாக வைத்து காலை விரிக்கச் சொன்னார்கள். எனக்குள் பயம், பதட்டம், கூச்சம், அவமானம் எல்லாம் ஒன்று கூடித் தாக்கியதை உணர்ந்தேன். சற்று நேரம் அவர்கள் கூறிய விடயம் புரியாதது போல் நான் இருக்க, அந்தத் தாதியே என் உடலை செயற்படுத்தி அவர் சொன்ன நிலையில் வைத்தார்.

நான் அந்த வைத்தியரின் முகத்தையே பார்க்கிறேன். அவரோ என் பிறப்புறுப்பு வாசலையே பார்த்தபடி தனது இரு விரல்களை கொண்டு செல்ல சட்டென்று கால்களை இறுக்கி மூடிக் கொண்டேன். தாதியோ மிகவும் கடுப்பாகி “இப்படிச் செய்தால் எப்படிப் பார்ப்பது? விரியம்மா நேரம் போகுது” என்று சத்தமிட்டார். நான் தயங்கித் தயங்கி விரிக்க, தாதி தனது கைகளால் எனதுமுழங்கால்களை அழுத்திப் பிடித்திருக்க, வைத்தியர் இலாவகமாக விரல்களை உள் நுழைத்து, உட்புறமாகவே விரல்களை விரித்து வாசலின் விரிவு குழந்தை வெளி வரப் போதுமா என ஆராய்ந்தார்.  எனக்கோ அப்பகுதியில் வலி. அதை விட அவமானம், அருவருப்பு என மன அழுத்தங்கள். “இன்னும் விரியணும்!அதனால நாளை பார்ப்போம்” என்றபடி வைத்தியர் சென்றார். அந்தத் தலைமை வைத்தியரைத் தொடர்ந்து, அன்றைய நாள் மட்டும் இரு பயிற்சி வைத்தியர்கள் வேறு இதே செயற்பாட்டைச் செய்ய எனக்கோ இனி வேண்டாம் என்றாகி விட்டது.

மறுநாள் காலையில் வலியை ஏற்படுத்தும் மாத்திரையை வைத்து விட்டார்கள். பின்னேரம் வரை வலி வரவேயில்லை. மீண்டும் ஒரு மாத்திரை வைக்கப்பட்டது. வலி வரும் என்றார்கள். பார்க்க வந்த அம்மாவிடம் கேட்கிறேன் “எப்படி வலிக்கும்? அந்த வலி வந்தால் சொல்லச் சொன்னார்கள்” என்றேன். “மாதாமாதம் எப்படி வலிக்குமோ அதே போல தான்! ஆனால் கொஞ்சம் அதிகமாக” என்றார். “சரி பார்ப்போம்” என்று நான் காத்திருக்கிறேன்.

எனக்கு முன்னால் ஒரு பெண், பிள்ளைப் பேற்று அறைக்குச் செல்லும் முன், நடக்கச் சொன்னதால் நடந்து கொண்டிருந்தாள். சற்று நேரத்தில் அவளின் கால்களுக்கிடையில் இருந்து குருதி வடிய அவள் வீறிட்டு அழத் தொடங்கினாள். எனக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. அருகில் செல்லவும் பயமாக இருக்க எட்டி நின்று பார்க்கிறேன். “பிள்ளட தலை வந்துட்டு, விழப் போகுது” என அவள் கத்த ஓடி வந்த தாதி சக்கர நாற்காலியில் அந்தப் பெண்ணை அமர்த்தி அழைத்துச் சென்றாள். அப்போதே நான் சந்தேகத்துடன் “குழந்தை வந்ததாகச் சொன்னாளே! அவளை இருத்தி அழைத்துச் செல்கிறார்களே” என்று அருகில் இருந்தவர்களிடம் சொன்னேன். அவர்களும் “ஆம்” போட்டார்கள்.ஆனால் யார் சொல்வது? சொன்னால் எங்களுக்கு எல்லாம் தெரியும் என்பார்கள்.

தலை கதிரையில் அழுத்தப்பட்டதால் பிள்ளை நீலமாக மாறி விட்டதாகவும், சிறப்புக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சற்று நேரத்தில் தகவல் வந்தது. இப்போது பயம் என்னைப் பிடித்துக் கொண்டது, மீண்டும் வீட்டிற்குப் போவேனா என்று. கணவருக்கு போன் போட்டு பேசுகிறேன். அப்பா அம்மாவை நன்றாக கண்ணாறக் கண்டு மனதில் பதித்துக் கொள்கிறேன். இதுவே எனது இறுதி நாளாக அல்லது எனது குழந்தையின் இறுதி நாளாக இருக்கலாம். அவ்விதம் நடந்தால் என்ன செய்வது? இவ்விதமாக சிந்தித்தபடி இருக்கிறேன்.

இரவு எட்டு, ஒன்பது மணியாகிறது. அடிவயிற்றில் மாதவிடாய் வருவதற்கு முன் ஏற்படுவது போன்ற ‘சுள்’என்ற வலி. சிறிது சிறிதாக அதிகரித்து உச்சம் தொட நான் ஓவென பெருங்குரலெடுத்து அழுகிறேன். அருகில் இருந்தவர்கள் தாதியை அழைத்து வர, அவரோ மிகவும் சாதாரணமாக வந்து “இப்ப லேபர் வோட்டில் கன பேர் இருக்கிறாங்க. உங்களையும் கொண்டு போக ஏலாது. பேசாமல் படுங்க காலையில பார்ப்போம்” என்றார். எனக்கோ வலியில் உயிர் போகிறது. எனக்காக அருகில் இருந்தவர்கள் சிபாரிசு செய்கிறார்கள். ஆனால் அந்தத் தாதி எனக்கு ஒரு ஊசி போட்டு விட்டு “கொஞ்சம் தூக்கம் வரும். தூங்குங்க. காலையில் பார்ப்போம்” என்று கடந்து சென்று விட்டார்.

தூக்கத்தின் ஊசி வேலை செய்ய அதையும் மீறி வலி என்னை பதறடிக்க நான் பட்ட அவஸ்தையை சொல்ல வார்த்தைகள் இல்லை. இறுதியாக எனது அழுகை தாதியின் தூக்கத்தைக் கெடுத்திருக்க வேண்டும். போய் ஒரு பெண் வைத்தியரை அழைத்து வந்தார். அவரோ “எழுந்து வாங்க! வாசலைப் பார்ப்போம்” என்றார். இது வேறயா என்று நினைத்தபடி, முடியாமல் தள்ளாடி, லுங்கி நழுவ நழுவ நடந்து போய்ப் படுத்தேன். வாசலில் கைவிட்டுப் பார்த்தபின் “எனிமா கொடுத்து லேபர் வோட்டுக்கு அனுப்புங்க” என்றார். அப்படிச் சொன்னதே பெரிய ஆறுதலாக இருந்தது. இனி குழந்தையை எடுத்து விடுவார்கள், வலி போய் விடும் என்ற நம்பிக்கையில் தயாராகிறேன்.

லேபர் வோட் அன்று பார்த்தது போல் இல்லாமல் பத்துக் கட்டிலிலும் பத்துப் பெண்கள் கத்திக் கொண்டும், அரற்றிக் கொண்டும், கத்தி ஓய்ந்தும், மயக்க நிலையிலும் இருந்தார்கள். அவர்களின் கத்தலையும், கதறலையும் யாரும் பொருட்படுத்தவில்லை. அழுதழுதும் பிள்ளை அவள் தானே பெற வேண்டும். எனக்கு வலி மறந்து அங்கிருந்த பெண்களின் நிலை தான் ஆச்சர்யமாக இருந்தது. மேல் சட்டையுடன் அல்லது மேட் சட்டையின்றி, கீழ்பகுதியில் லுங்கியை விரித்து வைத்திருந்தார்கள். கிட்டத்தட்ட அனைவருமே நிர்வாணக் கோலம் தான். இரண்டு ஆண் வைத்தியர்கள், மூன்று பெண் வைத்தியர்கள், ஏனைய தாதிகள் என அனைவரும் புடை சூழ அந்த அறை ஒரு சித்திரவதைக் கூடம் போல் காட்சியளித்தது.

ஒரு ஓரமாக இருந்த கட்டிலில் ஏறிப் படுக்கச் சொன்னார்கள். தூக்கக் கலக்கம் வேறு, வலி வேறு. இரண்டையும் ஒரே சமயத்தில் சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் நான். படுத்தபின் சுற்றும் முற்றும் நோக்குகிறேன். ஒவ்வொரு பெண்ணும் பலம் கொண்ட மட்டும் கத்தியபடி தங்களது பிள்ளை வெளி வர முக்கிக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு பெண் தனது இரு முழங்கால்களையும் மடித்து தனது நெஞ்சுப் பகுதிக்கு இழுத்துக் கொண்டிருக்க, அவளது பிறப்புறுப்பின் வாசலில் ஒரு ஆண் வைத்தியரும், இரு தாதியரும் நின்று கொண்டு ” முக்கு முக்கு” என குரல் கொடுக்க, அந்தப் பெண்ணும் முடியுமட்டும் முயன்று கொண்டிருந்தாள். இன்னுமொரு பெண் கால்களை அகல விரித்து வைத்துக் கொண்டு அங்கிருந்த ஆண் வைத்தியரிடம் ” வந்து பாருங்க டொக்டர் பிள்ளை வந்திருக்கா என்டு. என்னால முடியல” என்கிறாள். அவரோ “பார்த்துக் கொண்டுதான் இருக்கிறன். இன்னும் நேரம் இருக்கு” என்கிறார். அதுவும் கணவரைத் தவிர வேறு ஆண்களுக்கு முகத்தைக் கூடக் காட்டாத பெண் அவர். இதையெல்லாம் பார்த்ததும் எனக்கு அழுகையே வந்து விடும் போல இருந்தது.

விட்டு விட்டு எழுந்த வலியால் எனக்கும் முக்கி வெளியே தள்ளி விட வேண்டும் என்ற உந்துதல் வர முக்க ஆரம்பிக்கிறேன். அப்போது அருகில் வந்த தாதி ” இப்ப முக்காதேயம்மா. கொஞ்சம் ஆக்கள் குறையட்டும்” என்றார். எனக்குப் புரியவில்லை. நானோ வாயை கைகளால் பொத்திக் கொண்டு எப்படியேனும் பிள்ளையை நானே முயன்று வெளியில் எடுத்து விட வேண்டும் என்று இருந்தது. இல்லையெனில் அந்தப் பெண்ணுக்குப் போல கால்களை மடக்கி மிகவும் வேதனைப் படுத்தி விடுவார்கள் என்று பயந்தேன். அப்பப்போ வெளியேறிய திரவம் மலமா? சலமா? குருதியா? என்னவென்றே தெரியவில்லை. இருப்பினும் மலம் எனில் திட்டுவார்களோ? இது என்னடா? மலம் கழிப்பது போல ஒரு உணர்வு என்று நினைத்தபடி அழுகையை அடக்கியபடி முக்குகிறேன்.

எனக்கோ யாரையாவது அல்லது எதையாவது பிடித்துக் கொண்டால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. ஆனால் யாரும் அருகில் வரவில்லை. பிடித்துக் கொள்ளவும் அந்தக் கட்டிலிலும் எதுவும் இல்லை. அது உயரமான கட்டில் வேறு. சற்றுப் புரண்டாலும் கீழே விழுந்து விடும் அபாயம் உண்டு. அப்படி விழுந்தால் நானோ அல்லது என் வயிற்றில் இருக்கும் பிள்ளையோ இறப்பது நிச்சயம். தூக்கக் கலக்கத்திலும் வலியின் உக்கிரத்திலும் விழுந்து விடக் கூடாதே என்ற பதட்டத்துடன் ஒரு கையால் கட்டிலின் விளிம்பை பலமாக இறுக்கிப் பிடித்துக் கொண்டேன். சற்று நேரத்தில் வந்த தாதி, “நான் சொல்லச் சொல்லக் கேளாமல் முக்கிறியா அம்மா? எங்க பார்ப்பம்” என்றபடி லுங்கியை விலக்கி வாசலைப் பார்த்தார். பின்னர் “எழும்பி உள்ளே இருக்கும் அறைக் கட்டிலில் படு” என்றார்.

எனக்கோ யாரேனும் தூக்கிச் சென்று உதவினால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. ஆனால் நானாகவே மெதுவாக எழுந்து லுங்கியைப் பிடித்தபடி கால்களை பரப்பி வைத்து இடறி இடறி நடந்து உள் கட்டிலில் ஏறிப் படுத்தேன். ஒரு பெண் வைத்தியரும், ஒரு தாதியும் அருகே வர நான் கால்களைத் தூக்கியபடி, இறுதி முக்கலாக பலம் கொண்ட மட்டும் முயல குழந்தை வருவது போன்ற உணர்வு. அந்த நேரம் பார்த்து அந்த வைத்தியர் தன் கையில் வைத்திருந்த பிளேட்டால் ஒரு கிழி. குழந்தை வெளியில் வந்து விட்டது. பொறுத்துக் கொண்டு நின்ற ஒரு பொருளை எடுத்து விட்ட நிம்மதி ஒன்று என்னைச் சூழ, வெளியே வந்த பிள்ளையைத் தூக்கி “என்ன பிள்ளை என்று பாருங்கள்” என்றார்கள். “ஆண் பிள்ளை” என்றேன். என் திறந்திருந்த மார்பில் போட்டார்கள்.

வெள்ளை வெளேரென ஒரு மென் சவ்வு போன்ற இழையால் போர்க்கப்பட்டு கண்களைத் திறந்தும், மூடியும் பார்வையை அலைய விட்டபடி ஒரு சிறு உருவம் அவன். மூடிய கைகளால் என் முகத்தில் தடவிய போது எங்கிருந்தோ சுரு சுருவென ஓடி வந்து மார்பில் சேர்ந்தது ஒரு திரவம். மார்பின் காம்பை குழந்தையில் வாயில் நுழைத்து விட்டார் தாதி. பால் குடிக்க யார் தான் சொல்லிக் கொடுத்தார்களோ தெரியாது. தன் சின்னத் தாடையை அசைத்து அசைத்து உறுஞ்சி உறுஞ்சிக் குடிக்க ஆரம்பித்தான். அந்த சுகத்தில் இத்தனை நேரம் பட்ட வலி மறந்து விட்டது. ஆனாலும் இன்னும் பிறப்புறுப்புப் பகுதியில் எறும்பு கடிப்பது போன்ற உணர்வு. என்னவென்று பார்க்கிறேன். வைத்தியர் வெட்டிய பகுதியை தைத்துக் கொண்டிருக்கிறார்.

அருகில் இருந்த கட்டிலில் ஒரு பெண் தன் கால்களை பரப்பியபடி மார்பில் குழந்தையுடன் கிடக்கிறாள். அவளது பிரசவத்தைப் பார்த்த அந்த ஆண் வைத்தியர் தனது முழுக் கையையும் கிழிக்கப்பட்ட அவளது பிறப்புறுப்பு வாசலுக்குள் நுழைத்து கருப்பைக்குள் இருந்த கழிவுகளை வாரி இறைத்துக் கொண்டிருந்தார். அவளோ சிறு முனகலுடன் குழந்தையைப் பார்த்து பூரித்துக் கொண்டிருந்தாள். எனக்கு அவ்விதம் இந்தப் பெண் வைத்தியர் சுத்தம் செய்யவில்லையே என நினைத்துக் கொண்டேன். அவ்விதமாகவே அருகருகே வேறு பல பெண்கள் பிரசவத்திற்கும், பிரசவத்திற்குப் பின்னரான செயற்பாட்டிற்கும் என காத்திருந்தனர். அப்போது தான் என்னைப் போலவே எல்லாப் பெண்களும் ‘வெட்கம்’ என்ற ஒன்றைத் துறந்து விட்ட நிலையில் இருந்ததை உணர்ந்தேன். நிர்வாணம் என்பது வெட்கப்பட வேண்டிய ஒன்றல்ல என்பதையும் அதில் எமது வாழ்வே முடிவடைந்து விடுவது இல்லை என்பதும் புரிந்தது. இத்தனை பேர் பார்த்த பின்னும் இந்த உடலுடன் தான் வாழப் போகிறோம் என்றால் இதில் வெட்கப்பட என்ன உள்ளது.

“புருஷனுடன் படுக்கும் போது மட்டும் சுகமா இருந்துதோ?
சும்மா காலைத் தூக்கு இல்லாட்டி உனக்கு தூக்கத் தெரியாது பார்.
இது எத்தனையாவது? போதுமா?
அடுத்த முறையும் வருவியா?

முதலில் போய் குடும்பக் கட்டுப்பாடு பண்ணு மூன்று போதும்.” இவையெல்லாம் பிரசவ அறையில் கேட்ட வார்த்தைகள். முதல் பிரசவம் என்பதனாலோ என்னவோ என்னிடம் இந்தக் கேள்விகள் கேட்கப் படவில்லை என்றாலும், கேட்கப்பட்ட பெண்களின் மனநிலையை நினைத்துப் பார்க்கிறேன். மீண்டும் ஒரு பிரசவத்தை அவளால் நினைத்துப் பார்க்க முடியுமா? மீண்டும் வரக் கூடாது என அவள் அந்த அறையில் எடுக்கும் முடிவு நிறைவேறுமா? அதில் ஒரு பெண் எனக்கு “இனிப் பிள்ளையே வேண்டாம் அப்பா. என்னை விடுங்கள்” என்று ஒரே அழுகை. அப்போது அந்தத் தாதி “இது முதல் பிள்ளையா?” எனக் கேட்க “இல்லை நாலாவது” என்றாள். வலியையும் மறந்து சிரித்து விட்டேன்.

எல்லாம் முடித்து விட்டு என்னை எழுப்பாமலே உடலை சுத்தப்படுத்தி புது லுங்கி பெட் ஜெக்கட் மாற்றி சுத்தப்படுத்திய குழந்தையை மார்பில் கிடத்தி வார்ட்டுக்கு கொண்டு சென்றார்கள். அங்கிருந்த கட்டிலில் இறங்கிப் படுக்கச் சொல்ல நானும் சிரமப்பட்டு இறங்கினேன். இறங்கிய நொடியே கால்களில் குருதி வழிந்து நிலத்தை நனைக்க, தாதியோ ஓடி வந்து பிள்ளையைப் பிடித்தபடி, “போய் சரியாக துணியை வைத்துக் கொண்டு வா” என்றார். கழிவறை நோக்கி மெதுவாக தொடைகளை இறுக்கிப் பிடித்தபடி அடி எடுத்து வைத்துச் செல்கிறேன். குந்த முடியவில்லை. நின்றபடி துணியை சரி செய்து கொண்டு மீண்டும் வருகிறேன். ஒரு பேப்பர் துண்டைத் தந்து ஊற்றிய குருதியைத் துடைத்து விடும் படி கூறுகிறார்கள். குனிய முடியாமல் குனிந்து அந்தக் குருதியைத் துடைத்து எறிகிறேன். பின் கட்டிலில் அமர குழந்தையைத் தந்து விட்டுச் செல்கிறார். அழுகை தொண்டையை அடைக்க, மிகச் சிரமப் பட்டு கண்ணீரை அடக்குகிறேன். அருகில் இருந்தவர்கள் ஆறுதலாக பார்க்க, கொஞ்சம் ஆசுவாசப்பட்டேன்.

மதியம் பார்க்க வந்த கணவர், அம்மா, அப்பா அனைவரும் குழந்தையைப் பார்த்து ஆனந்தம் கொள்ள, எனது வலிகளும் மறைந்ததாகவே தோன்றியது. அப்போது அப்பா குழந்தையைச் தூக்கியபடி என் நெற்றியில் ஒரு முத்தம் வைத்தார். அது அவரது குழந்தையான நான் நலமாக இருப்பதை பார்த்து வந்த பாசம். கணவர் குழந்தையைப் பார்த்து மகிழ்ந்தாலும் தூக்கி வைத்திருக்க சங்கடப்பட்டார். மெல்லிய தோலின் அசைவு தூக்குவதற்கு பயத்தை உண்டு பண்ணியிருக்க வேண்டும். அவர்கள் சென்ற பின் குழந்தையை உறங்கச் செய்து விட்டு குளித்து வருமாறு சொன்னார்கள். குழந்தையை பாதுகாப்பாக படுக்கச் செய்த பின் அருகிருந்தவர்களை பார்க்கச் சொல்லி விட்டு குளித்து வந்தேன்.

பின்னேரம் வைத்தியர் வந்தார். “ஒவ்வொருவரும் வாங்க! வைத்தியர் பார்க்க வேண்டும்” என்றார்கள். மீண்டும் பிறப்புறுப்பில் தையல் சரியாக உள்ளதா என்று பார்க்க படுக்கச் சொன்னார்கள். இதற்கு முடிவே இல்லையா என்று நினைத்தபடி அந்த இறுதிச் சோதனையையும் முடித்துக் கொண்டேன். அப்போது, குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளுமாறு கூறினார்கள். நான் அதற்கு உடன்படவில்லை. கணவன் வெளிநாடு போகப்போகிறார் என்று கூறவும் ‘சரியென்று’ விட்டு விட்டார்கள்.

வீட்டிற்கு வந்தும் ஒரு மாதம் அளவிற்கு குருதியின் ஓட்டம் நிற்கவில்லை. அதே நேரம் மலசலம் கழிக்கையில் முக்கிப் போனால் தையல் பிரிந்து விடுமோ என்ற பயம். தையலின் இறுதித் துண்டு துருத்திக் கொண்டு வலியை ஏற்படுத்திக் கொண்டே இருந்தது. மெதுவாகத் தையலை தடவிப் பார்க்கிறேன். அது பிறப்புறுப்பில் இருந்து மல வாசல் வரை சென்றிருந்தது. சிறிதாக கத்தி கீறினாலே அழும் பெண்கள் இந்த வெட்டுக்களையும், வலிகளையும் எப்படித்தான் தாங்குகிறார்களோ என நினைக்க ஆச்சர்யமாகவும், பெருமையாகவும் இருந்தது. வீட்டில் இருக்கையில் நிலத்தில் தான் அதிகம் இருக்க வேண்டும் என்றும், கால்களை நீட்டி ஒன்றின் மேல் ஒன்றை போட்டு பிறப்புறுப்பை இறுக்கி மூடியபடி இருக்க வேண்டும் என்றும் சொன்னார்கள். காரணம் தளர்ந்திருக்கும் கருப்பைக்குள் பிறப்புறுப்பின் வழி காற்று நுழைந்தால் வயிறு ஊதி தொப்பை வைக்கும் என்றார்கள்.

எனக்கோ தையலின் இறுதி முடிச்சு குத்திக் குத்தி வலியை ஏற்படுத்தியதால் அவ்விதம் இருக்கவே முடியவில்லை. இதனால் பிரசவத்தின் பின்னர் சற்று தொப்பை போட்டு விட்டது. பிரசவத்தின் பின் அதிகமான பெண்களின் உடலில் மாற்றம் ஏற்படுவதும் இதனால்தான் என நினைக்கிறேன். பிரசவத்தின் பின்னரான வலிகள், குருதிப்போக்கிலிருந்து விடுபட ஒரு மாதத்துக்கு மேலாக ஆயிற்று. அந்த அனுபவங்களை நினைக்கையில் இப்போதும் மெய் சிலிர்க்கிறது. இனம்புரியாத ஒரு பயமும் எட்டிப் பார்க்கிறது.

குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடத்திற்குள்ளாக மீண்டும் ஒரு குழந்தையை சுமக்கும் நிலைக்கு தள்ளப்படும் பெண்கள் நிறையப் பேரை கண்டிருக்கிறேன். அந்த ஆண்கள் மேல் ஆத்திரம் ஆத்திரமாக வரும்.

எமது சமூகத்தில், தான் குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்ற முடிவை ஒரு பெண் எடுக்கக் கூடியதாக உள்ளதா? ஒரு பெண் அவ்வாறு வெளிப்படுத்தினால், அதற்கு ‘பிள்ளைகள் இல்லாமல் எவ்வளவு பேர் கவலைப்படுகிறார்கள், ஒரு ஆண் குழந்தை வேண்டும், ஒரு பெண் குழந்தை வேண்டும், ஆகக் குறைந்தது நான்கு பிள்ளைகளாவது பெற்றெடுக்க வேண்டும், பிள்ளைகள் என்றால் சந்தோசம் தானே, நீ பெத்துக் கொடு நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று பல காரணங்களை முன்வைத்து அவளது கருத்தினை நிராகரித்து விடுகின்றனர்.

குழந்தையை சுமந்து, பெற்றெடுத்து, பாலூட்டி வளர்க்கும் நிலையில் பெண்ணே இருப்பதனால் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக அவரது விருப்பத் தெரிவு இன்றியமையாதது. குழந்தைப்பேறோ, உடலுறவோ எதுவானாலும் பெண்ணினது உடல், உளநிலை, விருப்பு வெறுப்பு என்பனவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக பெண்ணின் உடலைப் பற்றியும், அவளது உள நலன் பற்றியும், அவள் வைத்தியசாலையில் படப்போகும், வேதனை, சங்கடங்கள் பற்றியும், பிரசவத்தின் பின்னர் குழந்தை வளர்ப்பிலும் அக்கறையெடுக்கும் ஆண்களே சிறந்த வாழ்க்கைத் துணையாக முடியும்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More