சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா, ரஸ்யாவைப் பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு 20,000க்கும் அதிகமாகப் பதிவாகி வருகின்ற நிலையில் பல்வேறு மாநிலங்களும் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் நேற்று மட்டும் அதிகபட்சமாக 25,000 பேருக்கு ஒரே நாளில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தியாவில் மொத்த பாதிப்பு 6 லட்சத்து 97 ஆயிரத்து 257 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பில் சர்வதேச நாடுகளின் பட்டியலில் நான்காவது இடத்திலிருந்த இந்தியா, ரஸ்யாவைப் பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்துக்கு நகர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 19,654 பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
29.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1.3 லட்சம் உயிரிழப்புகளுடன் அமெரிக்கா முதலிடத்திலும் 15.8 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 64,365 உயிரிழப்புகளுடன் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை நேற்று ஒரே நாளில் மட்டும் 6,555 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதனால் அம்மாநிலத்தில் மொத்த பாதிப்பு 2,06,619 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று வரை ஒரு லட்சத்து 11,151 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரு தினங்களாகச் சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என்றாலும் மதுரை உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
டெல்லியிலும் பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்கி இருக்கிறது. நேற்று ஒரே நாளில் 2,444 பேர் உட்பட இதுவரை மொத்தம் 99,444 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அனைத்து மாநிலங்களிலும் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்தியா மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. #கொரோனா #பாதிப்பு #இந்தியா #உயிரிழப்பு