குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை குறித்து தனக்கு தெரிந்தவற்றை தாம் கூறியதாக முன்னாள் இராணுவத் தளபதியும், அமைச்சருமான பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். லசந்த கொலை தொடர்பில் சரத் பொன்சேகாவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
சுமார் ஐந்து மணித்தியாலங்கள் வரையில் விசாரணை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. லசந்த கொலை தொடர்பில் விசாரணைகளுக்காக சரத் பொன்சேகா அழைக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. தமக்கு தெரிந்த விடயங்கைள கூறியதாகவும் இது குறித்து தம்மை அழைத்து விசாரணை நடத்தியமைக்காக நன்றி கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ ஆகியோருக்கு தெரிந்தே லசந்த கொலை செய்யப்பட்டுள்ளார் என தாம் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.