இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் வலியுறுத்தி உள்ளார்.
இந்த நாட்டை இதுவரையில் சிங்கள தலைவர்களே நிர்வகித்துவந்தபோதும் அவர்களுடன் கூட்டணி வைத்து தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வை காண்பதற்கான வாய்ப்பை தமிழ்த் தலைவர்கள் தவறவிட்டனர் எனவும், இந்த நிலைமைக்கு சிங்கள மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, தேர்தல் காலங்களில் 13 ஆவது திருத்தம் குறித்து கதைப்பது வழமையாகிவிட்டபோதும், 13 அல்லது 13 பிளஸ் என்பதெல்லாம் முக்கியம் அல்ல என வும், தமிழ் மக்களுக்கு நியாயத்தை வழங்குவதற்கான பேச்சுக்களை ஆரம்பித்து, இதோ, இந்தத் தீர்வைத்தான் எம்மால் வழங்க முடியும் என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நிர்வாகத்தை வழங்குவதா, அதிகாரங்களைப் பகிர்வதா என்பது பற்றியும் தெளிவுபடுத்த வேண்டும் எனக் குறிப்பட்ட அவர், இதற்கான பேச்சுகள் வருடக்கணக்காக தொடர்ந்தும் இடம்பெற்று வருவதனால், சாதாரண தமிழ் மக்களே பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அதிகாரத்தைக் கோரும் தமிழ் அரசியல்வாதிகள், கொழும்புக்கு சென்று சொகுசாக வாழ்கின்றனர் எனவும், சாதாரண மக்கள் பக்கம் நின்றே இந்தப் பிரச்சினைக்கான தீர்வை காணவேண்டும் எனவும் வலியுறுத்திய ஞானசார தேரர் இதற்காக தாமும் குரல் எழுப்ப உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.