இந்தியாவிலிருந்து கஞ்சா போதைப்பொருளை கடத்தி வந்த வடமராட்சியைச் சேர்ந்த படகு உரிமையாளர் தலைமறைவாகியுள்ள நிலையில் சிறப்பு அதிரடிப் படையிறயனரால் தேடப்பட்டு வருகிறார்.
கோரோனா அச்சுறுத்தல் காரணமாக படகு உரிமையாளரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை கடற்படையினரும் சிறப்பு அதிரடிப்படையினரும் முன்னெடுத்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“வடமராட்சி உடுத்துறை கடற்கரையில் இன்று காலை கஞ்சா பொதிகள் இரண்டு கடற்படையினரால் மீட்கப்பட்டன. எனினும் அதனைக் கடத்தி வந்தவர்கள் எவரும் காணப்படவில்லை. அந்தப் பொதிகளை இந்தியாவிலிருந்து எடுத்து வந்த படகும் மீட்கப்பட்டது. எனினும் படகின் உரிமையாளர் தலைமறைவாகியுள்ளார். கஞ்சா பொதிகள் இரண்டிலும் 50 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் உள்ளன.
கோரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் தீவிர நிலையை எட்டியுள்ளது. அதனால் அங்கிருந்து கஞ்சா பொதியை யாழ்ப்பாணத்துக்கு கடத்தி வருவோரால் கோரோனா பரவல் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த நிலையிலேயே படகு உரிமையாளரைக் கைது செய்யும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் ஒத்துழைப்பும் தேவை” என்று சிறப்பு அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.