கொரோனா வைரஸை கண்டறியும் சோதனைகளின் எண்ணிக்கையை அரசாங்கம் அரசியல் இலாபத்திற்காக வேண்டுமென்றே குறைத்து, மக்களை பலிக்கொடுக்க முனைவதாக சுகாதார நிபுணர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தொற்றாளர்களை அடையாளம் காணும் பரிசோதனைகளை மேற்கொள்ளும்போது, அதிகமான நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும், இதுபோன்ற நிலை முன்னதாகவே ஏற்பட்டால், அரசாங்கத்தால் தேர்தலை நடத்த முடியாமல் போகுமெனவும் அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“பி.சி.ஆர் சோதனைகள் மற்றும் நோயறிதல் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டால் நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும். அவ்வாறு இடம்பெறுமானால் அரசாங்கம் தேர்தல் நடவடிக்கைகளில் இருந்து விலக வேண்டியிருக்கும். அதிலிருந்து விடுபடவே சோதனைகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளது. அரசாங்கம் வேண்டுமென்றே பரிசோதனைகளை குறைத்துள்ளது. சுகாதார அமைச்சும் வேண்டுமென்றே அவ்வாறு செயற்படுகின்றது”
தேசிய தொழிற்சங்க முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சமன் ரத்னப்பிரிய, நேற்றைய தினம் ராஜகிரியாவில் சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தற்போது சுமார் 65 பி.சி.ஆர் சாதனங்கள் காணப்படுவதாக தெரிவிக்கும் அரச தாதியர் சங்கத்தின் தலைவர் இதுபோன்ற 10 சாதனங்களில் மாத்திரமே தற்போது பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் வலியுறுத்தியுள்ளார்.
“ஐம்பத்தைந்து உபகரணங்கள் செயலிழந்துள்ளன. இயங்கும் நிலையில் உள்ள 10 இயந்திரங்களில் அவற்றின் அதிகபட்ச திறன் பெற்றுக்கொள்ளப்படவில்லை.” நோயறிதல் சோதனைகளை நடத்துவதை அரசாங்கம் வேண்டுமென்றே நிறுத்தியுள்ளதாக சமன் ரத்னப்பிரிய குற்றஞ்சாட்டுகின்றார்.
மேலும், நாட்டில் தினசரி மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கையும் 500-600 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.
இலங்கையை விட குறைவான சுகாதார வசதிகளைக் கொண்ட நாடுகள் கூட கொரோனா தொற்றை கண்டறியும் பரிசோதனைகளை அதிகளவில் மேற்கொண்டுள்ளதாக சமன் ரதனப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
“நாட்டின் தற்போதைய நிலவரப்படடி, இலங்கை சுமார் ஒரு இலட்சத்து முப்பதாயிரம் பரிசோதனைகைளை மேற்கொண்டுள்ளது. நேபாளம் குறைவான சுகாதார வசதிகளைக் கொண்ட நாடு. அந்த நாடு ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளது. மலேசியா எட்டு இலட்சம் பரிசோதனைகளையும், தாய்லாந்து ஆறு இலட்சம் பரிசோதனைகளையும் மேற்கொண்டுள்ளது.” #கொரோனா #சோதனை #குற்றச்சாட்டு #சுகாதாரநிபுணர் #பி.சி.ஆர்