குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் கிடைக்காதமையினால் நாட்டுக்கு நட்டம் ஏற்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்கு இணங்காத காரணத்தினால் வரிச் சலுகைத் திட்டம் கிடைக்கவில்லை எனவும் அவ்வாறு வரிச் சலுகைத் திட்டம் அன்று வழங்கப்படாமையினால் நாட்டுக்கு எவ்வித நட்டமும் ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு சுகதாச உள்ளக விளையாட்டரங்களில் நடைபெற்ற ஜே.என்.பியின் விசேட மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போதைய அரசாங்கம் இந்த சலுகைத் திட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்காக நாட்டை அழிவுப்பாதையில் இட்டுச் செல்கின்றது என குற்றம் சுமத்தியுள்ள அவர் அரசாங்கம் நாட்டின் அனைத்து வளங்களையும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதுடன், பிரிவினைவாதத்தையும் போசிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் இந்த வெட்கம் கெட்ட செயலை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.