தோட்ட தொழில்களில் பெண்களே அதிகம் தொழில் புரிந்து வருகின்றனர்;. குடும்பத்தில் பெண்களின் தலைமைத்துவமே மேலோங்கி காணப்படுகின்றது. அனைத்து குடும்ப பொறுப்புக்களும் பெரும்பாலும் பெண்களே மேற்கொள்கின்றனர். மலையகத்தில் தேயிலை, இறப்பர் போன்ற தோட்ட தொழில்களிலும், வெளிநாடுகளில் வீட்டுப் பணிப்பெண்களாகவும், ஆடை தொழிற்சாலைகளிலும் வேலை செய்பவர்களாக மலையக பெண்களின் வாழ்க்கை நிலை காணக்கூடியதாக உள்ளது. பிள்ளைகளை தோட்ட பிள்ளை பராமரிப்பு நிலையத்தில் விட்டுசென்று காலை முதல் மாலை வரை பனி, வெயில், மழை எனப் பாராது உழைக்கின்றார்கள்.
இரத்தம் குடிக்கும் அட்டைகள், நித்தம் கொப்பளித்த விரல்கள், கொழுந்து பறித்து மரத்துபோன கைகள், கொழுந்து பறிச்சே மரக்கட்டை போல் இப் பெண்களின் வாழ்வு காலம் இரத்த வியர்வை சிந்துகின்றது. தோட்டதில் தலையில் சுமையுடன் மலை உச்சிவரை ஏறி இறங்கும் இப் பெண்கள் புதுமை பெண்கள் மட்டுமல்ல வலிமை நிறைந்தவர்கள் என்று தான் கூறவேண்டும். வாழ்வு காலத்தில் உழைப்பு ஒன்றுதான் ஓயாது இவர்களின் வாழ்க்கையில் தொடருகின்றது. பொருத்தமான உடைகள் இல்லை, சரியான பாதுகாப்பு இன்றி மலைகளில் இருந்து வீழ்ந்து எழுந்தும் நாளாந்தம் உழைக்கும் மலையக பெண்கள். வெயிலிலும் உயரமான மலைச்சரிவுகளில் ஏறி நின்று கொழுந்து பறிக்கும் தோட்ட தொழில் புரியும் இப் பெண்களுக்கு முறையான சலுகைகள் தோட்ட நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்;.
மஸ்கெலியா கார்மோர் தோட்டத்தில் தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த சின்னையா தெய்வானை 56வயதான மூன்று பிள்ளைகளின் தாய் 2018 ஒக்டோபர் 5திகதி சுமார் 100அடி உயர் மலையில் பள்ளத்தில் வழுக்கி விழுந்து பலியான சம்பவம் இன்று நினைத்தாலும் கண் கலங்குகின்றது. உயிரை பனையம்வைத்த உழைப்பு மலைச்சரிவும், குழவி கொட்டிடும், விஷப்பூச்சி தீண்டும், வேலைத்தளம் பொருத்தமான பாதுகாப்பின்மையை தெரிந்தும் மலை வாழ் பெண்கள் குடும்ப சுமையுடன் உழைக்கின்றனர்.
விடிவு….?
குடியிருப்பு வசதி, சுகாதார வசதி, தண்ணீர் வசதி, மற்றும் போக்குவரத்து வசதிகள் அற்றும் தம் நாளாந்த வாழ்க்கையினை கொண்டு செல்கின்றனர். தோட்டத்தில் தொழில் புரியும் பெண்கள் வேலைக்கு ஏற்ற பேசாக்கு உணவின்றியும் உடல் சக்தி இழக்கும் வரை உழைத்து உடல் ஆரோக்கியம் குன்றியவர்களாகவும் வாழ்கின்றனர். சுருங்கிய தோல் படிகட்டுகளிலும் ஒடுங்கிய பாதைகளிலும், கர்ப்பணி பெண்களும் தோட்ட தொழிலில் உழைக்கின்றனர். என்பது கவலைக்குரிய விடயமே. இயற்கை அனர்த்தம் மலையக பகுதிகளில் அதிகம் காணப்படுதுடன் மருத்துவமனைகள் இருந்தும் அவைகள் வசதிகளற்ற நிலையிலும், மூடப்பட்;ட நிலையிலும் காணப்படுகின்றன. தோட்ட தொழிலாளர்கள் நகர வைத்தியசாலைகளுக்கே செல்ல வேண்டியுள்ளது. தோட்ட வேலைகளின் போது ஏற்;படும் சுகயீனம் மற்றும் அனர்த்தங்களின் போதும் சரியான மருத்துவ வசதிகள் இன்றி பல பிரச்சினைகளை முகங்கொடுக்க நேர்ந்துள்ளமை நிதர்சனமான உண்மையே.
மலையக பாடசாலைகளில் கல்வி வசதி வாய்ப்பு குறைவாகவே காணப்படுகின்றது. கல்வி வசதியற்ற தோட்ட பாடசாலை ஆசிரியர் பற்றாக்குறைகள் கணித விஞ்ஞான பாடத்திற்கான உயர் பாடசாலைகள் ஓரிரண்டும் காணப்படுவதுடன் இரத்தினபுரி மாவட்டத்தில் அவையேனும் ஒன்று மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. நூலக வசதிகள் அற்ற நிலையிலும் எமது சமூகம் காணப்படுகின்றன என்பது சுட்டிக் காட்ப்படவேண்டிய விடயமாகும். அதில் மலையக தாய்கள் தாம் பட்ட கஷ்டத்தினை பிள்ளைகள் பெற கூடாது என்று இரத்தம் சிந்தி உழைத்தும் கண்ணீர் வடித்தும் பிள்ளைகளை படிக்க வைக்கின்றார்கள் என்பது கவலைக்குரிய விடயமாகும்.
விடிவு?
சுயதொழில் வாய்ப்பற்ற நிலை, குடும்ப வன்முறை, வேலைத்தள வன்முறை, மாதருக்கான மரியாதையின்மை அன்று முதல் இன்று வரை காணப்படுகின்றது. உரிமைக் கோரலுக்கான உணர்;வுகளை ஆட்டிப்படைக்கும் ஆதிக்கம் மற்றும் இடையூறுகளும், வேலை நிறுத்தங்களும், அச்சுறுத்தும் செயற்பாடுகளும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. மலையக சமூகத்தில் தோன்றுகின்ற பொதுவான சிக்கல்கள், பிரச்சினைகள், குழப்பங்கள், முறைக்கேடுகள், ஒடுக்குமுறைகள், சட்ட மீறுகைகள், பிறழ்வு நடத்தைகள் போன்றவற்றை சமூகப்பிரச்சினையாக காணலாம்.
பெண் பிரச்சினைகளை பற்றி பேசுதல் மற்றும் சமூக நீதி, அடக்குமுறை, சிறுவர் உரிமை தொடர்பாக உரையாடுதல் என்பது முக்கியமானதாகும். மலையகத்தில் பல அரசியல் கட்சிகள் தவறாது வேட்பாளராக போட்டியிடுதல் தேர்தல் காலங்களில் மட்டும் மக்களை தேடி வருதல் கண்கூடாக கண்ட காட்சியாக இருக்க இவர்களின் பிரச்சினைகளை மட்டும் பார்த்துவிட்டு கண்மூடி செல்கின்றார்கள். எனவே மலையக பெண்களின் குடும்பத்தில் இவ்வாறான பல்வேறு சிக்கல் நிலை காணப்படுகின்றதுடன் மலைய பெண்கள் அரசியலில் பங்குபற்றுவதற்கும், பெண் தலைத்துவத்திற்கும் மற்றும் தீர்மானம் எடுக்கும் செயன்முறை மேற்கொள்ள வாய்ப்பற்ற நிலை காணப்படுகினறது. உயர்மட்ட பதவிகளில் ஆண்கள் இருக்கின்றமை பெண்கள் உயர் பதவிகளுக்கு வந்தால் எமக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை போன்ற மனோபாவங்களும் காணக்கூடியதாக உள்ளமை சுட்டிக் காட்ப்படவேண்டிய விடயம். இத்தகைய சமூக பிரச்சினைகளை கண்ணாடிபோல் மக்களுக்கு எடுத்துக்காட்டி மக்களை விழிப்புணர்வு அடையச் செய்யும் செயற்பாடுகளும் நம்பிக்கையூட்டும் மாற்றுவழிகளும் இன்று வரை கேள்விக்குரியே ???????????
சகாயராஜா புஸ்பலதா
கிழக்குப் பல்கலைக்கழகம்,
இலங்கை.
ஒரு கோப்பை தேநீர்
விடியற் காலை விழிப்பு
நித்திரை மறக்க வைக்கும்
கையில் தேநீர் கோப்பை
காலை உணவாக
எத்தனை வீட்டில்
ஒரு கோப்பை தேநீர்
ஒரு கோப்பை தேநீரே
செமிக்கும் அளவிற்கு
கொழுந்து மலையில்
கலங்கிய கண்களை
துடைத்தவண்ணம்
எண்ணி மீண்டும்
கொழுந்து பறிக்கும்
கொப்பளித்த கைகள்
தேயிலை தூள்
மனம் மணக்கும்
மாடி வீட்டிலும்
வெளிநாட்டிலும்
கைக்கு எட்டிய
தேயிலை தொழிலாளிகளோ
கண்டிரா அச்சுவை
ஒரு கோப்பை தேநீர்
எடை எடையாய் கொழுந்து
எடுக்கும் தொழிலாளிக்கு
கழிவு தேயிலைத்தூள்
சுவையில்லா தேநீராக
கொடுக்க
சுரண்டும் வர்க்கத்திற்கோ
சுப்பர் தேயிலைத்தூளுடன்
ஒரு கோப்பை தேநீர்
வறுமை பிடியில் தப்பிக்க
ஓடிய ஓட்டம் திரும்பிய
நாட்கள் ஏராளம்
சோர்வடைந்த கால்கள்
கண்ணால் கண்டிராத
நல்ல சுவைகொண்ட
ஒரு கோப்பை தேநீர்
ச.புஸ்பலதா
கிழக்குப் பல்கலைக்கழகம்,
இலங்கை.