ஜல்லிக்கட்டு சட்டம் தமிழக சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு கூடிய தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தில், ஜல்லிக்கட்டு தொடர்பான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடத்தப்பட்ட நிலையில் ஒரு மனதாக இந்த சட்டம் நிறைவேறியது. இதன் மூலம் ஜல்லிக்கட்டு வேண்டி ஒரு வாரத்திற்கும் மேலாக, போராடியவர்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சத்தில் உள்ளதால் இன்று மாலை சிறப்பு அமர்வு ஏற்பாடு செய்ய சட்டசபை அலுவல் ஆய்வு குழு முடிவு செய்திருந்ததன்படி, மாலை 5 மணிக்கு சட்டசபை சிறப்பு கூட்டம் ஆரம்பித்தது.
இதையடுத்து, தமிழக முதலமைச்சர் பன்னீர்செல்வம், விலங்குகள் வதை தடுப்பு சட்டம் (தமிழ்நாடு திருத்தம்) 2017ல் திருத்தம் செய்யும் வகையில் சட்ட மசோதாவை தாக்கல் செய்து அதனைத் தொடர்ந்து உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து அனைவரும் கருத்து தெரிவித்த நிலையில் கருத்துக்களையும் விமர்சனங்களையும் எடுத்துரைத்த அதேநேரம் சட்டத்திற்கு ஆதரவை தெரிவித்து ஒரு மனதாக சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டம் அடுத்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் கொடுத்த பின்னர் நிரந்தரமான சக்தி பெற்றதாக மாறிவிடும் என சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மக்கள் புரட்சி வென்றுள்ளது.
மேலும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது