இளந் தலைமுறையால் தமிழ் அரசியலில் பெரிதும் விரும்பப்பட்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து நீக்க கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளததாக யாழில் இருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்று வியாழக்கிழமை இரவு கூடிய மத்திய குழு, சட்டத்தரணி வி.மணிவண்ணனை முன்னணியின் பதவி நிலைகளிலிருந்து நீக்கும் இந்த முடிவை எடுத்ததாகவும், இந்தக் கூட்டத்துக்கு மத்திய குழு உறுப்பினரான சட்டத்தரணி வி.மணிவண்ணன் அழைக்கப்பட்டிருக்கவில்லை எனவும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. (தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இதனை உறுதிப்படுத்தவில்லை)
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் மூன்றாவது முறையாகவும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் போட்டியிட்டார். எனினும் அண்மையக் காலமாக, சட்டத்தரணி வி. மணிவண்ணனை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி தனது நடவடிக்கைகளில் இருந்து புறந் தள்ளியதாக குற்றச்சாட்டுக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டு வந்தன. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பாரிய வாதப்பிரதிவாதங்கள் தொடர்கின்றன.
குறிப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர்கள், நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மணிவண்ணனுக்காக பரப்புரைகளை முன்னெடுக்கக் கூடாது என்ற பணிப்பும் தலைமையினால் விடுக்கப்பட்டதாகவும், சட்டத்தரணி வி.மணிவண்ணன் சார்பில் இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பரப்புரைக் கூட்டங்களுக்கும் முன்னணியின் உயர்மட்ட குழு குறுக்கீடு செய்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில் சட்டத்தரணி வி.மணிவண்ணனின் ஆதரவுத் தளம் 2020 பொதுத் தேர்தலில் அதிகரித்தமையும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்றுக்கு தெரிவானதில் மணிவண்ணனின் பங்கும் கணிசமாக இருந்தது என்பதும் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் மூன்றாம் நிலையைப் பெற்றுள்ளார்.
இத்தகைய சூழலில் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தொடர்பில் முடிவெடுக்க கட்சியின் மத்திய குழுவை செயலாளர் நேற்றிரவு கூட்டியிருந்தார். எனினும் நேற்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உத்தியோகபூர்வ அறிவித்தல் எதனையும் வெளியிடவில்லை.
மாறாக தன் எதிர்காலம் குறித்து, தனக்கு நெருக்கமானவர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள சட்டத்தரணி வி.மணிவண்ணனின், கட்சியின் தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டதாக கட்சியின் தலைமையால் அறிவிக்கப்படவில்லை எனவும், கட்சியினதும், தலமையினதும் நிலைப்பாடு உத்தியோகபூர்வமாக தனக்கு அறிவிக்கப்பட்ட பின்னரே தமது நிலைப்பாட்டை அறிவிக்க முடியும் என பதிலளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.