Home இலங்கை மாற்று அணியின் முன்னாலுள்ள பணி – நிலாந்தன்…

மாற்று அணியின் முன்னாலுள்ள பணி – நிலாந்தன்…

by admin

இம்முறை தமிழ் மக்கள் கூட்டமைப்பின் ஏகபோகத்தை நிராகரித்து இரண்டு மாற்று அணிகளுக்கு மூன்று இடங்களை வழங்கியிருக்கிறார்கள். கடந்த பதினோரு ஆண்டுகளாக தமிழ் அரசியலில் கூட்டமைப்பு ஏக பிரதிநிதிகளாக  வீற்றிருந்தது. கூட்டமைப்பிலிருந்து விலகிச் சென்றவர்கள் வெல்ல முடியாது என்றும் மார் தட்டியது. ஒரு தும்புத்தடியை மக்கள் முன்வைத்து அதற்கு வாக்களியுங்கள் என்று கேட்டாலும் தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என்று இறுமாப்போடு இருந்தது. ஆனால் அந்த இறுமாப்பு இந்த முறை சோதனைக்கு உள்ளாகியிருக்கிறது. மாற்று அணியை சேர்ந்த மூவர் இம்முறை நாடாளுமன்றத்துக்கு செல்கின்றார்கள்.மாற்று அணியை பொறுத்தவரை இது வெற்றியின் தொடக்கம். தமிழ் அரசியலை பொறுத்தவரை இது மாற்றத்தின் தொடக்கமாக அமையுமா?

முதலில் மாற்று எதுவென்பதை அதன் சரியான பொருளில் விளங்கிக் கொள்ள வேண்டும். கூட்டமைப்புக்கு எதிராக நிற்பது மாற்று அல்ல. கூட்டமைப்பு செய்யும் எல்லாவற்றையும் விமர்சிப்பதும் மாற்று அல்ல. நாடாளுமன்றத்தில் கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ளும் எல்லாவற்றையும்  எதிர்ப்பதும் மாற்று அல்ல.அல்லது நாடாளுமன்றத்தில் கூட்டமைப்பின் நண்பர்களுக்கு எதிராக வாக்களிப்பது மாற்று அல்ல. மாற்று  இவை எல்லாவற்றையும் விட ஆழமானது. அது ஒரு புதிய பண்பாடு. அது ஒரு புதிய அரசியல் செயல் வழி. 2009-க்கு பின்னரான தமிழ் அரசியலை அதன் அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னெடுப்பதற்கு தேவையான ஓர் அரசியல் செயல் வழி. தமிழ் மக்களிடம் இப்பொழுது ஆயுதப்போராட்டம் இல்லை. மக்கள் இயக்கங்களும் இல்லை. இருப்பதெல்லாம் தேர்தல் அரசியல்தான். எனவே மாற்றத்தை அங்கிருந்தே தொடங்கலாம். எப்படித் தொடங்கலாம்?

மாற்றத்தை விரும்பும் தரப்புக்கள் தேர்தல் மூலம் மக்கள் ஆணையைப் பெறவேண்டும். அதை அதன் சரியான பொருளில் சொன்னால் மக்கள் அதிகாரத்தைப் பெற வேண்டும். அந்த மக்கள் அதிகாரத்தை வைத்துக் கொண்டு அடுத்த கட்டத்துக்குப் போக வேண்டும். இந்த இடத்தில் ஒரு விடயத்தைச்  சுட்டிக்காட்ட வேண்டும். தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளுக்கு கொடுக்கும் அதிகாரம் எனப்படுவது நாடாளுமன்றத்தில் பெருமளவுக்குச்  செல்லுபடியாகாது. அது பெரும்பான்மையினரின் நாடாளுமன்றம். அங்கே தமிழ் மக்களுக்கு மிக அரிதாகவே பேரம் பேசும் சக்தி கிடைக்கும். ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் அப்படி ஒரு பேரபலம் கிடைத்தது. ஆனால் இப்போதுள்ள ராஜபக்சவின் அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கு பேரபலம் இருக்கப் போவதில்லை. அதனால் நாடாளுமன்றத்தின் தீர்மானங்களை மாற்றும் சக்தி தமிழ் மக்களுக்கு இருக்கப் போவதில்லை. எனவே இந்த நாடாளுமன்றத்தையும் அதன் இயல்பையும் தமிழ் பிரதிநிதிகளுக்கு அதில் இருக்கக்கூடிய வரையறைகளையும் முதலில் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும். அப்படி என்றால் நாடாளுமன்றத்துக்கு போய் ஒரு பயனும் இல்லையா?

அப்படியும் சொல்ல முடியாது. பயன் உண்டு. நாடாளுமன்றத்தை ஒரு மேடையாகப் பயன்படுத்தலாம். தமிழ் பிரதிநிதிகள் தமது கருத்தை உலகத்துக்கு எடுத்துரைப்பதற்கு நாடாளுமன்றம் ஒரு மிகச் சிறந்த மேடை.விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் அண்மையில் ஆற்றிய உரைகள் நல்ல தொடக்கங்கள். எனவே குறைந்தபட்சம் நாடாளுமன்றத்தை ஒரு பிரச்சார மேடையாகவாவது பயன்படுத்தலாம். ஆனால் அதற்குமேல் ஆசைப்படும் அளவுக்கு இப்போது இருக்கும் நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களுக்கு பேரம் இல்லை.எனவே நாடாளுமன்றத்தில் ஒரு கட்டத்துக்கு மேல் எதையும் செய்ய முடியாது.ஆயின் அடுத்த கட்டம் என்ன?

அடுத்த கட்டம் எது என்பதனை மாற்று அணியின் இறுதி இலக்கு எது என்பதே தீர்மானிக்கின்றது. மாற்று அணியை சேர்ந்த இரண்டு கட்சிகளும் சமஸ்டி தீர்வை முன்வைக்கின்றன. அப்படி என்றால் அந்த சமஸ்டியை எப்படி அடைவது? சமஸ்ரிக்கு அரசாங்கம் ஒத்துக் கொள்ளாது. மாகாணசபைக்கு எதிரான ஒருவரான ஓய்வு பெற்ற ரியல் அட்மிரல் சரத் வீரசேகர  அதற்குப் பொறுப்பான ராஜாங்க அமைச்சராக  நியமிக்கப்பட்டிருக்கிறார். பதவியேற்றதும் அவர் பின்வருமாறு தெரிவித்திருக்கிறார்.. “ நான் 13 ஆவது திருத்தத்தை மிகக் கடுமையாக எதிர்த்தவன்.மாகாண சபைகள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டதை விதியின் நகைச்சுவையாகவே கருதுகின்றேன்.எந்த சந்தர்ப்பத்திலும் காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்கப்போவதில்லை என்பதை தெளிவாக கூறிக்கொள்கிறேன்” ஆயின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஒரு சமஸ்டிக் கட்டமைப்பை ராஜபக்சக்கள் தரப்போவதில்லை. அப்படி என்றால் அதை எப்படிப் பெறுவது?

இக்கேள்விக்கு விடை காண்பது என்றால் இலங்கைதீவில் இதுவரையிலும் முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகளை பற்றி ஒரு பிரேத பரிசோதனை வேண்டும். கடந்த தசாப்தங்களில் மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான சமாதான முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இரண்டு  சமாதான முயற்சிகள்தான் ஒப்பீட்டளவில் வெற்றி பெற்றன. அவற்றின் விளைவுகளும் நீண்டகாலத்துக்கு நீடித்திருந்தன. இவ்வாறு இரண்டு சமாதான முயற்சிகளை இனங்காணலாம். முதலாவது இந்திய-இலங்கை உடன்படிக்கை. இரண்டாவது நோர்வேயின் அனுசரணையுடனான ரணில்-பிரபாகரன் உடன்படிக்கை.

இதில் முதலாவது இந்திய இலங்கை உடன்படிக்கை. அதன் பிரகாரம் தான் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன.இன்று வரையிலும் நடைமுறையில் உள்ளன. மற்றது நோர்வேயின் அனுசரணையுடனான சமாதானம். இது கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் நீடித்தது. தமிழ் மக்களை ஒரு தரப்பாக ஏற்றுக் கொண்டு எழுதப்பட்ட ஓர் உடன்படிக்கை இது.

இந்த இரண்டு உடன்படிக்கைகளுக்கும் ஒரு பொது இயல்பு உண்டு. அது என்னவெனில் இவை இரண்டும் வெளித் தரப்புகளின் அழுத்தங்களால் அல்லது கண்காணிப்புகளால் நிறைவேற்றப்பட்டவைதான். இந்திய-இலங்கை உடன்படிக்கையை  அமுல்படுத்துவதற்கு இந்திய அமைதி காக்கும் படை நாட்டிற்குள் இறக்கப்பட்டது. ரணில்-பிரபாகரன் உடன்படிக்கையை கண்காணிப்பதற்கு இணை அனுசரணை நாடுகளின் தலைமையின் கீழ் ஸ்கண்டிநேவிய போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு இறக்கப்பட்டது. அதாவது இந்த இரண்டு உடன்படிக்கைகளையும் கண்காணிக்கவும் நடைமுறைப்படுத்தவும் வெளி அழுத்தம் அல்லது அனுசரணை அல்லது படைப் பிரசன்னம் அல்லது யுத்த நிறுத்த கண்காணிப்பு குழுக்களின் பிரசன்னம் போன்றன தேவைப்பட்டன. எனவே தொகுத்துப் பார்த்தால் வெளி அழுத்தங்களின் பின்னணியில்தான் இவ்விரு உடன்படிக்கைகளும் நிறைவேற்றப்பட்டன. அல்லது குறிப்பிடத்தக்க காலம் உயிர் வாழ்ந்தன.

இவ்விரண்டையும் தவிர மற்றொரு ஆகப்பிந்திய  தீர்வு முயற்சியையும் இங்கு சுட்டிக்காட்டலாம். ஐநாவின் அனுசரணையோடு முன்னெடுக்கப்பட்ட ஒரு தீர்வு முயற்சி அது.2015  ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட முப்பதின் கீழ் ஒன்று  தீர்மானமே அது. இத்தீர்மானத்தின் மூலம் இலங்கைதீவில் நிலைமாறுகால நீதியை  ஸ்தாபிப்பதற்கு அப்போது இருந்த ரணில்-மைத்திரி அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. நிலைமாறுகால நீதியின் மீள நிகழாமை என்ற பிரிவின் கீழ் இலங்கைதீவின் யாப்பை மாற்றவும் ஒப்புக்கொண்டது.புதிய யாப்பு இனப்பிரச்சினைக்கான தீர்வையும் உள்ளடக்கியிருக்கும்.அதன்படி நாடாளுமன்றம் சாசனப்  பேரவையை மாற்றப்பட்டு யாப்புருவாக்க முயற்சிகள் தொடக்கப்பட்டன. இந்த முயற்சிகளை ஐநா தொடர்ச்சியாகக் கண்காணித்தது. இலங்கை தீவை தன்னுடைய செல்வாக்கு வளையத்துக்குள் ஐநா தொடர்ச்சியாகப் பேணியது. ஐநாவின் சிறப்பு தூதுவர்களும் ஏனைய  தூதுவர்களும் இலங்கைக்குள் அடிக்கடி வந்து போயினர். தவிர ஐநாவை  பின்னிருந்து இயக்கிய மேற்கு நாடுகளின் தலைவர்களும் தூதுவர்களும் இராஜதந்திரிகளும் நிலைமாறுகால நீதியை முன்னெடுக்குமாறு அரசாங்கத்தின் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் அழுத்தங்களை பிரயோகித்தார்கள். ஆனால் அம்முயற்சிகள் அனைத்தையும் மைத்திரிபால சிறிசேன 2018 ஒக்டோபர் மாதம் தோற்கடித்து விட்டார்.

இலங்கைத்தீவின் நாடாளுமன்றம் நிலைமாறுகால நீதியை ஐநா பரிந்துரைக்கும் அதன் முழுமையான வடிவத்தில் ஏற்றுக்கொள்ளாது என்பதே கடந்த ஐந்து ஆண்டுகால அனுபவம் ஆகும். அதிலும் குறிப்பாக ரணில் மைத்திரி அரசாங்கத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை எனப்படுவது ஒப்பீட்டளவில் பல்லினத் தன்மை மிக்க மகத்தான ஒரு மக்கள் ஆணை. அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்துக்கொண்டு ஐநா இலங்கைத்தீவில் நிலைமாறுகால நீதியை முன்னெடுக்க முயற்சித்தது. ஆனால் அது தோற்கடிக்கப்பட்டது. இப்பொழுது இருப்பதோ தனிச் சிங்கள வாக்குகளால் கட்டி எழுப்பப்பட்டது என்று காட்டப்படும் ஒரு மூன்றில் இரண்டு பெரும்பான்மை. இந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்துக்கொண்டு நிலைமாறுகால நீதியை முன்னெடுக்க முடியுமா?

அது கஷ்டம் என்ற காரணத்தால் தான் சம்பந்தர் வெளி அழுத்தத்தை வேண்டி நிற்கிறார். இந்தியா எம் பின்னால் நிற்கிறது என்று அவர் கூறுவது அதனால்தான். அதாவது நிலைமாறுகால நீதியை அதன் சிதைந்த வடிவத்திலாவது  நடைமுறைப்படுத்துவதற்கு வெளிநாடுகளின் அழுத்தம் தேவை என்று பொருள்.

மேற்கண்ட மூன்று அனுபவங்களையும் தொகுத்து சிந்தித்தால் ஒன்று தெளிவாக தெரியவரும். வெளி அழுத்தம் அல்லது மூன்றாவது தரப்பின் தலையீடு என்ற ஒரு விவகாரம் இல்லையென்றால் இலங்கைத்தீவில் இரண்டு இனங்களுக்கும் இடையே இணக்கம் ஏற்பட வாய்ப்பில்லை. அப்படி என்றால் அந்த அழுத்தத்தை எப்படி உருவாக்குவது? அதுவும் அரசற்ற  தரப்பாகிய  தமிழ் மக்கள் அதை எப்படி உருவாக்குவது? நாடாளுமன்றத்தில் நெருப்பைக் கக்கும் உரைகளின் மூலம் மட்டும் அது உருவாகாது. நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகளைச் சந்தித்து விட்டுக்கொடுப்பற்ற  நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவதன் மூலம் மட்டும் அது உருவாகாது. அப்படி என்றால் இலங்கை அரசாங்கத்தின் மீது வெளித் தரப்புக்கள் நிர்ப்பந்தங்களைப் பிரயோகிப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

இதுதான் கேள்வி. இந்தக் கேள்விக்கு பொருத்தமான தீர்க்கதரிசனம் மிக்க விடையை கண்டுபிடிப்பதில் தான் மாற்று அணி என்பது ஒரு புதிய அரசியல் செயல் வழியைத்  திறக்க முடியும். கூட்டமைப்பு செய்தவை எல்லாம் பிழை  என்று கூறும் மாற்று அணி தமிழ் அரசியலை பயன் பொருத்தமான விதத்தில் அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதாக இருந்தால் முதலில் மேற்கண்ட கேள்விக்கு விடை கண்டுபிடிக்க வேண்டும்.

இதை இன்னும் கூர்மையாக கூறின் நாடாளுமன்றத்துக்கு வெளியே தான் மாற்று அணி அதிகம் வேலை செய்ய வேண்டியிருக்கும். நாடாளுமன்றத்துக்கு வெளியே என்பது நடைமுறையில் மூன்று பரப்புகளைக் குறிக்கும். முதலாவது தாயகம். இங்கு வெகுசன மையப் போராட்டங்கள். இரண்டாவது தமிழகம். அங்கே இந்திய நடுவண் அரசின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கும் போராட்டங்கள்;நகர்வுகள். மூன்றாவது புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகம். அங்கே ஐநாவை நோக்கியும் தலைநகரங்களை நோக்கியும் முன்னெடுக்கப்பட வேண்டிய ஒரு லொபி. இப்படியாக புது டில்லியை  நோக்கியும் ஏனைய தலைநகரங்களை நோக்கியும் ஒரு லொபியை முன்னெடுக்க வேண்டும். அதேசமயம் நடந்தது இனப்படுகொலையே என்பதை நிரூபிக்கத் தேவையான சான்றாதாரங்களை உலகம் ஏற்றுக்கொள்ளும் ஒரு முறைமைக் கூடாக முன்வைக்க வேண்டும். இதற்கு வேண்டிய ஒரு வழி வரைபடத்தை இரண்டு மாற்றுக் கட்சிகளும் இணைந்து உருவாக்க வேண்டும். இது மிகவும் முக்கியமான ஒரு முன்நிபந்தனை. இணைந்து உருவாக்க வேண்டும் என்பது. இதுவிடயத்தில் தனித் தனியாக நின்று தனி ஓட்டம் ஓடினால் கூட்டமைப்பு கடந்த 11 ஆண்டுகளாக தமிழ் மக்களை எங்கே கொண்டு வந்து நிறுத்தியதோ  அதே இடத்துக்கு தான் மாற்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளின் பின் தமிழ் மக்களை கொண்டு வந்து நிறுத்தும். எனவே ஐக்கியம் முக்கியம். இணைந்த செயற்பாடு முக்கியம். ஆகக்குறைந்தது ஏற்றுக்கொள்ளத்தக்க பொதுவிடங்களிலாவது ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அதற்கு வேண்டிய விடயப் பரப்புக்களை அடையாளம் காண்பதற்குரிய  உரையாடல்களை இப்பொழுதே  ஆரம்பிக்க வேண்டும். ஏற்கனவே தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர் சிலர் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அறிய முடிகிறது. அதைத் தமிழ் மக்கள் பேரவையும் உட்பட ஏனைய சிவில் அமைப்புக்கள் ஒரு நிறுவனமயப்பட்ட செயற்பாடாக மாற்றி மாற்று அணியின்மீது தார்மீக அழுத்தத்தைப் பிரயோகிக்க  வேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் தோற்காமல் இருப்பதென்றால் அதை இப்போதே உடனடியாகத்  தொடங்க வேண்டும்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More