ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சென்னையில் நேற்று நடைபெற்ற கலவரத்தில் போலீசாருக்கு கணிசமான பங்கு இருப்பது குறித்து பல்வேறு ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையில், உச்சநீதிமன்றம் நேரடியாக இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரிக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது.
தமிழக மாணவர்களும், இளைஞர்களும் ஜல்லிக்கட்டு வேண்டி, அறவழியில் போராட்டங்களை நடத்தி வந்தநிலையில் நேற்று காலை திடீரென மெரினா போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதையடுத்து அலங்காநல்லூர், கோவை நகரங்களிலும் தடியடி நடத்தப்பட்டது.
சென்னையில் பல வாகனங்கள், போலீஸ் நிலையங்களில் தாக்குதல் நடத்தப்பட்டன. தீக்கிரையாக்கப்பட்டன. விஷமிகள் மட்டுமின்றி, போலீசாரே தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டதற்கான வீடியோ ஆதாரங்கள் ஊடகங்களிலும், சமூக தளங்களிலும் வெளியாகியுள்ளன.
மாணவர்கள் போராட்டம் வெற்றிகரமாக முடியவடைய வேண்டிய நேரத்தில் அதை கொச்சைப்படுத்த இதுபோன்ற வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என சந்தேகம் எழுந்துள்ள ஒரு சூழ்நிலையில், பொதுமக்கள் அடைந்த இன்னலுக்காக, சென்னை உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றம் நேரடியாக தானாக முன்வந்து விசாரிக்கலாம் என தெரிவித்துள்ள சட்ட வல்லுநர்கள் இவ்வாறு விசாரிக்கும்போது அதற்கான மதிப்பும் அதிகமாக இருக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.