சட்டத்துறை ஆசிரியர்களாகப் பணியாற்றும் சட்டத்தரணிகள் தமது தனிப்பட்ட சேவையை (Private Practice) செய்வதற்கு ஒழுங்குபடுத்தப்பட்ட அனுமதியை வழங்கும் வகையில் சுற்றறிக்கையை சீராக்கம் செய்யப்படவேண்டுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுப்பது என்று அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது
அனைத்துப் பல்கலைக்கழகங்களின் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் “சூம்” நேரலை காணொலி தொழில்நுட்பத்தில் நேற்று திங்கட்கிழமை கலந்துரையாடியிருந்தனர் இதன்போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
சட்டத்துறையில் பணியாற்றும் சட்டத்தரணிகள் நீதிமன்றங்களில் முன்னிலையாவதைத் தடைவிதித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுற்றறிக்கை ஒன்றை கடந்த ஆண்டு இறுதியில் வெளியிட்டிருந்தது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையின் முன்னாள் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன், சட்டத்தரணியாக தனது தனிப்பட்ட சேவையை வழங்க தடைவிதிக்கும் வகையில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இந்த சுற்றறிக்கைக்கு எதிராகவும் தான் நீதிமன்றங்களில் முன்னிலையாவதைத் தடுக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவை எடுத்த தீர்மானத்துக்கு எதிராகவும் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றில் இடம்பெற்று வருகிறது.
இந்த நிலையில் சட்டத்துறை ஆசிரியர்களாகப் பணியாற்றும் சட்டத்தரணிகள் தமது தனிப்பட்ட சேவையை (Private Practice) செய்வதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வழங்கிய தடை தொடர்பில் ஆராய்வதற்கு அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் இன்று சூம் தொழில்நுட்பத்தில் கலந்துரையாடினர்.
இதன்போது சட்டத்துறை ஆசிரியர்கள் தமது தனிப்பட்ட சேவையை செய்வதற்கு பல்கலைக்கழக மானியங்கள் விதித்த தடைக்கு எதிராக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
அதனால் சட்டத்துறை ஆசிரியர்களாகப் பணியாற்றும் சட்டத்தரணிகள் தமது தனிப்பட்ட சேவையை (Private Practice) செய்வதற்கு ஒழுங்குபடுத்தப்பட்ட அனுமதியை வழங்கும் வகையில் சுற்றறிக்கையை சீராக்கம் செய்யப்படவேண்டுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. இதுதொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் விரைவில் சந்திப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது. #சட்டத்துறை #சுற்றறிக்கை #பல்கலைக்கழகமானியங்கள்ஆணைக்குழு