குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாவற்குழி பகுதியில் உள்ள தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியில் குடியேறியுள்ள சிங்கள குடும்பங்களுக்கு வீடமைத்து கொடுத்தால் யாழ்.மாவட்ட செயலகத்தில் சுதந்திர தினத்தன்று தேசிய கொடி ஏற்றவிடாது முற்றுகை போராட்டம் நடாத்தப்படும் என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்து உள்ளார்.
அண்மையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் நாவற்குழி பகுதியில் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு வீடமைத்து கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாக வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.
எந்த அடிப்படையில் வீடமைத்து கொடுக்கின்றீர்கள். – பரம்சோதி கேள்வி.
அதன் போது ஆளும் கட்சி உறுப்பினர் பரம்சோதி நாவற்குழியில் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு எந்த அடிப்படையில் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது ? வடக்கில் பலர் காணி இல்லாமல் இருக்கும் போது எவ்வாறு வெளிமாகாண மக்களுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது ? வீட்டு திட்டத்திற்கு என்ன அடிப்படையில் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டனர் ? வீட்டு திட்டத்திற்கு பயனாளிகள் தெரிவின் போது கடைப்பிடிக்கும் நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டனவா ? என கேள்விகளை வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு அதிகாரிகள் உரிய முறையில் பதில் அளிக்கவில்லை.
மாவட்ட செயலகத்தை முற்றுகையிடுவோம்.
அதனை அடுத்து கருத்து தெரிவித்த எம்.கே.சிவாஜிலிங்கம் , நாவற்குழியில் சிங்கள மக்களுக்கு வீடமைத்து கொடுக்கும் நடவடிக்கை உடனடியாக கைவிடப்பட வேண்டும்.
இது தொடர்பில் உடனடியாக மாவட்ட செயலர் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தி நடவடிக்கைகளை உடன் நிறுத்த வேண்டும். அல்லாவிடின் சுதந்திர தினத்தன்று மாவட்ட செயலகத்தில் தேசிய கொடி ஏற்றவிடாது மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு நாம் 2002ம் ஆண்டு கால பகுதியில் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டோம். அதே போன்ற ஒரு நிலைக்கு எம்மை தள்ள வேண்டாம் என தெரிவித்தார்.
அடிக்கல் நாட்டு வைபவம் 30ம் திகதி.
அந்நிலையில் நாவற்குழி பகுதியில் உள்ள தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியில் 250 சிங்கள குடும்பங்களுக்கு மானிய அடிப்படையில் வீடமைத்து கொடுக்கப்படவுள்ளதாகவும் , அதற்காக எதிர்வரும் 30ம் திகதி அடிக்கல் நாட்டு வைபவம் இடம்பெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.