இருபதாவது அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர பற்றி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு எதிர்கட்சி மற்றும் அதன் ஆதரவாளர்கள் மக்கள் மத்தியில் பரப்பி வருகின்ற கருத்துக்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (10.09.20) பதிலளித்தார்.
இராஜாங்க அமைச்சர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் எதிர்கட்சியின் குற்றச்சாட்டு பற்றி குறிப்பிட்ட ஜனாதிபதி, அரசியலமைப்பின் 20வது சீர்திருத்தத்தின் நோக்கம் 19வது திருத்தம் மூலம் விதிக்கப்பட்டுள்ள தடைகளை களைந்து முன்னோக்கி செல்வதாகும் என்று குறிப்பிட்டார்.
”அனைத்தையும் ஒரே தடவையில் மாற்ற முடியாது. அதற்கு நீண்டகாலம் எடுக்கும். பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 19வது சீர்த்திருத்தத்தின் சில விடயங்களை அவ்வாறே வைத்துக்கொள்ள வேண்டும். முதன்மையான நோக்கம் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை மாற்றாது எதிர்கால வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாகும்.” என்று ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.
பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர பற்றி எதிர்கட்சி முன்வைக்கின்ற குற்றச்சாட்டு பற்றி அவதானத்தை செலுத்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாமோ அல்லது பிரதமரோ நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு எவ்வித தலையீட்டையும் செய்யவில்லை என்று குறிப்பிட்டார்.
”தலையீடு செய்வதாயின் உயர் நீதிமன்றத்திலேயே செய்ய வேண்டி இருந்தது. அவ்வாரானதொரு விடயம் எச்சந்தர்ப்பத்திலும் இடம்பெறவில்லை. நீதிமன்றத் தீர்ப்பை வழங்கிய நீதிபதியை அரசியலமைப்பு பேரவையே நியமித்தது. கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாச, தலதா அதுகோரல உள்ளிட்ட சிலரே அதில் இருந்தனர். எதிர்கட்சிக்கு ஒரு தீர்ப்பு நல்லது மற்றையது கெட்டது” என்று ஜனாதிபதி விபரித்தார்.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியை நியமித்ததும் அந்த அரசியலமைப்பு பேரவையே என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி எதிர்கட்சி பொய்யான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)