பிாித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆஸ்ட்ரா செனகா நிறுவனம் மேற்கொண்டு வந்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து தயாரிக்கும் நடவடிக்கை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் பலநாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆஸ்ட்ரா செனகா நிறுவனம் பாிசோதனை செய்து வந்த AZD1222- என்ற தடுப்பூசிதான் உலக அளவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் தடுப்பு மருந்தாக கருதப்பட்டது.
உலக அளவில் இறுதி கட்ட பரிசோதனையில் உள்ள 9 தடுப்பூசிகளில் ஆஸ்ட்ரா செனகாவும் ஒன்றாகவிருந்த நிலையில் பாிசோதனைக்குள்ளான தன்னார்வலருக்கு ஏற்பட்டுள்ள உடல் நலக்குறைவால் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்பட்டிருந்தது.
முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், சந்தைக்கு வரக்கூடிய முதல் கொரோனா தடுப்பூசி இதுவாக இருக்கலாம் என கருதப்பட்ட நிலையில் தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் பிரித்தானியாவின் மருந்து ஒழுங்குமுறை ஆணையகத்தின் ஒப்புதலுக்குப் பின்னா் பரிசோதனை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக ஆஸ்ட்ராசெனிகா நிறுவனம் நேற்று தெரிவித்துள்ளது.
பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட தன்னார்வலருக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து, விசாரணைக் குழு ஆய்வு செய்து, மீண்டும் பரிசோதனை தொடங்குவது பாதுகாப்பானது என ஆணையகத்துக்குப் பரிந்துரை செய்துள்ள நிலையில் மீண்டும் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மேலதிக தகவல்களை வெளியிட முடியாது என மருந்து தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது #ஒக்ஸ்போர்ட் #கொரோனா #தடுப்புமருந்து #நிறுத்தம் #ஆஸ்ட்ராசெனகா #தன்னார்வலர்