ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலரை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைத்துக்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்கு, சஜித் அணிக்குள்ளேயே எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐ.தே.கவின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசத்தை ஐக்கிய மக்கள் சக்தியுடன் எந்தவகையிலாவது இணைந்துக்கொண்டால், தாங்கள் அனைவரும், நாடாளுமன்றத்திலும் வெளியிலும் சுயாதீனமாக செயற்பட வேண்டி ஏற்படும் என, குருநாகல் மாவட்ட, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, நளின் பண்டார, ஜே.சி. அலவத்துவல, அசோக அபேசிங்க மற்றும் துஷார இந்துனில் கட்சியின் உயர்பீடத்துக்கு அறிவித்துள்ளனர் என அறியமுடிகின்றது.
கடந்த பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில், குருநாகல் மாவட்டத்தில். அகிலவிராஜ் காரியவசம் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிக்கொண்டார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் போது, தனது செல்வாக்கை தக்கவைத்துக் கொள்ளும் வகையிலேயே, அகிலவிராஜ் காரியவசம் செயற்பட்டார். ஐ.தே.கவின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் மேம்பாட்டுக்காக, எவ்விதமான செயற்பாடுகளையும் அவர், வழங்கவில்லையென மேற்படி நான்கு உறுப்பினர்களும் குற்றஞ்சாட்டினர்.