மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையிலிருந்து வந்தவர்கள் வடமாகாணத்தின் எப்பகுதியில் தங்கியிருந்தாலும் உடனடியாக அருகிலிருக்கும் சுகாதார மருத்துவ அதிகாரிக்கு (MOH) அறிவிக்கும்படி வடமாகாண ஆளுநர், திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் கேட்டுள்ளார்.
இதுதொடர்பில் ஆளுநரின் ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
கம்பஹா, மினுவாங்கொட ப்ரண்டிக்ஸ் தொழிற்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் கொத்தணி, நாடுமுழுவதும் பரவியிருக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டு இருக்கும் நிலையில், தொற்றாளர்களுடன் தொடர்புடைய பலர் தங்களுடைய தகவல்களை மறைப்பதனால் அவர்களுக்கு கோரோனா தொற்று ஏற்பட்டிருப்பின் மிகக்கடுமையான சவாலை சமூகம் எதிர்நோக்க வேண்டியிருக்கும்.
இந்நிலையில் கம்பஹா மாவட்டத்தில் மினுவாங்கொட தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள், அவர்களோடு தொடர்புடையவர்கள் யாரேனும் வடமாகாணத்தின் எப்பிரதேசத்தில் தங்கியிருந்தாலும் உடனடியாக அருகிலிருக்கும் சுகாதார மருத்துவ அதிகாரிக்கு அறிவிக்குமாறும் தொடர்ந்து சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறும் வடமாகாண மக்களுக்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார் என்றுள்ளது.