Home இந்தியா “பாலியல்” தொழிலாளர்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும்”

“பாலியல்” தொழிலாளர்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும்”

by admin

பாலியல் தொழிலாளர்களை `முறைசாரா தொழிலாளர்கள்’ என்று அங்கீகரிக்கவும், பொது விநியோக திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உணவுப்பொருட்களை பெறுவதற்கு தேவையான ஆவணங்களை அவர்களுக்கு வழங்கவும் வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்.எச்.ஆர்.சி) ஆலோசனை வழங்கியுள்ளது.

சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவினரின் உரிமைகளில் கோவிட்-19 நோய்த்தொற்றின் தாக்கத்தை ஆய்வு செய்த மனித உரிமைகள் ஆணையம், பாலியல் தொழிலாளர்களை முறைசாரா தொழிலாளர்களாக பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு பிற சாதாரண `தொழிலாளர்களுக்கான சலுகைகள் கிடைக்கும்’ என்று அந்த ஆணையம் கருதுகிறது.

உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தலைமையிலான ஒரு சட்டபூர்வமான அமைப்பான தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் இந்த அங்கீகாரமானது, பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான பல ஆண்டுகளாக போராடி வரும் அவர்களுக்கான தேசிய அளவிலான கூட்டமைப்பான என்.என்.எஸ்.டபிள்யூவால் ஒரு பெரிய உத்வேகமாக பார்க்கப்படுகிறது.

“பொது முடக்கம் அறிவிக்கப்பட்டபோது பாலியல் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். இதையடுத்து நீண்டகாலமாக அவர்களால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் கோரிக்கைகளில் ஒன்றை மீண்டும் வலியுறுத்தினோம். அதாவது, பாலியல் தொழிலாளர்களையும் தொழிலாளர்களாக மத்திய தொழிலாளர் அமைச்சகத்தில் பதிவு செய்ய வழிவகை செய்வதன் மூலம், அவர்களாலும் வேலையற்ற தொழிலாளர்களுக்கான இழப்பீடுகளை பெற முடியும் என்பதே அது. இப்படிப்பட்ட சூழலில், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் இந்த அறிவிப்பு ஒரு பெரிய உத்வேகமாக உள்ளது” என்று பாலியல் தொழிலாளர்களின் தேசிய கூட்டமைப்பின் (என்.என்.எஸ்.டபிள்யூ) சட்ட ஆலோசகரான ஆர்த்தி பை பிபிசியிடம் தெரிவித்தார்.

மகாராஷ்டிர அரசு சமீபத்தில் எடுத்துள்ள நடவடிக்கையின்படி, பாலியல் தொழிலாளர்கள், குறிப்பாக பாலூட்டும் தாய்மார்களுக்கு மாநில அரசுகள் உதவிகளையும் நிவாரணங்களையும் வழங்கலாம் என்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தனது அறிவுறுத்தலில் குறிப்பிட்டுள்ளது. மகாராஷ்டிர அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் விடுத்த உத்தரவு, பாலியல் தொழிலாளர்கள் `ரேஷன்’ பொருட்களை பெறுவதற்கு வழிவகை செய்தது.

இதுமட்டுமின்றி, பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு அல்லது ஆதார் அட்டை இல்லையென்றாலும், அவர்கள் தற்காலிக ஆவணங்களுடன் ரேஷன் பொருட்களை பெற வழிவகை செய்ய வேண்டுமென்று அந்த ஆணையம் ஆலோசனை வழங்கியுள்ளது. “பெரும்பாலான பாலியல் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களை விட்டு வெளியேறுபவர்களாக இருப்பதால், அவர்களால் அடையாள அட்டைகளை பெறவியலாது. எனவே, அவர்களிடம் ஆவணங்கள் இல்லையென்றாலும், அவர்களுக்கு ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்று என்.எச்.ஆர்.சி கூறியுள்ளது” என்று ஆர்த்தி கூறுகிறார்.

பாலியல் தொழிலாளர்கள்

பாலியல் தொழிலாளர்களை அங்கீகரிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழங்கியுள்ள ஆலோசனையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சலுகைகள் வழங்கும் திட்டங்களில் புலம்பெயர்ந்த பாலியல் தொழிலாளர்களை சேர்ப்பது, கணவர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் மூலம் ஏற்படும் குடும்ப வன்முறை குறித்த புகார்களில் துறைசார் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதை ஊக்குவித்தல், இலவசமாக கொரோனா பரிசோதனை மற்றும் நோய்த்தொற்று சிகிச்சை வழங்குவதை உறுதிசெய்தல், எச்.ஐ.வி மற்றும் பிற பால்வினை நோய்கள் ஏற்படுவது மற்றும் அவற்றின் பரவலை தடுத்தல் மற்றும் சிகிச்சையை உறுதிசெய்தல் உள்ளிட்டவையும் அடக்கம்.

பாலியல் தொழிலாளர்கள் நலன் தொடர்பாக மகாராஷ்டிர அரசு எடுத்துள்ள முன்முயற்சியின் மிகவும் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதை ஆர்த்தி சுட்டிக்காட்டுகிறார். “இது பாலியல் தொழிலாளர்கள் மற்றும் கடத்தப்பட்டு இந்த தொழிலில் ஈடுபடுத்தப்படும் பெண்கள் இடையே ஒரு தெளிவான வேறுபாட்டைக் காட்டுகிறது. அதாவது, வாழ்வாதாரத்திற்காக சம்மதத்துடன் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கும், கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்படுபவர்களுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது”

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய, பாலியல் தொழிலாளர்களின் தேசிய கூட்டமைப்பின் (என்.என்.எஸ்.டபிள்யூ) ஒருங்கிணைப்பாளரான ஆயிஷா ராய், “முறைசாரா தொழிலாளர்களாக அங்கீகரிக்கப்படுவதற்காக நாங்கள் பல தசாப்தங்களாக போராடி வருகிறோம். குற்றம் இழைக்கும் சமூகங்களாக அல்லாமல், நாங்கள் தொழிலாளர்களாக அங்கீகரிக்கப்படுகிறோம் என்பது எங்களுக்கு ஒரு மிகப் பெரிய விடயம். இது எங்களது வாழ்க்கையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.”

பாலியல் தொழிலாளர்கள் குறித்த வழக்கு

பாலியல் தொழிலாளர்கள் குறித்த ஒரு வழக்கில் ஒரு வாரத்திற்கு முன்னர், மும்பை உயர்நீதிமன்றம் வழங்கிய ஒரு மாறுபட்ட தீர்ப்பை அடுத்து, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் இந்த ஆலோசனை வெளிவந்துள்ளது.

காவல்துறையினரால் ஜோடிக்கப்பட்ட ஒரு வலையில் சிக்கிய மூன்று இளம்பெண்கள் கடத்தல் (தடுப்பு) சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டது தொடர்பான வழக்கு அது. முன்னதாக, இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றங்கள் அவர்கள் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த மூன்று பெண்களையும் குற்றவாளிகளாகக் கருதி உத்தர பிரதேசத்தில் உள்ள பெண்களுக்கான பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பியிருந்தன.

இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி பிருத்விராஜ் கே சவான், “பாலியல் தொழிலை ஒரு கிரிமினல் குற்றமாக கருதும் அல்லது ஒரு நபரை பாலியல் தொழிலில் ஈடுபடுவதால் தண்டிக்கும் எந்தவொரு சட்டமும் இல்லை. இந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டனர் அல்லது பாலியல் தொழிலுக்காக எந்தவொரு நபரையும் கவர்ந்தார்கள் என்பதை உறுதிசெய்ய எவ்வித ஆதாரமும் இல்லை என்று உயர் நீதிமன்றம் கருதுகிறது.”

பாலியல் தொழிலாளர்கள்

“குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மனுதாரர்கள், 18 வயதுக்கு மேலானவர்கள் என்பதால், அவர்கள் விரும்பும் இடத்தில் வசிப்பதற்கும், இந்தியா முழுவதும் சுதந்திரமாகச் செல்வதற்கும், இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை குறிப்பிடும் மூன்றாம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, தங்கள் சொந்தத் தொழிலைத் தேர்ந்தெடுப்பதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு என்பதை கவனத்தில் கொள்வது முக்கியம்” என்று நீதிபதி கூறினார்.

இதுதொடர்பாக பிபிசியிடம் பேசிய, மகாராஷ்டிராவிலுள்ள பால்வினை நோய்த்தடுப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அரசுசாரா அமைப்பான சங்கிராம் சன்ஸ்தாவின் பொதுச் செயலாளர் மீனா சேஷு, “பாலியல் தொழிலாளர்களை குறிக்க பயன்படுத்தப்படும் வார்த்தை குறித்து நீண்டகாலமாக போராட்டம் நிலவி வருகிறது. சட்டத்திலேயே விபச்சாரம் மற்றும் விபச்சாரி உள்ளிட்ட வார்த்தை பயன்பாடு உள்ளது. ஆனால், இதில் முக்கியமானது என்னவென்றால், பாலியல் தொழில் செய்வது அல்லது பாலியல் தொழிலாளியாக இருப்பது ஒரு சட்டவிரோதமான செயல் என்று சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. சிறையில் அடைக்கப்பட்டோ அல்லது சிறையில் இருப்பது போன்ற சூழ்நிலையிலோ பல்லாண்டுகளாக வாழ்ந்து வரும் பாலியல் தொழிலாளர்களுக்கு மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பு நிச்சயமாக ஒரு பெரிய நிவாரணமாகும்” என்று அவர் கூறுகிறார்.

பாலியல் தொழிலை சட்டப்பூர்வம் ஆக்குவதுதான் அடுத்த கட்டமா?

‘”பாலியல் தொழிலாளர்கள் உரிமைகள் இயக்கம்’ இதுகுறித்து மிகவும் தெளிவாக உள்ளது. இதை குற்றமற்றதாக மாற்ற வேண்டுமென்றே அது வலியுறுத்துகிறது. இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், பாலியல் தொழில் சட்டப்படி குற்றமில்லை, ஆனால் பாலியல் தொழிலை சுற்றியுள்ள அனைத்தும் குற்றமயமாக்கப்படுகின்றன. நாங்கள் பாலியல் தொழிலை குற்றமற்றதாக அறிவிக்க கோருகிறோமே தவிர, அதை சட்டப்படி அங்கீகரிக்க வலியுறுத்தவில்லை. நாளை நான் எனது உரிமத்தைப் பெற்று, பாலியல் தொழிலாளியாகப் போகிறேன் என்று ஒரு பெண் சொல்லும் சூழ்நிலை இருக்கப்போவதில்லை” என்றார் சேஷு.

பெங்களூரில் உள்ள தன்பாலின சேர்க்கையாளர்களின் உரிமைகள் குழுவான சங்கமாவின் இயக்குநர் ராஜேஷ் சீனிவாஸ் பிபிசியிடம் பேசியபோது, “இது ஒரு மிகப் பெரிய மாற்றம். கர்நாடக பாலியல் தொழிலாளர் சங்கம் ஒரு தொழிற்சங்கமாக அங்கீகரிக்கப்படுவதற்காக சட்டப் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறது. தற்போது தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழங்கியுள்ள ஆலோசனை இந்த போராட்டத்திற்கு வலுசேர்க்கும். இன்று நாம் வாழும் இருண்ட காலத்தில், கொஞ்சம் வெளிச்சமும் இருக்கிறது” என்று கூறினார்.

  • இம்ரான் குரேஷி
  • பிபிசி

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More