கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படும் சந்தர்ப்பத்தில் சரியான தகவல்களை வழங்குவது மிகவும் முக்கியமான ஒரு விடயம் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (13.10.20) 80 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்தும் ஏனைய 114 பேரும் எவ்வித தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படாத நிலையிலும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இனங்காணப்பட்டவர்களுள் கம்பஹா பகுதியை சேர்ந்த 36 பேர், மினுவங்கொட பகுதியை சேர்ந்த 38 பேர், திவுலபிட்டியவை சேர்ந்த 34 பேர் மற்றும் சீதுவ பகுதியை சேர்ந்த ஒரே விடுதியில் தங்கியிருந்த 42 பேர் இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொழும்பில் 7 பேர் மற்றும் கிரிந்திவெலயில் 4 பேர் என நாட்டின் மேலும் பல பகுதிகளில் இருந்து இவ்வாறு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நாட்டின் ஏதாவது பகுதியில் இருந்து ஒருவர் இனங்காணப்பட்டால் அவரில் இருந்து மேலும் பலருக்கு தொற்று ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் 2884 பேருக்கு PCR பரிசோதனை – 10 பேருக்கு கொரோனா
கடந்த 6 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு நகரிற்குள் 2884 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதாக வைத்தியர் ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.
அவர்களுள் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அவர்களுள் 5 பேர் மாத்திரமே கொழும்பு நகரை சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.