முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் நடிகா் விஜய்சேதுபதிக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், படக்குழுவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி 800 என்ற படத்தை உருவாக்கவுள்ளனர். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முரளிதரன் கண்டியில் பிறந்த தமிழராக இருந்தாலும், விடுதலைப்புலிகள் போராடியபோது அவா் சிங்களவா்களின் பக்கம் நின்று துரோகம் செய்தார் எனவும் அவரது கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது எனவும் தொிவிக்கப்பட்டிருந்தது.
நேற்று மோசன் போஸ்டர் வெளியான நிலையில் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக “ஷேம் ஒன் விஜய்சேதுபதி” என்ற ஹாஷ்டக் டுவிட்டரில் டிரெண்டாகி வந்தது. மறுபக்கம் விஜய் சேதுபதி ரசிகர்கள் ஆதரவாக we stand with vijay Sethupathi என்ற ஹாஷ்டக்கை டிரெண்டாக்கி வந்தனர்
இந்நிலையில், படக்குழுவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் 800 திரைப்படம் பல்வேறு வகையில் அரசியல் ஆக்கப்பட்டு வருவதை அறிகிறோம்.
800 திரைப்படம் முழுக்க ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட படமே தவிர, இதில் எந்த வித அரசியலும் கிடையாது. தமிழகத்தில் இருந்து தேயிலைத் தோட்டக் கூலியாளர்களாக இலங்கைக்கு குடிபெயர்ந்த ஒரு சமூகத்தில் இருந்து வந்த முரளிதரன் எப்படி பல தடைகளைத் தாண்டி உலக அளவில் சிறந்த பந்து வீச்சாளராக உயர்ந்தார் என்பது தான் திரைப்படத்தின் கதையம்சம்.
திரைப்படம் இளைய சமுதாயத்துக்கும் வருங்கால விளையாட்டு வீரர்களுக்கும் தங்கள் வாழ்க்கை பயணத்தில் எவ்வளவு தடைகள் வந்தாலும் தடைகளை கடந்து சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தும் படமாக இருக்கும்.
இத்திரைப்படத்தின் தயாரிப்பாளராக ஒன்றை மட்டும் நிச்சயமாக சொல்ல முடியும். இத்திரைப்படத்தில் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் விதத்திலான காட்சியமைப்புகள் கிடையாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #முத்தையாமுரளிதரன் #வாழ்க்கைவரலாறு #விஜய்சேதுபதி #படக்குழு #ஈழத்தமிழர் #vijaySethupathi