Home இலங்கையாழ்மருத்துவ பீடத்தில் பி. சி. ஆர் பரிசோதனை அடுத்த வாரம் ஆரம்பம்

யாழ்மருத்துவ பீடத்தில் பி. சி. ஆர் பரிசோதனை அடுத்த வாரம் ஆரம்பம்

by admin

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் அடுத்த வாரம் முதல் மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனைகளை ஆரம்பிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது..

வடக்கில் கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், அவர்களுடன் தொடர்புடையோருக்கு பிசிஆர் பரிசோதனைகளை நடத்தவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மாத்திரம் பி. சி. ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதனால் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது. இதனைத் தவிர்க்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலும் பி. சி. ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டு, முடிவுகளை விரைந்து வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் பற்றி ஆராய்வதற்கான கூட்டம் ஒன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன், உதவிப் பணிப்பாளர் மருத்துவர் எஸ். குமாரவேல், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி மருத்துவ வல்லுநர் எஸ். ரவிராஜ், சமுதாய மருத்துத் துறைத் தலைவரும், பல்கலைக்கழக கோவிட் 19 செயலணியன் இணைப்பாளருமான மருத்துவர் எஸ். சுரேந்திரகுமாரன் மற்றும் நுண்ணுயிரியல், நோயியல் துறை விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர்.

பி. சி. ஆர் பரிசோதனைகளுக்குத் தேவையான மாதிரிகளை மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாகப் பெற்றுக் கொள்வது எனவும், ஆய்வு நடவடிக்கைகளுக்கான நுண்ணுயிரியல் சிறப்பு ஆலோசனைகளை வழங்குவதற்கும், தேவையான உயரியல் காப்பு முறைகளைக் கண்காணித்து, அறிவுறுத்தல் வழங்குவதற்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நுண்ணுயிரியல் மருத்துவ வல்லுநர் திருமதி ரஜந்தி இராமச்சந்திரன் செயற்படுவார் என்றும், உயிரியல் மற்றும் ஆய்வு கூடக் கழிவுகளைப் பாதுகாப்பாக அகற்றும் பணியை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மேற்கொள்ளும் என்றும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

மருத்துவ பீடத்தின் வழக்கமான பணிகளுக்குப் பாதிப்பேதும் ஏற்படாத வகையில் சர்வதேச நுண்ணுயிரியல் ஆய்வுத் தர நியமங்களுக்கமைய பி. சி. ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட விருக்கின்றன. மருத்துவ பீடத்தில் இருந்து கடந்த முறை இந்தப் பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்கள் அ. முருகானந்தன், மு. கலாமதி மற்றும் பேராசிரியர் செ. கண்ணதாசன் ஆகியோர் மட்டுமே இந்தப் பரிசோதனைகளில் ஈடுபடவுள்ளனர். இவர்களுடன் பணியாற்றுவதற்கென நுண்ணுயிரியல் ஆய்வுகூடவியலாளர்களைப் பணிக்கமர்த்துவதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் தற்போதுள்ள பி. சி. ஆர் பரிசோதனை இயந்திரத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 60 மாதிரிகளே சோதனை செய்யப்பட முடியும். இதனை 180ஆக அதிகரிப்பதற்காக, 50 லட்சம் ரூபாய் பெறுமதியான புதிய பி. சி. ஆர் பரிசோதனை இயந்திரம் ஒன்றை வாங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் எனத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா இந்தக் கூட்டத்தில் உறுதியளித்துள்ளார் மருத்துவ பீடத்தினால் மேற்கொள்ளப்படும் பி. சி. ஆர் பரிசோதனை முடிவுகள் தினமும் மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. #யாழ்ப்பாணம் #மருத்துவபீடம் #பிசிஆர் #கொரோனா #ஆரம்பம்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More