பிரித்தானியாவில் எதிர்வரும் வியாழக்கிழமை 5 ஆம் திகதி முதல், தேசிய அளவிலான முடக்கம் நடைமுறைக்கு வரும் என பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.
இதன்படி அத்தியாவசியமற்ற சில்லறை விற்பனை நிலையங்கள், பொழுது போக்கு நிலையங்கள், பப்கள், மற்றும் உணவகங்கள் முதலானவை எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி புதன்கிழமை வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உணவகங்களில் இருந்து உணவை எடுத்துச் செல்வதற்கும் விநியோகிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் குடும்ப உறுப்பினர்களைத் தவிர்ந்த எவரும் வீடுகளில் ஒன்று கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள அதே வேளை வீட்டுக்கு வெளியே குடும்ப உறுப்பினர் அல்லாத ஒருவரை சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், நீதிமன்றங்கள் மற்றும் கட்டுமானத் தொழில்கள் என்பன தொடர்ச்சியாக இயங்குவதற்கும், உயர்ரக விளையாட்டுகளை தொடர்வதற்கும் வீட்டில் இருந்து பணியாற்ற முடியாத அத்தியாவசிய தொழில்சார் நடவடிக்கைகள் உள்ளிட்ட பணியிடங்கள் தொழிற்படுவதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தொழில் சார்ந்த அத்தியாவசிய பயணங்கள் தவிர்ந்த அனைத்து சர்வதேசப் பயணங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சூழலில் பேர்லோ திட்டம் (furlough scheme) எதிர்வரும் டிசம்பர் மாதம்வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.