தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து பணியாற்றி உயிரிழந்த ஒருவரின் உறவினர் ஒருவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்னு இணைத்துக்கொள்ளப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி முன்வைத்த குற்றச்சாட்டுகளை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் கடுமையாக மறுத்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அளித்த வாக்குமூலத்திற்கு பதிலளித்துள்ள, ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் தீபிகா உடுகம, இதுபோன்ற குற்றச்சாட்டினை எதிர்கொள்வது இதுவே முதல்முறை எனக் குறிப்பிட்டுள்ளார்.
” 2015 ஒக்டோபர் இறுதி முதல் 2020 ஓகஸ்ட் வரை நான் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராக இருந்தேன், அவ்வாறான ஒருவர் நியமிக்கப்படவில்லை” என் அவர் ஒரு வார இறுதி ஆங்கில பத்திரிகைக்கு அளித்த செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
தி ஐண்ட் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் ஷமிந்திர பெர்னாண்டோ, புலிகள் அமைப்பு செயற்பாட்டாளரின் குடும்ப உறுப்பினருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு தங்குமிடம் வழங்கியுள்ளதா? அப்படியானால், அந்த உயிரிழந்த உறுப்பினரின் பெயரும் அவரது மரணத்தின் சூழ்நிலையையும் வெளிப்படுத்த முடியுமா? என தீபிகா உடுகமவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
“எந்தவொரு ஆணையாளரும், புலிகள் அமைப்பின் உறுப்பினரின் குடும்பத்தில் உறுப்பினராக இருப்பது எனக்குத் தெரியாது. நான் ஆணைக்குழுவின் தலைவரான 2015 ஒக்டோபர் இறுதி முதல் 2020 ஓகஸ்ட் வரை எனது பதவிக் காலத்தில் இதுபோன்ற எந்தவொரு நபரும் ஆணைக்குழுவிற்கு நியமிக்கப்பட்டவில்லை. எனது பதவிக் காலத்தில் ஆரம்பத்தில் இருந்தே நிர்வாக சிக்கல்களால் ஒரு ஊழியரை நியமிக்க முடியவில்லை என்பது உண்மைதான். மறுபுறம், ஆணையாளர்களைப் பொறுத்தவரை, அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் விதிகளின்படி அரசியல் அமைப்புச் சபையின் பரிந்துரைகளுக்கு இணங்க ஜனாதிபதி அனைத்து ஆணையாளர்களையும் தலைவர்களையும் நியமிப்பார் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நான் நம்புகிறேன். “
உயிரிழந்த புலிகள் அமைப்பின் உறுப்பினர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஊழியர் குழுவில் இணைத்துக்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டுச் தொடர்பில் விசாரணை செய்ய முன்னாள் ஜனாதிபதியால் தன்னை ஒருபோதும் அழைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் சித்திரவதை
எவ்வாறாயினும், 2017ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அனைத்து ஆணையாளர்களையும் சந்திப்பதற்காக அழைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் குழுவுக்கு (UNCAT) மனித உரிமைகள் ஆணைக்குழு, 2016 ஒக்டோபர் மாதம் சமர்ப்பித்த அறிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டு ஜெனீவா குழுக் கூட்டத்தில் பங்கேற்ற தேசிய புலனாய்வு சேவையின் அப்போதைய தலைவரான சிசிர மெண்டிஸ், இலங்கையின் சித்திரவதை குறித்த தீவிரமான கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நாடு திரும்பியிருந்தார்.
2008 மார்ச் முதல் 2009 ஜூன் வரை குற்றப் புலனாய்வுத் திணை்ககம் (CID) மற்றும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு (TID) ஆகியன பிரதி பொலிஸ் மாஅதிபர் சிசிர மெண்டிஸின் கட்டுப்பாட்டில் இருந்தபோதிலும், தடுப்புக்காவல் மற்றும் சித்திரவதை தொடர்பான கேள்விகளுக்கு இலங்கை அரசு இதுவரை பதிலளிக்கவில்லை.
இந்த கேள்விகளை எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் (RSF) இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் (JDS) மற்றும் சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் (ITJP) ஆகியன எழுப்பியிருந்தன.
இதுபோன்ற இணையான அறிக்கைகளை சமர்ப்பிக்க உள்ளூர் மனித உரிமை அமைப்புகளையும் சிவில் சமூகத்தையும் அழைப்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்புகளின் பொதுக் கொள்கை என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் இந்த செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு வழிவகுத்த அரசியல் நெருக்கடிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் ஏதாவது ஒரு வகையில் பங்களிப்பு வழங்கியதா? கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த தீபிகா உடுகம, “நிச்சயமாக இல்லை” எனத் தெரிவித்ததோடு, மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது எவ்வாறு இத்தகைய நெருக்கடிக்கு வழிவகுக்கும்?” என மீள் கேள்வி எழுப்பியுள்ளார்.
“சுயாதீன ஆணைக்குழுக்களை அமைப்பதற்கும் மனித உரிமை நிலைமையை மேம்படுத்துவதற்கும் முன்னைய அரசாங்கம் பாராட்டப்படும் என நான் நினைத்தேன்,” என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் தீபிகா உடுகம மேலும் தெரிவித்துள்ளார். #மனிதஉரிமைகள்ஆணைக்குழு #ஜனாதிபதி #உயிர்த்தஞாயிறு #தீபிகாஉடுகம #விடுதலைப்புலிகள்