யாழ்ப்பாணம் கடல் நீரேரி அண்மைய பௌர்ணமி நாளில் தரைப்பகுதிக்குள் அசாதாரணமாக ஊடுருவிய காரணம் பற்றிய கருதுகோள் தொடர்பில் மருத்துவர் சி.யமுனாநந்தா தெளிவுபடுத்தியுள்ளார்.
இதுதொடரிபில் அவர் அனுப்பிவைத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யாழ்ப்பாணக் குடாநாட்டின் தரைத்தோற்றத்தின் அடிப்படையில் சுண்ணாம்புக் கற்பாறைகளால் ஆனது. இப்பாறைகளுக்கு இடையே மழைநீர் பருவகாலங்களில் தேங்கி , வில்லை போன்ற கட்டமைப்பில் காணப்படுகின்றது. இவ்வில்லை போன்ற மழைநீர் சேமிப்பின் எச்சங்கள், கடல்நீரூடன் சமநிலையில் உள்ளன. கடல்நீர் பெருக்கெடுக்கும்போதும், வற்றும்போதும் சுண்ணாம்புப் பாறைகளுக்கு இடையேயான நீரும் தனது கொள்ளளவுக்கு ஏற்பவும் நீர் அமுக்கத்தைப் பகிரும். பௌர்ணமி தினங்களில் சந்திரனின் ஈர்ப்புசக்தி காரணமாக கடலலை எழுச்சி ஏற்படுவது வழமை.
மேலும் பூமியுள் உளபார உலோகக் கருத்தாக்கங்கள் ஏற்பட்டு நிலநடுக்கங்கள், எரிமலைகள் ஆழ்கடலிலே ஏற்படலாம். அண்மைய பௌர்ணமி தினத்திலும், துருக்கி, காஷ்மீர் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டமை உணரப்பட்டது. இவையும் அரபிக்கடலில் சமுத்திர அலைகளைச் சீற்றம் கொள்ள வைக்கும்.
எல்லாவற்றிற்கும் மேலாக வழமைக்கு மாறாக இம்முறை கடல்நீரேரி நிலத்தை ஊடறுத்திற்கு மேலும் ஒரு கருதுகோள் யாழ் குடாநாட்டின் நிலக்கீழ் நீர் நிலையியல் அழுத்தம் வழமைக்கு மாறாக செயற்கையாக அதிகரித்திருக்கலாம். அல்லது நிலக்கீழ் நீர் நிலையியல் அழுத்தம் கடல்நீருடன் சமப்படுத்தப்படும் நிலை தடுக்கப்பட்டு இருக்கலாம். இதனால் பொங்கும் கடல் அலைகள் செலுத்தும் அழுத்தம் நிலக்கீழ் சுண்ணாம்புப் பாறைகளுக்கு ஊடாகச் செல்வதும் நிலக்கீழ் நீருக்கு ஊடாகச் செல்வது தடைப்பட்டு தரைமேல் ஊடுருவி இருக்கலாம். இதனை செய்மதிப்படலங்கள் மூலம் கண்டறியலாம்.
யாழ்ப்பாணத்தில் இவ்வாறு சுண்ணாம்புக் கற்பாறைகளுக்கு அதிக திணிவை அண்மைக் காலத்தில் கொடுப்பவை பிரமாண்டமான கட்டடங்களும், விசாலிக்கப்படும் வீதிகளும் ஆகும். இவற்றிற்காக இயற்கைக்கு மாறாக பெருமளவான கருங்கற்கள் எமது பிரதேசத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. எனவே இயற்கைக்கு மாறாக அதிக அளவில் கருங்கற்களைச் சுண்ணாம்புக் கற்பாறைகளால் அமைத்த மணற்திட்டில் சேர்த்தால் கடல்நீர் மேலெழுவது வழமையாகும்.
யாழ்ப்பாணம் நகரை அண்டிய பெரியளவிலான கட்டடங்கள், பண்ணைக் கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட கடல்நிரப்பு நடவடிக்கைகள், பண்ணைக்கடல் அமைக்கப்பட்ட பெருந்தெருக்கள் என்பவற்றில் உள்ள கருங்கற்கள் கொடுக்கும் நிறையின் தாக்கம் நீலக்கீழ் கடலோட்டத்தைப் பாதிக்கும். இது குறித்த கருதுகோள்களை விஞ்ஞானரீதியில் கவனத்தில் எடுக்க வேண்டும்.
“இயற்கையை நீ அழித்தால் இயற்கையால் நீ அழிவாய்” என்பதனை இயற்கை அன்னை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டே உள்ளாள். என்று குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். #யாழ்ப்பாணம் #கடல்நீரேரி #யமுனாநந்தா #சுண்ணாம்புக்கற்பாறை #பௌர்ணமி