https://www.youtube.com/watch?v=IaZmt_pFnC4&feature=emb_logo
இலங்கையில் கரை ஒதுங்கியுள்ள திமிங்கிலங்களை கடலுக்குள் பாதுகாப்பாக திருப்பி அனுப்ப நிபுணர்களின் உதவியை பெற்றுக்கொள்ளாமை அந்த உயிர்களுக்கு மேலும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக உலகப் புகழ்பெற்ற கடல் உயிரியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
“இந்த விலங்குகளை காப்பாற்றுவது அவற்றை மீண்டும் கடலில் கொண்டுச் சேர்ப்பது மாத்திரமல்ல, இது இன்னும் கொஞ்சம் சிக்கலானது” என கள உயிரியில் பணிக்காக மெக்ஸ்வெல் ஹன்ரஹான் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட உலகின் ஐந்து விஞ்ஞானிகளில் ஒருவரான கலாநிதி ஆஷா டி வொஸ், தெரிவித்துள்ளார்.
நவம்பர் 2ஆம் திகதி பாணந்துறை கடற்கரையில் ஒதுங்கிய நூறு திமிங்கலங்களை மீண்டும் கடலுக்கு கொண்டு செல்வதற்கான தனது அறிவையும், உழைப்பையும் வழங்கிய ஆஷா டி வொஸ், இந்த சம்பவம் குறித்து உடனடியாக தனக்கு அறிவிக்கப்படவில்லை என்றாலும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவியதாக சுட்டிக்காட்டுகிறார்.
திமிங்கலங்கள் ஆபத்தை எதிர்நோக்கியிருந்த நிலையில், சரியான பாதுகாப்பை வழங்க, குறித்த நிபுணரின் அனுபவம் மற்றும் அறிவை பெற்றுக்கொள்ள இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இது குறித்து நான் இன்று மாலை செய்தி ஊடாகவே தெரிந்துகொண்டேன். ஆனால் இது பிற்பகல் நடந்தது. எனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை, அதாவது இந்த திமிங்கிலங்களை மீட்பதற்கு என்னால் உடனடியாக உதவ முடியவில்லை.” என இந்தியப் பெருங்கடலில் நீல திமிங்கலங்கள் குறித்த ஆராய்ச்சியின் முன்னோடியான கலாநிதி வொஸ் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கரை ஒதுங்கிய திமிங்கலங்களை மீட்பதற்கு உள்ளூர்வாசிகளும் அதிகாரிகளும் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டிய அவர், இந்த விலங்குகளை மீட்டு கடலுக்கு அனுப்புவது மாத்திரமன்றி, இது மிகவும் சிக்கலான செயல் எனவும் சுட்டிக்காட்டுகிறார்.
திமிங்கலங்களை காப்பாற்றுவது எப்படி?
அத்தகைய விடயத்தில் பின்பற்ற வேண்டிய சில நடவடிக்கைகளையும் அவர் விளக்குகின்றார்
* இந்த விலங்குகளை விரைவாக கடலுக்குத் திருப்பி, ஆழமான நீரை நோக்கி அனுப்பாவிட்டால், அவை மீண்டும் கரைக்குத் தள்ளப்படும்.
* அவை கரைக்குச் அடித்துச் செல்லும்போது, அவைகளின் ஈரத்தன்மையை அவ்வாறு பேண வேண்டும். அதனை துடைத்தல் ஆகாது.
* தலைக்கு மேலே உள்ள துளை மூட அனுமதிக்கக் கூடாது, இது திமிங்கலங்கள் சுவாசிக்க பயன்படுகிறது. சிற்றலைகள் வழியாக நீர் நுழைவதைத் தடுக்க விலங்குகளை நிமிர்ந்து இருக்குமாறு வைக்க வேண்டும்.
* அவைகள் சில மணிநேரங்களுக்கு மேல் கடற்கரையில் இருந்தால், கடல் நீர் இல்லாமை மற்றும் உடல் பாரம் காரணமாக உடல் நரம்புகள் நசுக்கப்படும்.
இதுபோன்ற விடயங்கள் பொதுவாக ஒரு சாதாரண நபரின் எண்ணத்தில் ஏற்படாது என்பதால், விரைவில் நிபுணர் ஒருவரின் ஆலோசனையைப் பெறுவது முக்கியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
திமிங்கலங்கள் பல சந்தர்ப்பங்களில் கடலில் கொண்டுவிடப்பட்டாலும், அவை மீண்டும் கரைக்குத் திரும்பின, இதனால் இரண்டு திமிங்கலங்களை சுமார் 10 கிலோமீற்றர் தூரத்திற்கு எடுத்துச் சென்று விடுவிக்க வேண்டியிருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
சில அலைகளைக் கடந்து சென்று வழிகாட்டினாலும், அவை பலவீனமடைந்துள்ளமையால் அலைகள் அவற்றைக் கரை நோக்கித் தள்ளுகின்றன எனக் குறிப்பிட்டுள்ள ஆஷா டி வொஸ், அவை ஆழ்கடலில் வழிநடத்தும் செயன்முறையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.
ஒக்டோபர் 3, செவ்வாய்க்கிழமை உயிரிழந்த நான்கு திமிங்கலங்கள் மற்றும் ஒரு டொல்பினின் உடல் கரையொதுங்கியது.
“நான் பார்த்துக்கொண்டிருந்த போது, ஒரு விலங்கு உயிரிழந்தது. அது சுவாசித்த துளையை நான் அவதானித்துக் கொண்டிருந்தேன். திமிங்கலம் இறந்துவிட்டதாக அறிவிக்கும் துரதிர்ஷ்டம் எனக்கு ஏற்பட்டது” என 2018 ஆம் ஆண்டு பிபிசியால் உலகின் மிகவும் பிரபலமான மற்றும் சக்திவாய்ந்த 100 பெண்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கலாநிதி ஆஷா டி வொஸ் தெரிவிக்கின்றார்.
அவை ஏன் தொலைந்து போகின்றன?
“எங்களுக்கு முழுமையாகத் தெரியாது. ஆனால் விஞ்ஞானிகள் இது மிகவும் நேசமான தன்மை காரணமாக ஏற்படுவதாக கருதுகின்றனர்” என தெரிவித்துள்ள, டி வொஸ்,
ஒரு விலங்கு அலைகளால் கரைக்குத் தள்ளப்பட்டால், ஏனையவைகளும் அதனைப் பின்தொடர்ந்து கரைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாகத் தெரிவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
“எனது அணியும் நானும் உதவ முடியும். இதைச் செய்ய எங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தான் நான் இருக்கின்றேன்” என அவர் கூறியுள்ளார்.
[email protected] மின்னஞ்சல் அல்லது @Oceanswell ட்விட்டர் தளத்தைப் பயன்படுத்தலாம்.
யுத்தப் பயிற்சிகள்
ஒக்டோபர் 3 முதல் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளால் வங்காள விரிகுடாவில் ஒக்டோபர் 3ஆம் திகதி முதல் நடத்தும் மூன்று நாள், மலபார் இராணுவப் பயிற்சியினால் ஏராளமான திமிங்கலங்கள் மற்றும் டொல்பின்கள் கரையொதுங்கியுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த பயிற்சியில் உலகின் முன்னணி படைகள் பயன்படுத்தும் பல ஆயுதங்கள் அடங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடற்படைப் பயிற்சிகளில் பயன்படுத்தப்படும் ஒலி அலைகளை வெளியிடும் சோனா இயந்திரங்கள், அத்தகைய விலங்குகளின் நடத்தையில் தடை ஏற்படுத்துவதோடு, உணவைத் தேடுதல், பயணத்தல், அவைகள் தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ளவும் அவைகள் ஒலியைப் பயன்படுத்துவதாகவும், எனினும் அதற்கு தடை ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச கடல்சார் நிபுணர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
யுத்தப் பயிற்சிக்கு முதல் நாள் திமிங்கலங்கள் கரையொதுங்கியதாகவும், சோனா இயந்திரத்தின் ஒலி காரணமாக திமிங்கிலங்கள் கடலுக்கு வெளியே வந்திருந்ததை காணக்கூடியதாக இருந்ததாக கலாநிதி ஆஷா டி வொஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். #நிபுணத்துவம் #கரையொதுங்கிய #திமிங்கிலங்கள் #கடல்உயிரியலாளர் #ஆஷாடிவொஸ்