தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து நாட்டில் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்துள்ளதாக வெளியாகும் தகவல்களை “தவறான செய்தி புனைகதை” என ஜனாதிபதி நிராகரித்த நிலையில், இந்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் சுற்றுச்சூழல் அழிவுக்கான பொறுப்பை அரச அதிகாரிகள் மீது சுமத்தியுள்ளார்.
புத்தளம் மாவட்டத்தில் சில தனிநபர்களின் செயற்பாடுகளால் அவ்வப்போது சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள், விவசாய அபிவிருத்தி அதிகாரிகள், சுற்றுச்சூழல் அதிகாரிகள் மற்றும் அபிவிருத்தி அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகள் பிராந்திய சேவைகளில் ஈடுபட்டு வருவதாகவும், எனினும் அந்த அதிகாரிகளின் திறமையின்மை மற்றும் அலட்சியம் காரணமாகவே இந்த விடயங்கள் இடம்பெறுவதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கமைய நாட்டின் அனைத்து சுற்றுச்சூழல் அதிகாரிகளையும் வரவழைத்து, அவர்கள் தங்கள் கடமைகளையும் பொறுப்புகளையும் சரியாக செய்கிறார்களா என்பது குறித்து, விசாரணை மேற்கொள்ளுமாறு மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபைக்கு, அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.
புலுதிவயல் – விருத்தோடை – முந்தல் பிரதேசத்தில் இரண்டு ஏக்கர் சதுப்புநிலம் அழிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வெளிப்படுத்தியிருந்தன.
இது குறித்து மத்திய சுற்றாடல் அதிகார சபை, மற்றும் முந்தல் பிரதேச செயலாளரிடம் விசாரணை மேற்கொண்ட அமைச்சர், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை உடனடியாக கைது செய்யுமாறு புத்தளம் தலைமையக காவல்துறையினருக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
“இந்த சதுப்புநில பிரதேசம் தனிநபரின் நிலம் என்பதோடு, இது இறால் வளர்ப்பிற்காக அழிக்கப்பட்டுள்ளமை விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.” என்பதை அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சதுப்புநில அமைப்பு அமைந்துள்ள நிலம் தனியார் நிலமாக காணப்பட்டாலும் சதுப்பு நிலங்களை அழிப்பது சட்டவிரோதமானது என்பதால் நபர் அல்லது நபர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அமைச்சர் கோரியுள்ளார்.
புத்தளம் சதுப்பு நில அழிவுக்கு அமைச்சர் அமரவீரா அதிகாரிகளை குற்றம் சாட்டினாலும், இந்த வருட ஆரம்பத்தில் பேரழிவிற்கு அரசியல்வாதிகள் துணை நிற்பதாக, அதிகாரிகள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
ஆளும் கட்சி அரசியல்வாதியின் ஆதரவுடன் ஈரநில பிரதேசம் ஒன்றை அழிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், கடந்த பெப்ரவரி மாதம் கம்பஹா மாவட்ட வனவள அதிகாரி தேவானி ஜயதிலக எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த ஊடக அறிக்கைகளை ஜனாதிபதி சமீபத்தில் மறுத்திருந்தார், இது “தவறான செய்திகளை உருவாக்குவதற்கும், சமூகமயமாக்குவதற்குமான ஒரு நடவடிக்கை” என அவர் குறிப்பிட்டார்.
எனினும், காடழிப்பு இடம்பெறுவதை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, ஜனாதிபதியின் சகோதரரும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்சவுடன் இணைந்து இதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அரசியல்வாதிகளின் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பின் கீழ் பல இடங்களில் சுற்றாடல் அழிவு நிகழ்வதாக எதிர்க்கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டுகிறது.
இந்சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்ற நிலையில், அமைச்சர் மஹிந்த அமரவீர, சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து தகவல்களை வழங்க நான்கு தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.
அமைச்சரின் தனிப்பட்ட தொலைபேசி இலக்கமான 0707-555666 இற்கு வட்ஸ்அப் தகவல், குறுந்தகவல் அல்லது காணொளிகளை அனுப்புமாறு அமைச்சர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் தகவல்களை வழங்க, சுற்றாடல் அமைச்சு – 1991, மத்திய சுற்றாடல் அதிகாரசபை – 1981, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் – 1921 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. #சுற்றாடல்பாதிப்பு #குற்றம் #அமைச்சர் #மஹிந்தஅமரவீர #கமல்குணரத்ன