கோத்தபாய அரசின் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் இன்று (2020.11.21) தமிழ்தேசிய மக்கள் முண்ணனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரை ஆற்றினார்.
அவரது உரையில் கூறிய உண்மைகளை சகித்துக்கொள்ள முடியாதா பேரினவாதிகள் கூச்சல் குழப்பமிட்டு உரையை குழப்ப முற்பட்டனர். பேரினவாதிகளின் குழப்பங்களை தாண்டி அவர் ஆற்றிய உரை வருமாறு
தமிழ் அரசியல் நாட்காட்டியில் மிக முக்கியமானதும் புனிதமானதுமான வாரத்தின் முதல் நாளில் எமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் தேசத்திற்காகவும் போராடி தமது உன்னதமான உயிர்களையே தியாகம் செய்த அந்த உன்னதமானவர்களுக்கு எமது தலைகளை சாய்த்து மரியாதைகளை தெரிவித்துகொண்டு எனது உரையை ஆரம்பிக்கிறேன்.
(இங்கு இந்த யுத்த குற்றவாளி சரத் பொன்சேக ஈனமான குரலில் சத்தம் போட்டு எனது உரையை குழப்புகிறார்.)
இந்த அரசு பதவியேற்றுக்கொண்ட போது , இந்த அரசு தமிழர்களின் தேசிய பிரச்சினை குறித்து தனது கரிசனையை செலுத்தும் என எதுவித போலியான நம்பிக்கைகளும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடம் இருந்திருக்கவில்லை.
தமிழ்த்தேசிய பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்த அரசுக்கு எதுவித திட்டங்களும் இல்லை என்பதிலும் எமக்கு சந்தேகம் இருதிருக்கவில்லை.
அது போல, இந்த அரசு மீது சுமத்தப்பட்ட யுத்தக்குற்றங்கள் குறித்த்தோ அல்லது அப்படியான குற்றங்கள் மீள்நிகழாமையை உறுதிப்படுத்துவது குறித்தோ இந்த அரசுக்கு ஏதாவது அக்கறை இருக்கும் என்பதிலோ நாம் சந்தேகம் கூட படவில்லை.
தற்போதைய காலகட்டத்தில் தமிழர்கள் முக்கியமானதாக கருதுகின்ற தமிழர்களுக்கான தீர்வு மற்றும் தமிழர் மீது இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறல் என்பவற்றிலோ இந்த அரசுக்கு ஏதாவது கரிசனை இருக்குமோ என்பதில் நாம் எதுவித சந்தேகமும் கொள்ளத்தேவையில்லாத அளவுக்கு அது வெளிப்படையானது .
அதேவேளை, இந்த நாட்டில் இனப்பிரச்சினை என்று எதுவும் கிடையாது , இங்கு இருக்கும் பிரச்சினைகள் அனைத்தையும் அபிவிருத்தி மூலம் தீர்த்துக்கொள்ள முடியும் என ஜனாதிபதியும் பிரதமரும் பல தடவைகள் கூறியிருந்தார்கள்.
அதனால் , இந்த அரசு சிலவேளைகளில் அபிவிருத்தியில் கரிசனை கொள்ளக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த முப்பது வருடங்களாக, இன்னும் சொல்லப்போனால் தமிழரசுக்கட்சி தமிழர் அரசியலில் செல்வாக்கு செலுத்த தொடங்கிய காலங்களில் இருந்து தமிழர் தரப்பில் இருந்து எவரும் அரசுடன் இணைந்து அமைச்சுபதவிகளை பெற்று தமது மக்களுக்கு சேவை செய்யாமையால், மக்கள் அபிவிருத்தி எதனையும் பெற்றிருந்திருக்கவில்லை என்றும் அது தான் தமிழர்களிற்கான பிரதான பிரச்சினையாக அமைந்தது என்றும் ஆதலால் தாங்கள் எமது மக்களிற்கான அபிவிருத்தியை வழங்குவார்கள் என்றும் , 30 வருட யுத்தத்தினால் அழிக்கப்பட்ட வடக்கு கிழக்கை மீளக்கட்டியெழுப்புவார்கள் என்றும் எம் மக்களின் பொருளாதாரம் வலுப்படுத்தப்படும் என்றும் வடக்கு கிழக்கு மக்கள் தம்மை மீளக்கட்டியமைத்து வாழ முடியும் என்றும் கூறிவந்தார்கள்.
முப்பது வருடகால போரினால் முற்றாக அழிக்கப்பட்ட வடக்கு கிழக்கு முற்றாக அழிக்கப்பட்டு, வடக்கு கிழக்கு மக்களின் பொருளாதாரம் முற்றாக சிதைக்கப்பட்டிருந்தது என்கிற உண்மையை ஏற்று ஆகக்குறைந்தது பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி போன்ற விடயங்களிலாவது இவர்கள் , போரினால் அழிக்கப்பட்ட வடக்கு கிழக்கின் தனித்துவமான பொருண்மிய பிரச்சினையையாவது அங்கீகரித்து ஏற்று நேர்மையாக செயற்படுவார்கள் எனும் எதிர்பார்ப்பு ஒன்று இருந்தது.
ஏறத்தாழ முப்பத்திரண்டு ஆண்டுகள் வடக்கு கிழக்கில் கொடுமையான பொருளாதார தடை அமுல்படுத்தப்பட்டிருந்தது . பொருளாதார தடையினால் வடக்கு கிழக்கில் ஒரு லீற்ற பெற்றோலின் விலை ஏறத்தாழ 1500 ரூபா வரை சென்றிருந்தது .
அதனால் , வடக்கு கிழக்கின் பொருளாதரத்தின் மிக முக்கிய கூறுகளான மீன்பிடித்தொழிலையோ விவசாயத்தையோ செய்ய முடியாத அளவுக்கு இந்த பொருளாதார தடை மூலம் முடக்கப்பட்டார்கள் .
வடக்கு கிழக்கின் பெரும்பகுதி விவசாய நிலங்கள் மக்களுக்கு அனுமதியற்ற பிரதேசங்களாக ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது .
உதாரணமாக இங்கே இப்போது இருக்கின்ற சரத்பொன்சேக யாழ் மாவட்டத்தளபதியாக இருந்தகாலப்பகுதியில் யாழ்மாவட்டத்தின் ஏறத்தாழ 30 வீதமான பகுதிகளை உயர்பாதுகாப்பு வலயம் எனும் பெயரில் இராணுவம் தனது கட்டுப்பாடின் கீழ் ஆக்கிரமித்து வைத்திருந்தது .
(இந்த வேளையில் யுத்தக்குற்றவாளி சரத் பொன்சேகா மீண்டும் குறுக்கிட்டார். அதற்கு உங்களது பதில் ஒன்றும் இங்கு தேவையில்லை, இது எனக்குரிய நேரம், நான் சொல்வதைகேட்டுக்கொண்டு அமைதியாக உட்காரவும் என கஜேந்திரகுமார் கூறி அவரது குறுக்கீட்டை மீறி தன் உரையைதொடர்ந்தார் )
இந்த முப்பது வருட கால யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போது, இந்த நாட்டில் நிலவிய தமிழர்களின் பிரச்சினை தொடர்ந்தும் இருந்தது என்பதையும் அரசும் இராணுவமும் மிக கொடூரமான குற்றங்கள் இழத்திருந்தார்கள் எனும் குற்றசாட்டையும் ஒரு விவாதத்திற்காக ஒரு புறம் வைத்து விட்டு , ஆகக்குறைந்து வடக்கு கிழக்கின் பொருளாதாரத்தையாவது கட்டியெழுப்புவார்கள் என பார்த்தால் , அதுவும் நடக்கவில்லை .
குறிப்பாக இந்த நாட்டில் இனப்ப்பிரச்சினை என்பது இல்லை, பொருளாதார பிரச்சினைதான் அனைத்துக்கும் அடிப்படை என சொல்லிக்கொள்ளுகின்ற இந்த அரசாங்கம் வடக்கு கிழக்கு மக்களின் பொறுளாதார அபிவிருத்தியை கூட புறம்தள்ளியிருக்கிறது.
அபிவிருத்தி என வரும்போது, போரினால் அழித்தொழிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேசத்தை தனித்துவமாக அணுகுவதற்கு ஏன் இந்த அரசு மறுதலிக்கிறது ?
போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசம் என வடக்கு கிழக்கை அறிவித்து அங்கே வசிக்கின்ற மிக மிக பாதிப்புக்குள்ளான நலிவுற்ற மக்களையும் அவர்களின் பொருண்மியத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க ஏன் இந்த அரசு பின்னிற்கிறது ?
அதன் மூலம் எதிர்காலத்திலாவது அவர்கள் தமது வாழ்வை நிலை நிறுத்திக்கொள்ள முடியும் ?
ஆனால் ஏன் அதை நீங்கள் செய்யவில்லை ? அது குறித்து அஞ்சுகிறீர்கள்? அந்த மக்கள் முனேறிவிடுவார்கள் என்றா?
தம்மை ஒரு இடது சாரிப்பின்புலமுடையவர்கள் என காட்டிக்கொள்ளும் இந்த அரசு ஏன் அதை செய்ய பின்னடிக்கிறது ?
பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட மக்களை விசேடமாக கவனிக்கப்பட்டு பராமரிக்கப்படவேண்டும், அழிவுறக்கூடியபொருளாதாரங்கள் பாதுகாக்கப்பட்டு கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பது இடது சாரி தத்துவத்தின் மிகமுக்கிய அம்சம் . இங்கு அமர்ந்திருக்கிற இடது சாரி என அழைத்துக்கொள்ளும் திரு வாசுவ்தேவ நாணயக்கார இதை நன்கு தெரிந்து வைத்திருப்பார் என நம்புகிறேன் .
முப்பது வருடம் போரை எதிர்கொண்டு அழிக்கப்பட்டு நலிவுற்ற வடக்கு கிழக்கு மக்களின் பொருளாதாரம் பாதுகாக்கபட்டு கட்டியெழுப்பப்படிருக்க வேண்டும் என்பதை உள்ளளவில் இடது சாரியாக கருதிக்கொள்ளும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவாவது உறுதிப்படுத்தியிருக்க வேண்டும்.
ஆனால் அதுகூட நடைபெற்றிருக்கவில்லை .
தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வை காணுதல், யுத்தம் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் என்பவற்றோடு , அபிவிருத்தி எனும் அம்சத்திலும் இந்த அரசு தோல்வியடைந்திருக்கிறது.
முப்பது வருடம் போரினால் அழிக்கப்பட்ட மக்களின் ஒடுக்கப்பட்ட பொருளாதாரமானது நாட்டின் போர் பாதிப்புற்ற ஏனைய பாகங்களின் பொருளாதராத்தோடு சரிசமமாக போட்டிபோடவேண்டும் என எவ்வாறு நீங்கள் எதிர்பார்க்க முடியும் ?
உண்மையில் இந்த அரசு வடக்கு கிழக்கில் வறுமையையே நிலை நிறுத்தவே எத்தனிக்கிறது .
வடக்கு கிழக்கு மக்களை தொடர்ந்தும் வறுமையின் பிடிக்குள் வைத்திருக்க வேண்டும் என்றே இந்த அரசுவிரும்புகிறது .
இந்த மக்களை தொடர்ந்தும் பொருளாதாரத்தில் நலிவுற்ற நிலையிலும் வறுமைக்குள்ளும் வைத்திருப்பதன் மூலம் வடக்கு கிழக்கு மக்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய சுழல் நிலையை தக்க வைக்கவே இந்த அரசு முயல்கிறது என்பதை இங்கு பொறுப்புடன் கூறிக்கொள்ளுகிறேன்.
உண்மையில் இடது சாரிய எண்ணம் கொண்ட எந்த ஒரு பிரக்ஞைபூர்வமான அரசும் பாதிக்கப்பட்ட வறுமைக்குட்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து அவர்களின் சொந்த நிலத்தில் அந்த மக்களின் நிலைத்திருப்பிற்கு முன்னுரிமை கொடுக்குமேயன்றி மக்களின் நிலைக்கு சம்பந்தமற்ற உட்கட்டமைப்பின் வீக்கமுற்ற அபிவிருத்தியை அல்ல.
உண்மையில் பொருளாதார ரீதியில் நலிவுற மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கும் அவர்களது வாழ்வாதார்த்தை மேம்படுத்தி அவர்களின் சொந்த மண்ணில் அவர்களின் இருப்பை உறுதிப்படுத்துவதற்கும் முக்கியத்துவம் கொடுப்பதை விடுத்து , மக்களின் தேவையை பூர்த்தி செய்யாது , மக்களின் யதார்த்த நிலைக்கு தொடர்பற்ற வகையில் உட்கட்டமைப்பு குறித்த அபிவிருத்திகளையும் வீதிகளையும் பல பில்லியன் கணக்கில் அரசு செய்வதற்கு காரணமே, வறுமைக்குட்பட்ட அந்த நிலத்தின் சொந்த மக்கள் , வாழ்வாதர உறுதிப்படுத்தல் இன்மையால் அங்கிருந்துவெளியேற நிர்பந்திக்கப்படும் போது சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வற்கே ஆகும் .
இந்த நாட்டில் இருக்கும் ஒவ்வொரு அங்குள்ள நிலத்தையும் விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும் என நிதியமைச்சர் கேட்டிருந்தார்.
அது உண்மையில் நியாயமானது . போரால் பாதிக்கப்பட்ட மக்கள் மெல்ல மெல்ல இப்போது தான் மீளெழுந்து வருகிறார்கள் .
ஆனால் அந்த மக்கள் திட்டமிடப்பட்ட கட்டமைக்கப்பட்ட வகையில் அவர்களின் சொந்த நிலங்களில் இருந்து இப்போதும் விரட்டப்பட்டு வருகிறார்கள் . ஒவ்வொரு அங்குள்ள நிலத்தையும் விவசாயத்துக்கு பாவிக்கவேண்டும் என்பதை கொள்கையாக பேசும் இந்த அரசு ஏன் அந்த மக்களின் சொந்த நிலத்தை பயன்படுத்துவதை அனுமதிக்க மறுத்து அவர்களை விரட்டியடக்கிறது.?
( இதை தொடர்ந்து அரச தரப்பு எம்பிக்களின் கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் கஜேந்திரகுமார் அவர்களின் உரைநிறைவுக்கு கொண்டுவரப்பட்டது )
அத்துடன் இறுதியில் நடைபெற்ற வரவு செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பில் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் செயலாளர் செல்வராசா கஜேந்திரனும் எதிர்த்து வாக்களித்ததார்கள்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (TNPF)
#கஜேந்திரகுமார்பொன்னம்பலம் #தமிழ்த்தேசிய மக்கள்முன்னணி