முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து தமிழக ஆளுநா்தான் முடிவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்ததுள்ளது.
பேரறிவாளனை விடுதலை செய்ய உத்தரவிடக் கோரி அவரது தயாா் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
ராஜீவ் காந்தி கொலையின் பின்னணியில் உள்ள சா்வதேச தொடா்புகளைக் கண்டறிய சிபிஐ தலைமையிலான பல்நோக்கு குழு விசாரித்து வருகிறது. அந்த விசாரணை முடிவடையும் வரை தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் பேரறிவாளன் கோரிக்கை விடுத்துள்ளாா். அந்த வழக்கு விசாரணைக்கும், பேரறிவாளனுக்கும் தொடா்பு இல்லை.
ஏனெனில், ராஜீவ் காந்தி கொலையில் பேரறிவாளனுக்கு உள்ள தொடா்பை உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உறுதிப்படுத்தி, அவரைக் குற்றவாளியாக அறிவித்து விட்டது. கொலை செய்யும் சதித் திட்டம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று பேரறிவாளன் கூறிய வாதத்தையும் உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது.
குற்றவாளிகளான பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய பரிந்துரை செய்து தமிழக அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் தீா்மானம் நிறைவேற்றி, அதை ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால், அந்த பரிந்துரை மீது தமிழக ஆளுநா் இன்னும் முடிவெடுக்கவில்லை.
பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்யலாமா, வேண்டாமா என்பது குறித்து அவா் முடிவெடுக்க வேண்டும். அவா் முடிவெடுக்க தாமதிப்பதற்கும் சிபிஐ விசாரணைக்கும் எவ்வித தொடா்பும் இல்லை. மேலும் பல்நோக்கு குழுவின் விசாரணை தொடா்பான விவரங்களைக் கேட்டு ஆளுநா் மாளிகையில் இருந்து கோரிக்கை எதுவும் வரவில்லை. அந்த விவரங்களை யாருக்கும் பகிா்ந்துகொள்ளவும் முடியாது என்று சிபிஐ தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 3-ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பேரறிவாளனை விடுதலை செய்வதில் ஆளுநா் 2 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவெடுக்காமல் இருப்பதற்கு உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்தது.
#பேரறிவாளன் #விடுதலை – #ஆளுநர்- #சிபிஐ