நவீன கல்வி என்று சொல்லப்படும் காலனியக் கல்வியில் வளர்ந்தவர்கள் பல தந்தையர்களைக் கண்டு வந்தவர்களாக இருப்பர். நவீன அறிவியலின் ஒவ்வொரு துறையிலும் அதன் தந்தையென ஒருவர் நிலை நிறுத்தப்பட்டிருப்பர். இவர்கள் எல்லோருமே மேற்கு ஐரோப்பியர்களாகவும் அமெரிக்கர்களாகவுமே இருப்பர்.
இங்கு தாய் ஒருவரையுமே காண முடியாது. நவீனமானது என்று காலனியம் கட்டிய அறிவுலகம் ஆண்மயமானது. ஆணாதிக்கமானதுங்கூட, ஆய்வு கூடங்களில் பெண்கள் விலக்கப்பட்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள். கீழைத்தேய மதங்களில் பெண்களது மாதவிடாய்?! யைக் காரணங்காட்டி ஆலய வழிபாடுகளிலிருந்து பிரிக்கப்பட்டமை போன்று மறு உற்பத்தி அல்லது கருவுறல், குழந்தை உருவாக்கத்தை முன்வைத்து ஆய்வு கூடங்களில் இருந்து விலக்கி வைத்தல் நடைமுஐறயாக இருந்திருக்கிறது.
இந்த வகையில் நவீன அறிவியலானது மேற்கு ஐரோப்பிய மையப்பட்டதும் ஆணாதிக்கம் நிறைந்ததாகவும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. என்பது விவாதத்திற்குரிய விடயமல்ல. இவைபற்றிய உரையாடல்கள், ஆய்வுகளை நிறையவே காணலாம்.
அறிவியலின் தொடக்கத்தை தந்தையருடன் கட்டமைக்கும் நவீன அறிவியல் பொருளாதாரத்தில் பெண்களின் குடும்பம் சார்ந்த உழைப்பை பெறுமதி அற்றதாகவே வைத்திருக்கிறது.
Nயி என்பது நின்ற நிலையில் குட்டித்தூக்கம் போடுவது எனப்படுகிறது. இதுகூட நெப்போலியன் நின்ற நிலையில் குட்டித்தூக்கம் போடுவதிலிருந்து தோற்றம் பெற்றதாக நவீன வழக்காறுகளையும் உற்பத்தி செய்வதும் நவீன அறிவியலின் பாற்பட்டதாகக் காணப்படுகிறது.
இவ்வாறுதான் நவீன அறிவியல் கற்றுத்தரும் தந்தையர்கள் கதையும் இத்தகைய தந்தையர்களுக்கு முன் வரலாற்றில் பல்வேறு துறைகள் சார்ந்தும் மக்களது வாழ்வு எவ்வாறு முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கிறது.
மேற்கு ஐரோப்பாவுக்கு வெளியே மனிதருக்கு வாழ்வும் வரலாறும் அறிவியல் இயக்கமும் இருந்ததில்லையா? என்ற கேள்விகள் ஏன் எழவில்லை என்பது கேள்வியாக இருக்கிறது. எழுப்பப்பட்ட கேள்விகள் எவ்வாறு அடக்கப்பட்டன அல்லது கேள்வி எழுப்ப முடியாத நிலை எவ்வாறு உருவாக்கி வைக்கப்பட்டிருக்கிறது?
இந்த இடத்திற்தான் உள்ளூர் அறிவு முறைகளை விஞ்ஞானபூர்வமற்றவை என நிராகரித்தும்: அறிவுசார் ஆளுமைகளை சூனியக்காரர் எனப்புனைந்து அழித்தொழிப்புக்களைச் செய்ததையும் பற்றி கூர்ந்து கவனிப்பதும், ஆழ்ந்து யோசிப்பதும் அவசியமானதாக இருக்கிறது.
இத்தகைய நிலைப்பாட்டைத்தான் காலனித்துவ நீக்கத்துக்கான சிந்தனையும் நடைமுறையுமென முன்னெடுக்கப்படுகின்றது. பின்காலனியவாதம், பின்நவீனவாதம் என்பவை மேற்படி விடயங்களை கேள்விக்குட்படுத்துவதாக இருந்தாலும், அவை நவீன ஆதிக்க அறிவுக்கட்டமைப்பிற்குள்ளும் அதன் முறைமைக்குள்ளும் இருந்து உருவாகியதன் காரணமாக அவற்றை காலனிய நீக்க வாதிகள் பெரிதும் ஏற்றுக்கொள்வதில்லை.
நவீன அறிவு முறைமைக்குள் இருந்து விடுவித்துக்கொண்டு காலனியத்திற்கு முன்னான பாரம்பரிய, உள்ளூர், பூர்வீக அறிவு முறைமைகளுடன் தொடர்புபடுத்திக் கொள்வது மூலமாகவும் உலகந்தழுவிய பல்வேறு அறிவுமுறைமைகளை அறிந்து கொள்வதன் வாயிலாகவும் புதிய சூழல், புதிய நிலைமைக்கான அறிவுருவாக்கம் பற்றி உரையாடுகிறது.
இத்தகைய உரையாடல் ஈழத்துச் சூழலிலும் மிகவும் அவசியமானதாகக் காணப்படுகிறது. எனினும் காலனியத்தையும், நவகாலனியத்தையும் கண்மூடித்தனமாகக் கொண்டாடுவதே யதார்த்தமாக இருக்கிறது.
உள்ளூர் அறிவு முறைமைகள் பற்றிய நேரடிக் காலனிய காலக் கருத்தாக்கமே நவீன அறிவியற் சூழலுக்குரியதாக இருக்கிறது. இதில் மருத்துவம், விவசாயம் தொட்டு மொழி சமயம் என எதுவும் விதிவிலக்கல்ல.
வாழ்வியல் மையங்களாகவும், வரலாற்று மூலங்களாகவும் திகழ்கின்ற உள்ளூர் வழிபாட்டு மரபுகள் அழிக்கப்பட்டு அந்த இடத்தில் பிறமொழியும் அந்நிய நம்பிக்கையும் கட்டமைக்கப்படுவது நவீன வாழ்வியலில் நவீன அறிவியலின் பாற்பட்டதாக இருக்கிறது.
உலகப்பரப்பில் பல்வேறு துறைகளிலும் வாய்மொழி மரபுகளும் உள்ளூர் அறிவு முறைமைகளும் உரையாடலுக்கும் பயன்பாட்டுக்கும் கொண்டுவரப்பட்டிருக்கிற சூழ்நிலையில் நவீன அறிவு என்ற பெயரில் காலனியம் கட்டமைத்த சிந்தனையால் வழிநடத்தப்படுபவர்களாகவே இன்னமும் இருந்து வருகின்றோம்.
இந்த நிலவரம் முழு இலங்கைக்கும் இலங்கையில் வாழும் எல்லாச் சமூகங்களுக்கும் பொருந்துவதாக இருக்கும். இத்தகையதொரு நிலையின் பாரதூரத்தன்மையை புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருப்பதுமன்றி ஐந்தாம் தர புலமைப்பரிசில் கற்கை போன்ற அதன் வக்கிர நிலைகளைக் கொண்டாடுபவர்களாக இருப்பதன் சமூக மற்றும் தனியாள் உளவியல் ஆராயப்பட வேண்டியதாக இருக்கிறது.
விடுதலை பற்றி நீண்ட காலமாக உச்சரித்து உச்சரித்து வரும் சமூகங்கள் இந்தப் புரிதல் அற்று இருப்பதும், வக்கிரத்தை பெருமிதமாகக் கொண்டாடுவதும் ஆபத்தானவை அன்றி வேறென்னவென்று கூறமுடியும்?!