கொரோனா தொற்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், போதனா வைத்தியசாலைகளில் நிலவும் 89 விசேட வைத்திய நிபுணர்களுக்கான வெற்றிடங்கள் தொடர்பில், அரசுக்கு நெருக்கமான வைத்திய சங்கம், பொது சேவை ஆணைக்குழு மீது குற்றம் சாட்டியுள்ளது.
கண்காணிப்பு கொள்கைகளுக்கு முரணாக இடமாற்றங்களை தாமதப்படுத்தும் தேவையற்ற தலையீடுகளை பொது சேவை ஆணைக்குழு மேற்கொண்டதால் இந்த துரதிர்ஷ்டவசமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
பொது சேவை ஆணைக்குழு மேற்கொண்ட பின்வரும் மூன்று நடவடிக்கைகள் காணமாக, விசேட வைத்திய நிபுணர்களுக்கான பற்றாக்குறைக்கு வழிவகுத்துள்ளதாக, சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஷெனால் பெர்னாண்டோ கையெழுத்துடன், நவம்பர் 24ஆம் திகதி செவ்வாயன்று வெளியான ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வெற்றிடங்களை தனித்தனியாக நிரப்பாமல் 89 வெற்றிடங்களுக்கும் ஒரே பட்டியல் ஊடாக நிரப்புவதாக பொது சேவை ஆணைக்குழு அறிவித்தமையால் வெற்றிடங்களை நிரப்ப முடியவில்லை.
- பல பதவிகளில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை தெளிவாக இல்லை மற்றும் வெற்றிடங்களுக்கான பட்டியலில் ஒப்புதல் பெறக்கூடிய பதவிகளுக்கு கூட ஒப்புதல் அளிக்கப்படவில்லை.
- இடமாற்றக் கொள்கையில் குறிப்பிடப்படாத, இடமாற்றக் குழுவில் உள்ளடங்காத, ஒரு குழுவை நியமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வைத்திய சேவைகள் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட இடமாற்றக் கொள்கையின்படி விசேட வைத்தியர்களின் நியமனங்கள் இடம்பெறும் என வைத்தியர் ஷெனல் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இடமாற்றக் கொள்கையை அமுல்படுத்துவதற்கான பொறுப்பு சுகாதாரத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது எனவும், இடமாற்றக் கொள்கையை கண்காணிக்கவும் ஒப்புதல் அளிக்கவும் பொது சேவை ஆணைக்குழு பொறுப்பாக காணப்படுவதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்யப்படும் விசேட வைத்தியர்கள் மற்றும் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்யப்படாத விசேட வைத்தியர்கள் என இரண்டு வகையான நியமனங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், தகுதி அடிப்படையில் இந்த அனைத்து பதவிகளுக்கும் விண்ணப்பிக்கவும் நியமிக்கவும் ஒரு வெளிப்படையான நடைமுறை காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
”இடமாற்றம் செய்யப்படாத (End Post) பதவிகளில் பணிபுரியும் விசேட வைத்திய நிபுணர்கள் போதனா வைத்தியசாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளதோடு அந்த வெற்றிடங்கள் இடமாற்றக் கொள்கைக்கு அமைய நிரப்பப்பட வேண்டும்,” எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#பொதுச்சேவைஆணைக்குழு #விசேடவைத்தியநிபுணர்கள் #கொரோனாதொற்று