Home இலக்கியம்அந்தச் சிறுவர்கள் வளர்ந்து வந்துவிட்டனர்!

அந்தச் சிறுவர்கள் வளர்ந்து வந்துவிட்டனர்!

by admin

பள்ளிக்கூடக் கதிரைகளில் இருந்து
அதிகாரபீடக் கதிரைகளுக்கு
அந்தச் சிறுவர்கள் வளர்ந்து வந்துவிட்டனர்.

அருகருகாயிருந்தும்
வெளிச்சக் கூடையும் கார்த்திகை விளக்கையும்
இனங்காண முடியாதபடியே
அந்த சிறுவர்கள் வளர்ந்து வந்துவிட்டனர்.

குறுக்குப் பட்டம் வைத்து
சோளக்காட்டுப் பொம்மை கட்ட
வைத்த அச்சில்,
பொம்மையைக் காணாக் குருசை கண்டவர்
குமுறினர்.
சோளக்காட்டுப் பொம்மையின்
கட்டுமானமறியாப் புலமைப்பரிசில் வென்ற
அந்த சிறுவர்கள் வளர்ந்து வந்துவிட்டனர்.

புதைப்பதற்கும் எரிப்பதற்குமெனக்
கட்டப்பட்ட நம்பிக்கைச் சிதைப்பின்
வலியுணரா
அந்தச் சிறுவர்கள் வளர்ந்து வந்துவிட்டனர்.

ஒரே வெளியில் சிறியதான ஒரே வெளியில்
வாழ்ந்திருந்தும் அருகருகே வாழ்ந்திருந்தும்
மழுங்கடிப்பட்ட அறிவு கண்களுடன்
பள்ளிக்கூட கதிரைகளில் இருந்து
அதிகாரபீடக் கதிரைகளுக்கு
அந்தச் சிறுவர்கள் வளர்ந்து வந்துவிட்டனர்.
சி.ஜெயசங்கர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More