புரெவி சூறாவளி முல்லைத்தீவு மற்றும் திருகோணமலைக்கு இடையில் தரையை தட்டி நேற்று (02.12.20) இரவு 8.45 மணியளவில் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
புரெவி சூறாவளி காரணமாக முல்லைத்தீவு பகுதியில் 224 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் ஒட்டுசுட்டான் பகுதியில் 202 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
அத்துடன் பதவி சிறிபுர பகுதியில் 199 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் உடையார்கட்டு பகுதியில் 190 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் வெலி – ஓய பகுதியில் 186 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சூறாவளியின் தாக்கத்தினால் முல்லைத்தீவில் பலத்த காற்றுடன் கூடிய கடும் மழை பெய்து வருவதுடன் கனகாம்பிகைக்குளத்தின் நீர் மட்டம் 6 அடியாக உயர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்கள் கொக்குத்தெடுவாய் மகாவித்தியாலயம், கருநாட்டுக்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை உள்ளிட்ட இடைத்தங்கல் முகாம்களில் தற்காலிக தங்கியுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் 2058 குடும்பங்கள் புரெவி புயினால் பாதீப்பு.
வங்கக்கடலில் உருவான புரெவி புயல் காரணமாக மன்னார் மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்து வரும் நிலையில் மாவட்டத்தில் உள்ள 5 பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் 2 ஆயிரத்து 58 குடும்பங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 888 நபர்கள் பாதீக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு பாதீக்கப்பட்டவர்களில் 950 குடும்பங்களைச் சேர்ந்த 3045 நபர்கள் 15 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஏனையவர்கள் உறவினர்கள் மற்றும் தமது வீடுகளில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதீக்கப்பட்டு நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கான சமைத்த உணவுகளை வழங்க பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அலுவலகர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காற்றுடன் கூடிய மழை காரணமாக வெள்ள நீர் வீடுகளுக்குள் சென்றுள்ளமையினாலும், வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளமையினாலும் மக்கள் இவ்வாறு பாதீக்கப்பட்டுள்ளனர்.
மேலும் காற்று மற்றும் மழை காரணமாக தலைமன்னார் ஊர்மனை, தலை மன்னார் பியர், பேசாலை ,விடத்தல்தீவு, சாந்திபுரம் மற்றும் சௌத்பார் ஆகிய கிராமங்களில் உள்ள மீனவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
குறித்த புயல் தாக்கத்தினால் மீனவர்களின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான படகு உற்பட கடற்தொழில் உபகரணங்கள் சேதமாகி உள்ளன.
மேலும் தலை மன்னார் பியர் கடற்கரையோரப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள் சில காணாமல் போயுள்ளதுடன் , படகுகள் வாடிகள் , மீன்பிடி உபகரணங்கள் சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துளள்னர்.
பேசாலை பகுதியில் 100க்கும் அதிகமான படகுள் கரையில் ஒதுக்கப்பட்டு உடைந்து சேதத்திற்குள்ளாகியுள்ளன.
மீனவர்களின் வாடிகளும் சேதமாகி உள்ளன. வலைகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
யாழ். மாவட்டத்தில் புரெவி புயலால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள்..
தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மாழை மற்றும் காற்று காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது வரை 756 குடும்பங்களை சேர்ந்த 2,941 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அத்தோடு காணாமல் போன மூன்று நபர்களில் இருவர் வீடு திரும்பியுள்ளதாகவும், 4 நபர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாகவும், ரீ.என்.சூரியராஜா தெரிவித்தார்.
மாவட்டத்தில் 15 வீடுகள் முழு அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், 153வீடுகள் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதுவரை 5 இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக சண்டிலிப்பாய், சாவகச்சேரி, பருத்தித்துறை, தெல்லிப்பழை மற்றும் வேலணை ஆகிய பகுதிகளிலேயே குறித்த இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா அறிவித்துள்ளார்.