மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் விவசாயிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே இதுவரை நடந்த 5 சுற்று பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்பதனால் டெல்லியை முற்றுகையிட்டுள்ள பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்டம் இன்று 13-வது நாளாக நீடித்தது.
விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நாளை (புதன்கிழமை) மீண்டும் 6-வது முறையாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இந்தநிலையில் புதிய திட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) “பாரத் பந்த்” என்ற பெயரில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.
இந்த போராட்டத்துக்கு பல்வேறு கட்சிகள், தொழிற்சங்கள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் இன்று காலை அறிவித்தப்படி நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், கேரளா, ஜார்க்கண்ட், ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், சத்தீஷ்கர் மற்றும் புதுச்சேரி ஆகிய 11 மாநிலங்களில் முழு அடைப்பு போராட்டம் முழுமையாக இருந்தது எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான மாநிலங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததுடன் வாகன போக்குவரத்துக்களும் நிறுத்தப்பட்டு இருந்ததாக தொிவிக்கப்பட்டுள்ளது.
13-வது நாளாக டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் விவசாயிகள் தங்களது போராட்டத்தில் அரசியல் கலப்பு இல்லாமல் அமைதியாக இருக்க வேண்டும் என நடவடிக்கை எடுத்து இருந்தனர்.
டெல்லியில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக காவல்துறையினா் அனைத்து எல்லை நிலை பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
அதேவேளை குஜராத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதனால் போராட்டம் நடத்த வந்த விவசாயிகள், அரசியல் கட்சி தலைவர்கள் உடனுக்குடன் கைது செய்யப்பட்டுள்ளனா் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல சமூக சேவகர் அன்னாஹசாரே விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து இன்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள 10 நிமிட ஓடியோ பதிவில், “விவசாயிகள் தங்கள் உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ள இதுவே சரியான நேரம்” என்று தெரிவித்து உள்ளார்.
விவசாயிகளின் போராட்டம் காரணமாக பெரும்பாலான மாநிலங்களில் கணிசமான அளவுக்கு கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. தமிழ்நாட்டில் சுமார் 400 இடங்களில் விவசாயிகளும், எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
மதியம் 3 மணி வரை சாலைமறியல் நடக்கும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர் என்ற போதிலும் இன்று மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நீடிக்கும் என்று விவசாய அமைப்புகள் அறிவித்து உள்ளன. #மத்தியஅரசு #வேளாண்சட்டங்கள் #விவசாயிகள் #போராட்டம் #பேச்சுவார்த்தை #அன்னாஹசாரே